Last Updated : 30 Sep, 2018 01:10 AM

 

Published : 30 Sep 2018 01:10 AM
Last Updated : 30 Sep 2018 01:10 AM

பாஜகவில் சேர்ந்தால் ரூ.30 கோடி, அமைச்சர் பதவி: கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏவிடம் பேரம்

கர்நாடக மாநில மகளிர் காங்கிரஸ் தலைவர் லட்சுமி ஹெப்பாள்கரிடம் பாஜகவில் சேர்ந்தால் ரூ.30 கோடி, அமைச்சர் பதவி தருவதாக பாஜக தரப்பில் பேரம் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடகாவில் கடந்த மே மாதம் நடந்த தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து மஜத மாநில தலைவர் குமாரசாமி ஆட்சி அமைத்துள்ளார். அமைச்சர் பதவி கேட்டு, அவருக்கு எதிராக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 22 பேர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இந்நிலையில் பாஜக மாநில தலைவர் எடியூரப்பா காங்கிரஸ் எம்எல்ஏக்களை பாஜகவுக்கு இழுக்க முயற்சிப்பதாக குமாரசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

இந்நிலையில் கர்நாடக மாநில மகளிர் காங்கிரஸ் தலைவரும், எம்எல்ஏவுமான‌ லட்சுமி ஹெப்பாள்கர் நேற்று பெல்காமில் செய்தியாளர்களிடம் கூறியதாவ‌து:

பெல்காம் மாவட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கிடையே கருத்து வேறுபாடு இருப்பது உண்மைதான். காங்கிரஸ் மேலிடம் எடுக்கும் முடிவுக்கு நான் கட்டுப்பட்டு நடப்பேன். கடந்த சில தினங்களுக்கு முன்பு பாஜகவை சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர் என்னிடம் தொலைபேசியில் பேசினார்.

அப்போது மஜத - காங்கிரஸ் கூட்டணி அரசை கவிழ்க்க வேண்டும். காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்தால் எனக்கு ரூ.30 கோடி ரொக்க பணமும், அமைச்சர் பதவியும் தருவதாக கூறினார். அதற்கு நான் மறுப்பு தெரிவித்துவிட்டேன். ஆனால் இந்த தொலைபேசி அழைப்பை பதிவு செய்து, காங்கிரஸ் மேலிடத் தலைவர்களுக்கு அனுப்பினேன்.

பாஜகவினர் என்னிடம் நடத்திய பேரம் குறித்து ஆதாரத்துடன் விரைவில் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க இருக்கிறேன். பாஜகவின் ஆசை வார்த்தைகளில் மயங்கி, ஒரு போதும் காங்கிரஸை விட்டு விலக மாட்டேன். ஆட்சியைக் கவிழ்க்க நடக்கும் சதியை அம்பலப் படுத்தவே தற்போது இந்த தகவலை செய்தியாளர்களிடம் தெரிவிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.லட்சுமி ஹெப்பாள்கர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x