Published : 26 Sep 2018 10:51 AM
Last Updated : 26 Sep 2018 10:51 AM

வெள்ளத்தில் வீடு இழந்தவர்களுக்கு மாதந்தோறும் ரூ.10,000 உதவித் தொகை: கர்நாடக அரசு அதிரடி அறிவிப்பு

கர்நாடகாவில் மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பு முற்றிலும் தீரும் வரை வீடு இழந்த குடும்பங்களுக்கு மாதம் தோறும் 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் கடந்த மாதம் கொட்டித் தீர்த்த தென்மேற்கு பருவமழையால் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. காவிரி, ஹாரங்கி உள்ளிட்ட ஆறுகளில் கரைபுரண்டு ஓடிய வெள்ளம் ஆங்காங்கே கிராமங்களில் புகுந்ததால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. நிலச்சரிவால் 16 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம், 2,200 வீடுகள் சேதமடைந்தன.

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் 170 கிமீ அளவுக்கு முற்றிலுமாக சேதமடைந்தது. ஆயிரக்கணக்கான ஏக்கர் காப்பி, தேயிலை தோட்ட பயிர்கள் சேதமடைந்தன. முதல்கட்ட ஆய்வின்படி, 3 ஆயிரம் கோடி ரூபாய் வரை சேதம் ஏற்பட்டுள்ளதாக மாநில அரசு மதிப்பிடப்பட்டது. நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளனர்.

வீடு இழந்தவர்கள் தற்காலிமாக வீடுகட்டி அதில் குடியேறியுள்ளனர். இந்த நிலையில் வெள்ள பாதிப்பு குறித்து ஆய்வு செய்த கர்நாடக வீட்டுவசதித்துறை அமைச்சர் யு.டி.காதர் கூறுகையில் ‘‘வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வீடு இழந்தவர்களுக்கு புதிய வீடு கட்ட மாநில அரசு 6 லட்சம் ரூபாய் வழங்கும். மொத்தம் 49,500 வீடுகள் கட்ட உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கான பணிகளை தொடங்கியுள்ளோம். தற்போது வீடுகளை இழந்து தற்காலிக வீடுகளில் வசித்து வரும் மக்களுக்கு புதிய வீடு கட்டித்தரும் வரை மாதந்தோறும் 10 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கப்படும்’’ எனக்கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x