Published : 26 Sep 2018 10:56 AM
Last Updated : 26 Sep 2018 10:56 AM

கைதிகளை விலங்குகளைப் போல் நடத்த அனுமதிக்க முடியாது: உச்சநீதிமன்றம் உத்தரவு

''கைதிகளை விலங்குகளைப் போல் நடத்த அனுமதிக்க முடியாது'' என்று தெரிவித்த உச்ச நீதிமன்றம் சிறைச்சாலையில் சீர்த்திருத்தங்களை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள 1,382 சிறைச்சாலைகளில் மனிதாபிமானமற்ற நிலைமைகளை ஏற்படுவதைக் கட்டுப்படுத்த வேண்டுமென தொடுக்கப்பட்ட மனு நேற்று விசாரணைக்கு வந்தது.

நீதிபதி மதன் பி. லோகுர், நீதிபதி எஸ்.அல்பல் நசீர் மற்றும் நீதிபதி தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு இவ்வழக்கை விசாரித்தது.

இவ்வழக்கின் முடிவாக நீதிபதிகள் அளித்த தீர்ப்பு வருமாறு:

நாடு முழுவதும் உள்ள 1,382 சிறைச்சாலைகளில் மனிதாபிமானமற்ற நிலைமைகள் தொடர்வதை ஏற்றுக்கொள்ளமுடியாது. கைதிகளை விலங்குகளைப் போல் நடத்த எவ்வகையிலும் அனுமதிப்பதற்கில்லை. சிறைச்சாலைகளில் நடைபெறும் மனித உரிமை மீறல்களைக் கண்காணித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள ஒரு குழுவை உச்ச நீதிமன்றம் பரிந்துரைக்கிறது.

இக்குழுவில் முன்னாள் நீதிபதிகள் மூவர் இடம்பெறவேண்டும். இவர்கள் தலைமையில் நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகள் கண்காணிக்கப்பட வேண்டும். அதன்பேரில் சிறைச்சாலைகளில் செய்யப்பட வேண்டிய சீர்த்திருத்தங்கள் குறித்து இக்குழு தெரிவிக்க வேண்டும்.

இதில், சிறைச்சாலைகளில் ஏற்படும் இடநெருக்கடி, கைதிகள் அதிகரிப்பு மற்றும் பெண் கைதிகளுக்கு ஏற்படும் பிரச்சினைகளையும் அக்கறையோடு இக்குழு ஆய்வுசெய்யப்பட வேண்டும். சிறைச்சாலைகளில் அனைத்து கைதிகளுக்கு ஏற்படும் பல்வேறு விதமான சிக்கல்களை தொடர்ந்து கவனித்து தீர்வு காணும்விதமாக உடனுக்குடன் ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும்.

இவ்வாறு உச்ச நீதிமன்ற மூவர் நீதிபதிகள் அமர்வு தமது தீர்ப்பில் உத்தரவிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x