Last Updated : 12 Oct, 2018 08:43 AM

 

Published : 12 Oct 2018 08:43 AM
Last Updated : 12 Oct 2018 08:43 AM

5 மொழிகளில் உருவாகும் ‘வீரமாதேவி’ திரைப்படத்தில்  சன்னி லியோன் நடிக்க கன்னட அமைப்பினர் எதிர்ப்பு: பெங்களூரு ஆர்ப்பாட்டத்தில் உருவ பொம்மை எரிப்பு

நடிகை சன்னி லியோன் ‘வீரமாதேவி’ திரைப்படத்தில் நடிக்க கன்னட அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பெங்களூருவில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் அவருடைய உருவ பொம்மையை தீவைத்து எரித்தனர்.

தமிழ்த் திரைப்பட இயக்குநர் வடிவுடையான் ‘வீரமாதேவி’ எனும் ராணியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு, 'வீரமாதேவி' வரலாற்று திரைப்பட‌த்தை இயக்கி வருகிறார். இதில் வீரமாதேவியாக பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் நடித்து வருகிறார். இந்த படம் தமிழ், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கன்னட ரக்ஷ்ன வேதிகே அமைப்பினர் வீரமாதேவி திரைப்படத்தில் சன்னி லியோன் நடிக்க கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பெங்களூருவில் அனந்தராவ் சதுக்கம், டவுன் ஹால், மைசூரு வங்கி சதுக்கம் ஆகிய இடங்களில் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று அனந்தராவ் சதுக்கத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது சன்னி லியோனுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர். மேலும் அவரது உருவ பொம்மையை தீவைத்து எரித்தனர்.

இதுகுறித்து கன்னட ரக்ஷ்ன வேதிகே அமைப்பின் தலைவர் நாராயண கவுடா கூறுகையில், “வீரமாதேவி வரலாற்று புகழ்மிக்க அரசி. அவரது வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் ஆபாச திரைப்பட நடிகை ச‌ன்னி லியோன் நடிப்பதை ஏற்க முடியாது.

கர்நாடகாவை சிறப்பாக ஆண்ட வீரமாதேவி கதாபாத்திரத்தில் சன்னி லியோனை நடிக்க வைப்பதன் மூலம் கன்னட மக்களை இழிவுப்படுத்த இயக்குநர் வடிவுடையான் திட்டமிட்டுள்ளார்.

கன்னட மக்களின் உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் தயாராகிவரும் வீரமாதேவி திரைப்பட படப்பிடிப்பை உடனடியாக நிறுத்த வேண்டும். எக்காரணம் கொண்டும் இதில் சன்னி லியோன் நடிக்கக் கூடாது. இல்லாவிட்டால் வருகிற நவம்பர் 3-ம் தேதி பெங்களூருவில் சன்னி லியோன் பங்கேற்கும் நிகழ்ச்சியை நடத்த விட மாட்டோம்'' என்றார்.

வரலாறு என்ன?

வீரமாதேவி குறித்து கர்நாடக வரலாற்று ஆய்வாளர்களிடம் விசாரித்த போது, “மிகத் துல்லியமாக கூறவேண்டும் என்றால் வீரமாதேவி என்கிற துணிச்சல் மிகுந்த பெண் ஆளுமை கர்நாடகாவில் வாழ்ந்ததற்கான வரலாற்று ஆதாரம் இல்லை. அவர் ஒரு குறிப்பிட்ட பகுதியை ஆட்சி செய்தார் என்பதற்கோ, போரில் சண்டையிட்டு வெற்றிப் பெற்றார் என்பதற்கோ போதிய சான்று இல்லை'' என்றனர். இலக்கியவாதிகள், “வீரமாதேவி வரலாற்றில் எந்த காலக்கட்டத்தைச் சேர்ந்தவர் என்பதற்கு ஆதாரம் இல்லை. ஆனால் கன்னட மக்கள் மத்தியில் அவர் குறித்த பல்வேறு கதைகள் இருக்கின்றன. வீரமிக்க போராளியாக கூறப் படும் வீரமாதேவி கற்பனை கதாபாத்திரமாக இருக்கலாம்'' என்று தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x