Last Updated : 12 Oct, 2018 08:33 AM

 

Published : 12 Oct 2018 08:33 AM
Last Updated : 12 Oct 2018 08:33 AM

கர்நாடக பகுஜன் கட்சி அமைச்சர் மகேஷ் திடீர் ராஜினாமா: காங்கிரஸுக்கு எதிரான மாயாவதியின் நடவடிக்கையா?

கர்நாடகாவில் கடந்த மே மாதம் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்தது. இந்த கூட்டணியின் சார்பில் கொள்ளேகால் தொகுதியில் போட்டியிட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில‌ தலைவர் மகேஷ் வெற்றிப் பெற்றார்.

கர்நாடகாவில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத தால் மஜத மாநில தலைவர் குமாரசாமி காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவுடன் ஆட்சி அமைத்தார். மஜத - காங்கிரஸ் கூட்டணி அரசில் பகுஜன் சமாஜ் கட்சியின் ஒரு எம்எல்ஏவான மகேஷூக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணி அரசில் இருப்பதால் வருகிற மக்களவைத் தேர்தலிலும் பகுஜன் சமாஜ் கட்சி காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இடம்பெறும் என கூறப்பட்டது. இந்நிலையில் விரைவில் நடை பெறும் மத்திய பிரதேசம், ராஜஸ் தான் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட் சிக்கு காங்கிரஸ் மிக குறைந்த அளவிலான இடங்களை ஒதுக் கியது. இதனால் கோபமடைந்த மாயாவதி காங்கிரஸுடனான கூட்டணியை முறித்துக் கொண்டார்.

இந்நிலையில் கர்நாடக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஷ் நேற்று மாலை தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக அறிவித் துள்ளார். முதல்வர் குமாரசாமிக்கு மகேஷ் அனுப்பியுள்ள ராஜினாமா கடிதத்தில், ''கடந்த 15.6.2018-ல் அமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்து எனக்கு போதிய ஒத்துழைப்பை வழங்கியமைக்கு நன்றி. தனிப்பட்ட காரணங்களுக் காக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன்''என தெரி வித்துள்ளார்.

கர்நாடக அரசுக்கு எதிராக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில், மகேஷின் ராஜினாமா குமாரசாமி அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

மகேஷ் கூறுகையில், “நான் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தாலும், குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசுக்கு ஆதரவாக இருப்பேன். வருகிற இடைத்தேர்தலில் மஜதவை ஆதரித்து பிரச்சாரம் செய்வேன். அமைச்சராக இருந்ததால் எனது தொகுதிக்கு (கொள்ளேகால்) அடிக்கடி செல்ல முடியவில்லை. அதேபோல பகுஜன் சமாஜ் கட்சியை வளர்க்கும் பணிகளிலும் ஈடுபட முடியவில்லை. இது எனது தனிப்பட்ட முடிவு. எவ்வித அரசியல் காரணமும் இல்லை''என்றார்.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநில தேர்தலில் காங்கிரஸுக்கு எதிரான நிலைப் பாட்டை எடுத்துள்ள மாயாவதி, கர்நாடகாவில் காங்கிரஸுடன் கூட்டணியில் இருப்பது அந்த தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும் நினைக்கிறார்.

எனவே காங்கிரஸ் கூட்டணி அரசின் அமைச்சரவையில் இருந்து விலகுமாறு மகேஷூக்கு உத்தரவிட்டதாகத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x