Last Updated : 14 Oct, 2018 06:59 PM

 

Published : 14 Oct 2018 06:59 PM
Last Updated : 14 Oct 2018 06:59 PM

‘குஜராத் கலவரத்தின் போது, அரசமைப்புச்சட்டம் 355 பிரிவு ஏன் பயன்படுத்தப்படவில்லை?’: ஹமீது அன்சாரி சரமாரிக் கேள்வி

2002-ம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரம் கட்டுக்கடங்காமல் சென்றபோது,அங்கு அப்போதைய மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் இருந்தபோதிலும்கூட ஏன் அரசமைப்புச் சட்டம் 355 பிரிவு அமல்படுத்தப்படவில்லை என்று முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசமைப்புச் சட்டம் 355 பிரிவு என்பது வெளிநாட்டு ஆக்கிரமிப்பு, உள்நாட்டுக் கலவரம், பிரச்சினை, குழப்பம் ஆகியவற்றால் மாநிலஅரசு கட்டுப்படுத்த முடியாமல் போகும்போது மத்திய அரசு தலையிட்டு அதைக் கட்டுப்படுத்தி மாநில அரசைப் பாதுகாப்பதாகும். ஆனால், இந்த சட்டப்பிரிவை மாநிலஅரசுகள் பெரும்பாலும் விரும்புவதில்லை.

குஜராத் கலவரத்தை அடக்க அனுப்பப்பட்ட ராணுவ லெப்டினென்ட் ஜெனரல் ஜமீர் உதின் ஷா தற்போது ஓய்வு பெற்றுள்ளார். இவர் “தி சர்காரி முசல்மான்” என்ற புத்தகம் எழுதியுள்ளார். இதில் தன்னுடைய பதவிக்காலத்தில் சந்தித்த பல்வேறு விஷயங்களைக் குறிப்பிட்டுள்ளார். இதில் குஜராத் கலவரமும் முக்கியமானதாகும்.

இந்த தி சர்காரி முசல்மான் என்ற புத்தக வெளியீட்டு விழா டெல்லியில் நேற்று நடந்தது. இந்தப் புத்தகத்தை முன்னாள் குடியரசு துணைத்தலைவர் ஹமீது அன்சாரி வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் ஹமீது அன்சாரி பேசியதாவது:

2002-ம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரம் கட்டுக்கடங்காமல் சென்றபோது,அங்கு அப்போதைய மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் இருந்தபோதிலும்கூட ஏன் அரசமைப்புச் சட்டம் 355 பிரிவு அமல்படுத்தப்படவில்லை என்பது தெரியவில்லை.

பொதுவாக உள்நாட்டுக் கிளர்ச்சிகள் ஏற்படும்போது அதைக் கட்டுப்படுத்துவதற்கு ராணுவத்தால் முடியாதபோது, மக்களின் மனங்களை வெல்வதன் மூலம் அதைக் கட்டுப்படுத்த முடியும்.

குஜராத்தில் கலவரம் நடந்தபோது, அதை கட்டுப்படுத்தாமல் அங்கிருந்த அரசு நிர்வாகம் மெத்தனமாக இருந்தது. ஊடரங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டனவே தவிர அமல்படுத்தப்படவில்லை. அமைதியை ஏற்படுத்தும் குழுக்கள் உருவாக்கப்பட்டன, ஆனால்,கூட்டங்கள் ஏதும் நடத்தப்படவில்லை. போலீஸார் மிகவும் பாரபட்சத்துடன் நடந்து கொண்டனர் என்று இந்தப் புத்தகத்தை படித்தபின் நான் தெரிந்து கொண்டேன்.

குஜராத் கலவரத்தின் போது அரசியல் தலைமைகளின் பங்கு என்ன என்பது குறித்து இந்த புத்தகம் குறிப்பிடாமல் அமைதியாக இருந்துவிட்டது.

சட்டம் மற்றும் ஒழுங்கு தோல்வி அடைந்த நேரத்தில், அதற்குப் பதில் அளிக்க போலீஸ் நிர்வாகம், அரசு நிர்வாகம் தவறினால், நாடாளுமன்ற, ஜனநாயக அமைப்பு முறையில் பொறுப்பு வேறு யாரிடம்தான் இருக்கும்?

மாநிலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு சீர்குலைந்து, உள்நாட்டுக் கிளர்ச்சி அதிகமாகும் போது, மத்திய அரசு தலையிட்டு ஏன் அரசமைப்புச்சட்டம் 355 பிரிவை ஏன் அப்போது நடைமுறைப்படுத்தவில்லை. அப்போது, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்ணான்டஸ் குஜராத்தில்தான் இருந்தார்.

உள்நாட்டுக் கிளர்ச்சி, வெளிநாட்டு ஆக்கிரமிப்பு ஆகியவற்றின்போது, மாநிலஅரசை காக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசின் கடமை.

குஜராத்தில் நடந்த கலவரம் தேசிய அளவில், சர்வதேச அளவில் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தது. தேசியமனித உரிமை ஆணையம் கூட இது குறித்து அக்கறை எடுத்துப் கவனித்தது.

கடந்த 2005-ம் ஆண்டில்,மலையாளத்தில் ஒரு வாரஇதழுக்கு முன்னாள் குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன் பேட்டி அளித்தார். அதில் அவர், “ தனக்கும், அப்போது அரசுக்கும் இடையிலான அதிருப்தியை அதில் வெளியிட்டிருந்தார். அதாவது, குஜராத் கலவரத்தைக் கட்டுப்படுத்த ராணுவம் அங்கு அனுப்பப்பட்டது ஆனால், சுடுவதற்கு எந்தவிதமான அதிகாரமும்அளிக்கப்படவில்லை. குஜராத் கலவரத்துக்கு பின்புலத்தில் மத்திய அரசும், மாநில அரசும் சதியில் ஈடுபட்டுள்ளன என்று தெரிவித்திருந்தார்.

இவ்வாறு ஹமீது அன்சாரி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x