Published : 04 Oct 2018 06:04 PM
Last Updated : 04 Oct 2018 06:04 PM

மனைவியால் ஏற்படும் துன்பங்களைப் பகிர்ந்து கொண்ட கணவர்கள்: விஜயவாடாவில் ருசிகரம்

ஆண்களின் இந்த மாதிரியான ஒன்றுகூடலை விஜயவாடா நகரம் இதுவரை பார்த்திருக்காது.

திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி இல்லை; மனைவிகள் தங்களைக் கொடுமைப்படுத்துகின்றனர் என்றுகூறி, சட்ட ரீதியான உதவிகளைப் பெற ஏராளமான கணவர்கள் அங்கு ஒன்றுகூடினர்.

ஆஸ்திரேலியாவில் பணிபுரியும் பொறியாளர், ஆசிரியர், விவசாயி, ரியல் எஸ்டேட் தரகர், முன்னாள் அரசு அதிகாரி, ரயில்வே ஊழியர் என்று கலவையான மனிதர்கள் அங்கு குழுமி இருந்தனர்.

தங்களின் மனைவிகளோடு ஏற்படும் பிணக்குகளையும், தங்களைக் கொடுமைப்படுத்த அவர்கள் சட்ட விதிகளைப் பயன்படுத்துவதையும் குறித்து அவர்கள் கவலையுடன் விவாதித்தனர்.

கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள மூத்த குடிமக்கள் நலச் சங்க ஹாலில் இந்த சந்திப்பு நடைபெற்றது. மனைவியால் பாதிக்கப்பட்டோர் சங்கம் (Bharya Badhitula Sangham) இந்தக் கூட்டத்தை நடத்தினர்.

''பொதுவாக கணவர்களால் மனைவிகள் கொடுமைப்படுத்தப்படும் சம்பவங்கள் ஏராளமாக இருக்கின்றன. அவற்றைக் கண்டிக்கிறோம். ஆனால் அதே நேரம் சில இடங்களில் மனைவிகள் அவர்களுக்குச் சாதகமாக சட்டத்தைப் பயன்படுத்தி, கணவன்களைத் துன்புறுத்துகின்றனர்'' என்கிறார் விஜயவாடாவைச் சேர்ந்த ரயில்வே அதிகாரி.

தன் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, இரண்டாவது திருமணம் செய்துள்ள பாலகிருஷ்ணா, ''நான் இப்போது பிரச்சினையில் இருந்து வெளியே வந்துவிட்டேன். ஆனால் என்னைப் போல பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ ஆசைப்படுகிறேன்'' என்கிறார்.

ஆஸ்திரேலியாவில் பணிபுரியும் பொறியாளர், அங்கிருக்கும்போது தான் துன்புறுத்தப்பட்டதாகக் கூறுகிறார். ''நான் இங்கே வந்தபோது என்னுடைய பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டது. என்னுடைய மனைவி புகார் கொடுத்ததன் விளைவு இது.

நான் நீதிமன்றத்தின் மூலம் பாஸ்போர்ட்டைத் திரும்பப் பெற்றாலும், என்னால் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் பணிபுரிய முடியவில்லை. இங்கு வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெறுவதே இதற்குக் காரணம். நாங்கள் இரண்டு மாதங்களே இணைந்து வாழ்ந்தோம்'' என்கிறார்.

இந்த சந்திப்பில் இளைஞர்கள் மட்டுமல்லாமல் முதியவர்கள் சிலரும் கலந்துகொண்டனர்.

இதுகுறித்துப் பேசிய மனைவியால் பாதிக்கப்பட்டோர் சங்கத் தலைவர் ஜி.பாலாஜி, ''பொய்யான வழக்குகளால் பாதிக்கப்படும் ஆண்களுக்கு ஆதரவாக அரசாங்கம் செயல்பட வேண்டும். வருங்காலத்தில் எந்த அப்பாவி ஆணும் பிரிவு 498ஏ-வால் பாதிக்கப்படக் கூடாது'' என்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x