Last Updated : 04 Oct, 2018 06:43 PM

 

Published : 04 Oct 2018 06:43 PM
Last Updated : 04 Oct 2018 06:43 PM

ரபேல் போர் விமான ஒப்பந்தம் மீது நடவடிக்கை: சிஏஜி அதிகாரியை 2-வது முறையாக சந்தித்து காங்கிரஸ் நிர்வாகிகள் வலியுறுத்தல்

ரூ. 60 ஆயிரத்து 150 கோடி மதிப்புள்ள ரபேல் போர் விமான கொள்முதல் ஒப்பந்தத்தைத் தணிக்கை செய்யக் கோரி மத்திய தலைமைக் கணக்கு தணிக்கை அதிகாரியை 2-வது முறையாகச் சந்தித்து காங்கிரஸ் நிர்வாகிகள் இன்று மனு அளித்தனர்.

மேலும், ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் நடந்துள்ள முறைகேடுகள் தொடர்பாக புதிய ஆவணங்களையும் மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி ராஜீவ் மெகரிஷியிடம் காங்கிரஸ் நிர்வாகிகள் அளித்தனர். காங்கிரஸ் நிர்வாகிகளான அகமது படேல், ஆனந்த் சர்மா, ஜெய்ராம் ரமேஷ், ரன்தீப் சுர்ஜேவாலா, ஆர்பிஎன் சிங், விவேக் தங்கா ஆகியோர் இந்தமனுவை அளித்தனர்.

கடந்த மாதம் 18-ம் தேதி இதேபோல ரபேல் போர் ஒப்பந்தம் தொடர்பாக மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியைச் சந்தித்து காங்கிரஸ் நிர்வாகிகள் மனு அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 ரபேல் போர்விமானங்களை மத்திய அரசு வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தை மத்திய அரசின் ஹெச்ஏஎல் நிறுவனத்துக்கு அளிக்காமல் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு அளித்ததில் ஊழல் நடந்துள்ளது எனக்கூறி காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி வருகிறது. ஆனால், ஊழல் ஏதும் நடக்கவில்லை என பாஜக கூறி வருகிறது.

இந்நிலையில், ரபேல் போர் விமான கொள்முதல் ஒப்பந்தத்தில் நடந்துள்ள முறைகேடுகள் தொடர்பாக மத்திய தலைமைக் கணக்கு தணிக்கைத்துறை தணிக்கை செய்து நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனக்கோரி காங்கிரஸ் கட்சி இன்று மனு அளித்தது. அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

ரபேல் போர்வமான ஒப்பந்தம் நாட்டின் பாதுகாப்புத் துறையில் நடந்துள்ள மிகப்பெரிய ஊழலாகப் பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் புதிதுபுதிதான விவரங்கள், தகவல்கள் வெளியே வருகின்றன. ஆனால், அதுகுறித்து எந்தக் கேள்விகள் எழுப்பினாலும் பாதுகாப்பு துறையிடம் இருந்து எந்தவிதமான பதில்களும் இல்லை. இந்த அரசின் உண்மை என்பது நேர்மையற்ற முறை, ஊழல், ஒட்டுண்ணி முதலாளித்துவம் போன்றவையாகும். இதனால் ரபேல் போர் விமான ஒப்பந்தம் வெறுப்பை உண்டாக்கியுள்ளது. ஆதலால், உடனடியாக அதில் தலையிட வேண்டும்.

மத்திய அரசு மன்னிக்கமுடியாத அளவுக்குத் தவறு செய்து, 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்காக அரசுக்கு ரூ.41 ஆயிரத்து 205 கோடி இழப்பு ஏற்படுத்தியுள்ளது. அனைத்து விமானங்களும் பிரான்ஸில் தயாரிக்கப்பட்டு வருகிறது எந்த விதமான தொழில்நுட்பங்களும் இந்தியாவுக்குப் பரிமாறப்படவில்லை.

ஒட்டுண்ணி முதலாளித்துவத்தின் மூலம் தனியார் நிறுவனமான ரிலையன்ஸுக்கு ரூ.30 ஆயிரம் கோடி ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், காங்கிரஸ் அரசு இதே ஒப்பந்தத்தை மத்தியஅரசின் இந்துஸ்தான் ஏரோநாட்டிகல்ஸ் லிமிட்டுக்கு அளித்திருந்தோம். அந்த ஒப்பந்தத்தைப் பிரதமர் மோடியும், அவரின் அரசும் ரத்து செய்துவிட்டது.

ஆதலால் இந்த விவகாரத்தில் சிஏஜி அதிகாரி ரபேல் போர் விமானக் கொள்முதல் ஒப்பந்தத்தின் அனைத்து ஆவணங்களையும் ஆய்வு செய்து தணிக்கை செய்து நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x