Published : 05 Oct 2018 05:14 PM
Last Updated : 05 Oct 2018 05:14 PM

காஷ்மீர் சண்டையை மறந்து கொஞ்சம் வெளியே போகலாம் வாங்க: பூஞ்ச் மக்களை வடஇந்தியா அழைத்துச்சென்ற ராணுவம்

காஷ்மீரில் பிரிவினைவாதிகளின் ஊடுருவலால் சதா சண்டையும் உயிருக்கு ஆபத்தான அச்சுறுத்தலுமாகவே வாழும் சர்வதேச எல்லைப்பகுதி மக்களை இந்தியாவின் பிற பகுதிகளுக்கு அழைத்துச்சென்றுள்ளது இந்திய ராணுவம்.

இதுகுறித்து பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்ததாவது:

பூஞ்ச் மாவட்டத்தின் போதா பகுதியில் தொடங்கிய இப்பயணத்தை ராணுவ உயரதிகாரிகள், இன்று (வியாழக்கிழமை) காலை கொடியசைத்து வழியனுப்பிவைத்தனர். திறன் வளர்க்கும் இந்த சுற்றுலாவுக்கு ''சாய்ர் இ ஹிந்த்'' என பெயரிடப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள பிரமாண்ட வரலாற்றுக் கோட்டைகள், ஆன்மிகத் தலங்கள், கலாச்சார புராதன சின்னங்கள் போன்றவற்றை காஷ்மீர் மக்கள் நேரில் கண்டு அறிந்துகொள்ளும்விதமாக இச்சுற்றுலா அமைந்துள்ளது.

முதன்முறையாக காஷ்மீர் எல்லைப்பகுதி மக்கள் அழைத்துச்செல்லப்படும் இச்சுற்றுலா பயணத்தில் வட இந்தியா ஒரு முக்கிய அம்சமாக அமைகிறது. இதில் அஜ்மீர் தர்கா, ஜெய்ப்பூர் அரண்மனை, ஆக்ரா கோட்டைகள் மற்றும் தாஜ்மகால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சுற்றிப்பார்க்க எட்டு நாட்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி இந்த சுற்றுலாப் பயணத்தின்போது எல்லைப் பகுதியிலிருந்து வரும் இந்த இந்திய குடிமக்களுக்கு நம் நாட்டின் வரலாறு, ஆன்மிகம், கலாச்சாரப் பெருமைகளை எடுத்துக்காட்டும் அதே நேரம் நம் நாட்டில் கடைபிடிக்கப்படும் சகோதரத்துவ மனப்பான்மை, வேற்றுமையில் ஒற்றுமை, நல்லிணக்கம் போன்றவற்றையும் மிக அழகாக உணர்த்தப்படும்.

இவர்கள் செல்லும் இடங்களுக்கு ராணுவ அதிகாரிகளுடன் சிறப்பு சந்திப்புகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்களோடு எல்லையில் வசிக்கும் இம்மக்கள் சுதந்திரமாக கலந்துரையாடலாம். இப்பயணம் எல்லையில் வசிக்கும் மக்களை நிச்சயம் உற்சாகப்படுத்தும். தங்கள் கவலைகளை அவர்கள் மறக்கவும் இது வழிவகுக்கும்.

இவ்வாறு பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x