Last Updated : 07 Oct, 2018 02:00 AM

 

Published : 07 Oct 2018 02:00 AM
Last Updated : 07 Oct 2018 02:00 AM

சிறையில் சசிகலாவுடன் தினகரன் சந்திப்பு; ஓ.பன்னீர்செல்வம் துரோக சிந்தனை கொண்டவர் என பேட்டி

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் துரோக சிந்தனை கொண்டவர் என அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய‌ சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று சந்தித்து பேசினார். சுமார் 2 மணி நேரம் நடந்த இந்த சந்திப்பின்போது, 18 எம்எல்ஏக்கள் மீதான வழக்கில் வெளியாக இருக்கும் தீர்ப்பு,

ஓ. பன்னீர் செல்வத்தை ரகசியமாக சந்தித்த விவகாரம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து, சிறையில் இருந்து வெளியே வந்த டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் தற்போதைய துணை முதல்வர் பன்னீர் செல்வத்தை அறிமுகப்படுத்தி வைத்ததே நான்தான். இதனை அவரே பல முறை தெரிவித்துள்ளார். அவரை மிரட்டி, முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வைத்ததாக என் மீது பன்னீர் செல்வம் குற்றம்சாட்டினார். ஆனால், அவரே என்னை ரகசியமாக வந்து சந்தித்தார். இந்த சந்திப்பை அவரே உறுதி செய்திருக்கிறார்.

கடந்த செப்டம்பர் கடைசி வாரம் கூட அவர் என்னை சந்திக்க விரும்பினார். பன்னீர் செல்வம் துரோக சிந்தனை கொண்டவர். எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் பதவியில் இருந்து இறக்கிவிட்டு, தாம் முதல்வராக வேண்டும் என பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறார். அதிமுக ஆட்சிக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பின்போது வாக்களித்த பன்னீர் செல்வம், ராஜ விசுவாசம் குறித்து பேசக்கூடாது.

இன்னும் ரகசியங்கள் உள்ளன

பன்னீர் செல்வம் என்னை சந்திக்க விரும்பியதை அவரே விரைவில் ஒப்புக்கொள்வார். மயிலாப்பூரில்  ஒரு சிலரை பன்னீர் செல்வம் சந்தித்திருக்கிறார். இன்னும் சில ரகசியங்களை சொல்லாமல் இருக்கிறேன். அவர் ஒப்புக்கொள்ளாவிட்டால் அந்த தகவலையும் வெளியிடுவேன். அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி எல்லாம் பதவியில் ஒட்டிக்கொண்டு இருக்க வேண்டும் என்பதற்காக எதையோ பேசிக் கொண்டிருக்கிறார்கள். பன்னீர் செல்வத்துடன் இருந்தவர்கள் எல்லாம் அந்த பக்கம் போய்விட்டதால் தற்போது அவர் தனிமரமாக இருக்கிறார். இவ்வாறு தினகரன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x