Published : 26 Sep 2018 01:09 PM
Last Updated : 26 Sep 2018 01:09 PM

விமானத்தில் காக்பிட் அறைக்குள் போதையில் நுழைந்த பயணி

இண்டிகோ விமானத்தில் விமானியின் காக்பிட் அறைக்குள் நுழைந்த போதைப் பயணியை விசாரரித்தபோது, தனது செல்போனுக்கு சார்ஜ் போடவே அங்கு சென்றதாக வந்த பதிலில் போலீஸார் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து இண்டிகோ விமானத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தது:

மும்பையில் இருந்து கொல்கத்தாவிற்கு திங்கள் இரவு (செப்.24) 6இ-395 விமானம் புறப்பட ஆயத்தமானது. அப்போது 35 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் தன் இருக்கையிலிருந்து எழுந்து நேராக விமானியின் காக்பிட் அறையை நோக்கிச் சென்றார். விமான ஊழியர்களை அலட்சியம் செய்து நேராக அறையில் நுழைந்தார்.

பாதுகாப்பு விதிகள் காரணமாக காக்பிட் அறைக்குள் பயணிகள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே இவர் விமானத்திலிருந்து இறக்கி விடப்பட்டு விமான நிலைய காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். அப்போது அவர் மது அருந்தி போதையில் இருந்தார்.

போலீஸார் அந்த நபரை விசாரணை செய்தனர். அப்போது தன்னுடைய செல்போனுக்கு சார்ஜ் போடவே விமானிகள் அறைக்குச் சென்றதாக அவர் சாக்குபோக்கு சொன்னதாக போலீஸார் தெரிவித்தனர். இதனால் சற்றே அதிர்ச்சியடைந்த போலீஸார் அவர்மீது வேறு எந்த குற்றமும் கண்டுபிடிக்கமுடியவில்லை என்று கூறி அவரை விடுவித்தனர்.

விமானத்தில் பைலட் அறைக்குள் சென்று இடையூறு செய்த விமானி இறக்கிவிடப்பட்ட பிறகு சற்று நேர தாமதத்திற்குப் பின் விமானம் மும்பைக்குச் சென்றது. இவ்வாறு இண்டிகோ விமான செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

கடந்த சனிக்கிழமை அன்று இரவு டெல்லியில் இருந்து பாட்னா சென்ற விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது கழிவறைக்கு பதிலாக விமானத்தின் கதவை திறந்த வாலிபரால் ஏற்பட்ட பரபரப்பு அடங்காத நிலையில் மீண்டும் ஒரு விமானப் பயணியின் இந்த விநோத சம்பவம் நேற்று முன்தினம் நடைபெற்றுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x