Last Updated : 03 Oct, 2018 08:22 AM

 

Published : 03 Oct 2018 08:22 AM
Last Updated : 03 Oct 2018 08:22 AM

மனித குலத்தை ஒருங்கிணைக்கும் சக்தி ‘அகிம்சை’: மகாத்மா காந்தியின் பிறந்த நாளில் பிரதமர் நரேந்திர மோடி புகழாரம்

தீவிரவாதம், வெறுப்புணர்வு ஆகிய வை நாடுகளை துண்டாடி வரும் நிலையில், மகாத்மா காந்தியின் கொள்கையான அகிம்சை மனித குலத்தை ஒருங்கிணைக்கும் சக்தியாக விளங்குகிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மகாத்மா காந்தியின் 149-வது பிறந்தநாளை முன்னிட்டு, டெல்லி ராஜ்காட் பகுதியில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவர் எம்.வெங்கய்ய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் நேற்று மரியாதை செலுத்தினர்.

இதுபோல காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர் சோனியா காந்தி, பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, மத்திய அமைச் சர்கள், டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் உள்ளிட்ட பலர் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

இதுகுறித்து ராம்நாத் கோவிந்த் ட்விட்டரில், “காந்தி பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். அமைதி, சகோ தரத்துவம், நல்லிணக்கம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய தேசிய வளர்ச்சி ஆகிய காந்தி யடிகள் வலியுறுத்திய கருத்துகளை இன்று நினைகூர்வோம். அவரு டைய கருத்துகள் நம் அனைவருக் கும் இன்னமும் பொருத்தமாக உள்ளன. அவர் நம்முடைய வழிகாட்டியாக இன்றும் தொடர்கிறார்” என பதிவிட்டுள்ளார்.

பிரதமர் மோடி ட்விட்டரில், “மகாத்மா காந்தியின் உயர்ந்த எண்ணங்கள் உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கானவர் களுக்கு பலத்தைக் கொடுத்தது. பிறரின் நலனுக்காகவும் உலகை சிறந்ததாக உருவாக்கவும் வாழ்ந்த அவர், நம் அனைவரின் நம்பிக் கைக்குரியவராக விளங்கினார். அவரது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தினேன்” என புகைப்படத் துடன் பதிவிட்டுள்ளார்.

காந்தியின் 149-வது பிறந்தநாள் மற்றும் 150-வது பிறந்த ஆண்டின் தொடக்கத்தை முன்னிட்டு, பிரதமர் மோடி வலைப்பூவில் (பிளாக்), “உலகம் முழுவதும் தீவிரவாதம், அடிப்படைவாதம், பயங்கரவாதம் மற்றும் வெறுப்புணர்வு ஆகியவை பல்வேறு நாடுகள் மற்றும் சமுதாயத்தை பிளவுபடுத்தி வரு கின்றன. இந்நிலையில், காந்தியின் கொள்கைகளான அமைதி மற்றும் அகிம்சை ஆகியவை மனித சமுதாயத்தை ஒருங்கிணைக்கும் சக்தியாக விளங்குகிறது.

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பாஜக தலைமையிலான அரசால் அறிமுகம் செய்யப்பட்ட ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் மூலம் 130 கோடி மக்கள் காந்திக்கு மரியாதை செலுத்தி உள்ளனர். 4 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள இந்தத் திட்டம் மிகப்பெரிய மக்கள் இயக்கமாக உருவெடுத்து வெற்றி பெற்றுள்ளது” என பதிவிட்டுள்ளார்.

2019-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி, காந்தியடிகளின் 150-வது பிறந்த நாளை மிகப் பிரம்மாண்டமாக கொண்டாட அரசு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் காந்தி பிறந்தநாளை முன்னிட்டு, மகாத்மா காந்தி சர்வதேச சுகாதார மாநாடு கடந்த 4 நாட்களாக நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர்கள், ஐ.நா பொதுச் செயலாளர் அந்தோணியோ குத்தேரஸ், உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுகாதார அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் காந்தியின் தபால் தலை வெளியிடப்பட்டது.

இந்த கருத்தரங்கின் இறுதி நாளான நேற்று நடந்த நிறைவு விழாவில் பிரதமர் மோடி பேசும் போது, “கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சர்வதேச அளவில் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்திய மக்கள் தொகையில் 60 சதவீதம் இந்தியர்களாக இருந் தனர். மத்திய அரசின் கழிப்பிட வசதி திட்டத்தால் இது இப்போது 20 சதவீதமாகக் குறைந்துள்ளது.

நம் நாட்டில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கிரமப்புறங்களில் கழிப்பறை கட்டிக் கொடுக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் திறந்த வெளி கழிப்பிட முறையிலிருந்து விடுபட்டுள்ளதாக 25 மாநிலங்கள் அறிவித்துள்ளன. இதுபோல திறந்தவெளி கழிப்பிட முறையி லிருந்து விடுபட்டுள்ள கிராமங்கள் எண்ணிக்கை 5 லட்சமாக அதிகரித்துள்ளது” என்றார்.

சாஸ்திரி பிறந்தநாள்

நாட்டின் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாளும் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, டெல்லி விஜய்காட் பகுதியில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவர் எம்.வெங்கய்ய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x