Published : 26 Sep 2018 05:03 PM
Last Updated : 26 Sep 2018 05:03 PM

92% ஆண் 82% பெண் மாத வருமானம் ரூ.10,000க்கும் கீழ்; வேலைவாய்ப்பற்ற வளர்ச்சி; ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

 

நாட்டின் பொருளாதாரம் வளர்ந்த அளவுக்கு அது வேலைவாய்ப்புகளை இளைஞர்களுக்கு உருவாக்கிக் கொடுக்கவில்லை, ஊதியத்தின் அளவும் அதிகரிக்கவில்லை ஆதலால், தேசிய வேலைவாய்ப்புக் கொள்கை உருவாக்க வேண்டும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

92 சதவீத ஆண் தொழிலாளர்கள், 82 சதவீத பெண் தொழிலாளர்கள் இன்னும் மாதத்துக்கு ரூ.10 ஆயிரத்துக்குள்ளேயே ஊதியம் பெறுகிறார்கள். இன்னும் நாட்டில் 67 சதவீத வீடுகளில் மாத வருமானம் ரூ.10 ஆயிரத்துக்குள்ளாகவே இருக்கிறது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆதலால், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கக் கூடிய தொலைநோக்கு அம்சம் கொண்ட தேசிய வேலைவாய்ப்புக் கொள்கையை அரசு உருவாக்குவது அவசியம் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரைச் சேர்ந்த அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் நிலைத்த வேலைவாய்ப்பு மையத்தின் சார்பில், இந்தியாவின் நிலை-2018 எனும் தலைப்பில் ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

நாடு வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தை கொண்டிருக்கிறது என்று மத்திய அரசு கூறி வருகிறது. ஆனால், நாட்டின் பொருளாதாரம் வளர்ந்துவரும் அளவுக்கு வேலைவாய்ப்பு உருவாகவில்லை.

இளைஞர்களிடையே வேலையின்மை அளவு அதிகரிகத்துக்கொண்டே வருகிறது. வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்பை உருவாக்குவதற்குமான இடைவெளி அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. வேலைவாய்ப்பை உருவாக்காத வளர்ச்சியாக இருக்கிறது.

வேலையின்மை அளவு அனைத்து மாநிலங்களிலும் அதிகரித்துள்ளது. கடந்த 2011-ம் ஆண்டில் கேரளாவில் 9 சதவீதம், திரிபுராவில் 14.5 சதவீதம், நாகாலாந்தில் 25.6 சதவீதம் வேலையின்மை உயர்ந்துள்ளது. 2015-ம் ஆண்டில் கேரளாவில் வேலையின்மை 12.5 சதவீதம், சிக்கம் 18.5 சதவீதம்,திரிபுரா 19.7 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதனால், வேலைவாய்ப்புகளை உருவாக்காத வளர்ச்சியாக இருந்து வருகிறது.

இந்த ஆய்வைச் செய்த பேராசிரியர் அமித் பசோல் கூறுகையில், “ கடந்த 1970 கள் மற்றும் 1980களில் நீங்கள் நாட்டின் உள்நாட்டு மொத்த உற்பத்தியைச் சிறிது பின்னோக்கிப் பார்த்தால் பொருளாதார வளர்ச்சி 3 முதல் 4 சதவீதம் இருக்கும், அதற்கு ஈடாக வேலைவாய்ப்பில் வளர்ச்சி 2 சதவீதம் இருக்கும். ஆனால் இன்றைய சூழலில் பார்த்தால், நாட்டின் உள்நாட்டு மொத்த உற்பத்தியோடு ஒப்பிடும்போது, வேலைவாய்ப்பு வளர்ச்சி என்பது 0.1 சதவீதமாக இருக்கிறது. அதாவது பொருளாதார வளர்ச்சி 10 சதவீதம் அதிகரித்தால், வேலைவாய்ப்பு ஒரு சதவீதத்துக்கும் குறைவாகவே உயர்ந்துள்ளது” எனத் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் மூலம் கடந்த 2013 மற்றும் 2015-ம் ஆண்டில் நாட்டின் வேலைவாய்ப்பு அளவு 70 லட்சத்துக்குள்ளாகக் குறைந்துவிட்டது. தனியார் வேலைவாய்ப்பும் அளவும் குறைந்துவிட்டது.

நாட்டில் வேலையின்மை அளவு 5 சதவீதத்துக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது இதில் மிக மோசமாக வடமாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள் வேலையின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இளம்வயதில் உயர்கல்வி படித்தவர்கள் மத்தியில் வேலையின்மையும் மிக அதிகமாக 16 சதவீதமாக அதிகரித்துள்ளது.

ஊதியத்தின் அடிப்படையைக் கணக்கிட்டால், அனைத்துத் துறைகளிலும் ஊதியத்தின் அளவு வளர்ந்திருந்தாலும், கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து கிராமப்புற மக்களின் ஊதியத்தின் அளவில் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது.

அமைப்புசார்ந்த உற்பத்தித்துறையில் வேலைவாய்ப்பு குறிப்பிட்ட அளவுக்கு உயர்ந்துள்ளது, ஒப்பந்தப் பணிகள் பங்கீடு அளவு உயர்ந்துள்ளது, ஆனால், தொழிலாளர்கள் எதிர்பார்த்த அளவு கூலியோ, ஊதியமோ உயரவில்லை, பணிப்பாதுகாப்பு சூழலும் இல்லை. உற்பத்தி அதிகரித்துக்கொண்டே இருக்கும் அளவுக்கு, ஊதியம் தொழிலாளர்களுக்கு உயரவில்லை.

கடந்த 30 ஆண்டுகளில் இருந்த அளவைக் கூட்டிலும் தொழிலாளர்கள் மூலம் செய்யப்படும் உற்பத்தி என்பது 6 மடங்கு அதிகரித்துள்ளது. இந்தக் காலகட்டத்தில் மேற்பார்வை செய்யும் பணிக்கான ஊதியம் 3 மடங்கும், களத்தில் இறங்கி வேலை செய்யும் தொழிலாளர்கள் ஊதியம் ஒன்றரை மடங்கும் அதிகரித்துள்ளது.

பெண்களுக்கு அளிக்கப்படும் ஊதியம் மிகக் குறைவாக இருக்கிறது. இது மாநிலங்களுக்கு மாநிலம் ஊதியத்தின் அளவும் மாறுபடுகிறது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் 100 ஆண்களுக்கு 20 பெண்கள் மட்டுமே சம்பாதிக்கிறார்கள், தமிழகத்தில் 100 ஆண்களுக்கு 50 பெண்களும், மிசோரம், நாகாலாந்தில் 70 பெண்களும் சம்பாதிக்கிறார்கள்.

92 சதவீத ஆண் தொழிலாளர்கள், 82 சதவீத பெண் தொழிலாளர்கள் இன்னும் மாதத்துக்கு ரூ.10 ஆயிரத்துக்குள்ளேயே ஊதியம் பெறுகிறார்கள். இன்னும் நாட்டில் 67 சதவீத வீடுகளில் மாத வருமானம் ரூ.10 ஆயிரத்துக்குள்ளாகவே இருக்கிறது

இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x