Published : 26 Sep 2018 04:35 PM
Last Updated : 26 Sep 2018 04:35 PM

ஆதார் சட்டத்தை நிதிமசோதாவாக அனுமதிப்பதா? 7 நீதிபதிகள் அமர்வை அணுக காங். முடிவு; மற்றும் சில கருத்துக்கள்

ஆதார் தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பளித்துள்ள உச்ச நீதிமன்றம், அரசியல் சட்டப்படி ஆதார் சரியானது தான் என்று தீர்ப்பளித்தாலும் அதன் பயன்பாடுகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. ஆனால் ஆதார் சட்டத்தை நிதிமசோதாவாகத் தாக்கல் செய்ததை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டதற்கு காங்கிரஸ் அதிருப்தி வெளியிட்டுள்ளது.

ராஜ்யசபாவில் இந்த மசோதாவைத் தாக்கல் செய்யாமல் நிதிமசோதாவாக தங்களுக்கு பெரும்பான்மை உள்ள லோக்சபாவில் தாக்கல் செய்து சட்ட நிறைவேற்றலுக்காக நிதிமசோதாவாக ஆதார் சட்டத்தை கொண்டு வந்தது கடும் அதிருப்திக்குள்ளாகியுள்ளது.

அரசியல் சாசன அமர்வின் நீதிபதியான சந்திராசூட், அரசியல் சட்டப்பிரிவு 110-ஐ ஆதார் சட்டம் மீறுவதினாலேயே அந்தச் சட்டத்தையே தூக்கி எறிய முடியும் என்று கூறியதோடு, “மாநிலங்களவைக்குக் கொண்டு செல்லாமல் நிதிமசோதாவாக லோக்சபாவிலேயே நிறைவேற்றியது தவறு” என்றார். மேலும் தொலைபேசி சேவை நிறுவனங்கள் இதுவரை ஆதார் விவரங்களை வாடிக்கையாளர்களிடமிருந்து சேகரித்திருந்தால் அதனை அழிக்க வேண்டும் என்றும் கூறினார் சந்திரா சூட்.

இந்நிலையில் ஆதார் தீர்ப்பு குறித்து கட்சித்தலைவர்களின் எதிர்வினை என்னவென்று பார்ப்போம்:

வரலாற்றுத் தீர்ப்பு: அருண் ஜேட்லி

ஆதார் சட்டம் அரசியல் சட்ட் ரீதியாகச் செல்லுபடியாகும் என்ற தீர்ப்பு வரலாற்றுத் தீர்ப்பாகும். தனித்த அடையாள எண் வழங்கப்படும் கருத்தாக்கத்தையும் சட்ட அமலாக்கத்தையும் உச்ச நீதிமன்றம் ஏற்றது வரவேற்கத்தக்கது. மேலும் இது நிதிமசோதா என்பதையும் உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

4 நீதிபதிகள் ஆதார் சட்டத்தை ஏற்றனர்: ரவிசங்கர் பிரசாத்

ஆதார் சட்டத்தை அமல்படுத்த 4-1 பெரும்பான்மை கிடைத்தது. 4 நீதிபதிகள் ஆதாரின் முக்கியத்துவத்தை அங்கீகரித்தனர் இது முக்கியமானது. ஜனநாயகம், நல்லாட்சி, ஏழைமக்களுக்கு சேவைகள் சென்றடைவதற்கான அதிகாரத்தை அளிக்கும் தீர்ப்பு.

ஆதார் சட்டத்தை நிதிமசோதாவாக தாக்கல் செய்ததை ஏற்க முடியாது: கபில் சிபல்

ஆதார் சட்டத்தை நிதிமசோதாவாக தாக்கல் செய்து அமல்படுத்தப்பட்டது இன்னுமொரு சீராய்வுக்கு உகந்ததே. இதனை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றியிருக்க வேண்டும் என்று கபில் சிபல் தெரிவித்தார். மேலும் ஆதார் சட்டத்தைச் செல்லாது என்று கூறியிருந்தால் அது நலிவுற்றோரைப் பாதித்திருக்கும் என்பதை ஏற்பதற்கில்லை. ஆனால் நீதிபதி சந்திராசூட் ‘அது அரசியல்சாசன மோசடி’ என்று கூறியதை ஏற்கிறோம், என்றார் சிபல்.

“சட்டத்தை அமல்படுத்தியது அடிப்படை உரிமையை மீறுவதாகும், தனியுரிமைக்கு பங்கமானதாகும். நிதிமசோதாவாகத் தாக்கல் செய்தது மிகபெரிய துஷ்பிரயோகம்.

ஆனால் இந்தத் தீர்ப்பின் ஒரு முக்கியமான விஷயம் என்னவெனில் வரும் காலங்களில் சபாநாயகர் ஒரு மசோதாவை நிதிமசோதா என்று தீர்மானித்து அறிவித்தால், நீதிமன்றம் அதனை சீராய்ந்து மாற்ற முடியும் என்பதே. நிச்சயமாக இது நிதிமசோதா இல்லை எனவே 7 நீதிபதிகள் கொண்ட அமர்வை அணுகி இதனை மாற்ற முயற்சிப்போம்.

மேலும், அரசு, மாநிலங்களவைக்கு இந்த மசோதாவைக் கொண்டு வராவிட்டால் நாங்கள் நிச்சயம் நிதிமசோதாவாக அமல் செய்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்வோம்” என்றார் காங்கிரஸ் தலைவர் கபில் சிபல்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x