Published : 27 Sep 2018 11:18 AM
Last Updated : 27 Sep 2018 11:18 AM

தகாத உறவு கிரிமினல் குற்றமல்ல; ஆணுக்கு 5 ஆண்டுகள் தண்டனை வழங்கும் சட்டம் ரத்து: உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

 

வேறொருவர் மனைவியுடன் அவரது ஒப்புதலுடன் உடலுறவு கொள்ளும் தகாத உறவு சட்டப்படி குற்றமில்லை, எனவே தகாத உறவில் ஈடுபடும் ஆணுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கும் சட்டப்பிரிவு ரத்து செய்யப்படுகிறது என உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

இந்திய தண்டனை சட்டத்தின் 497-ஆவது பிரிவு செல்லுபடியாகுமா என்பது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தி்ல் நடந்து வந்தது. வேறொரு நபரின் மனைவி என்று தெரிந்திருந்தும், அந்த நபரின் சம்மதத்துடனோ, சம்மதம் இல்லாமலோ அப்பெண்ணுடன் உறவு வைத்துக் கொள்வது குற்றம் என இந்திய தண்டனைச் சட்டத்தின் 497-வது பிரிவு குற்றம் என சொல்கிறது. இந்த குற்றத்துக்கு 5 ஆண்டுகள் வரை தண்டனை வழங்க இந்த சட்டம் வகை செய்கிறது.

இந்த வழக்கில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியதாவது:

‘‘தகாத உறவு என்பது சட்டவிரோதம் அல்ல. இந்த சட்டத்தின்படி தகாத உறவில் ஈடுபடும் ஆணுக்கு மட்டும் தண்டனை விதிப்பது என்பது ஏற்கத்தக்கதல்ல. இந்த தகாத உறவு யாரையும் தற்கொலைக்கு தூண்டாத வரையில் இதை குற்றமாக கருத முடியாது. மனைவி என்பவர் கணவனின் சொத்து அல்ல. ஒருவரது உடன்பாட்டுடன் நடக்கும் உடலுறவை, பாலியல் பலாத்காரமாக கருத முடியாது.

இருவருர் விரும்பி உடலுறவில் ஈடுபடுவதை பாலியல் பாலத்காரமாக கருதுவதை ஏற்க முடியாது. எனவே தகாத உறவில் ஈடுபடும் ஆணுக்கு மட்டும் தண்டனை விதிக்கும் அரசியல் சட்டத்தின் 497வது பிரிவு ரத்து செய்யப்படுகிறது’’ என நீதிபதிகள் கூறினர்.

இந்த வழக்கு விசாரணை நடந்தபோது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், திருமணம் என்ற பந்தத்தை வலுப்படுத்தவும், அதன் புனிதத்தை காக்கவுமே 150 ஆண்டுகளுக்கு முன்பே இத்தகைய சட்டம் கொண்டு வரப்பட்டதாக வாதாடினர். ஆனால் அவர்கள் வாதத்தை நீதிபதிகள் தற்போது நிராகரித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x