Published : 04 Oct 2018 09:43 AM
Last Updated : 04 Oct 2018 09:43 AM

ம.பி., ராஜஸ்தான் தேர்தலில் காங். உடன் கூட்டணி இல்லை: மாயாவதி திட்டவட்டம்

ராஜஸ்தான், மத்தியப் பிர தேச மாநிலங்களுக்கான சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்கப் போவதில்லை என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்தார்.

ராஜஸ்தான், மத்தியப் பிரதேச மாநிலங்களுக்கு நிகழாண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த இரண்டு மாநிலங்களிலும் பாஜக ஆட்சியில் உள்ளதால், அக்கட்சியை தோற்கடிக்க வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், அம்மாநிலங்களில் பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைக்கவும் காங்கிரஸ் முயற்சித்து வருகிறது.

இந்த நிலையில், காங்கிரஸுடன் தாம் கூட்டணி அமைக்கப் போவதில்லை என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி அதிரடியாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக, டெல்லியில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:

ராஜஸ்தான், மத்தியப் பிரதேச மாநிலங்களுக்கான சட்டப் பேரவைத் தேர்தலில் பகுஜன் சமாஜுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விரும்புகிறார். இந்தக் கூட்டணி அமைய வேண்டும் என்ற அவர்களின் நோக்கம் நேர்மை யானது. ஆனால், அக்கட்சியின் மூத்த தலைவர்கள் சிலரோ, பகுஜன் சமாஜை அழிக்க நினைக்கின்றனர். எனவே, மேற் கண்ட இரண்டு மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியுடன் பகுஜன் சமாஜ் கூட்டணி அமைக்காது. அத்துடன், அந்தத் தேர்தல்களில் தனித்துப் போட்டியிடவும் நாங்கள் முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதனிடையே, பகுஜன் சமாஜ் கட்சியின் இந்த முடிவால், காங் கிரஸுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x