Published : 24 Sep 2018 08:16 AM
Last Updated : 24 Sep 2018 08:16 AM

வாக்குகளை மையமாக கொண்ட அரசியலால் காணாமல் போனதா மதச்சார்பின்மை?- கன்னியாஸ்திரிகளின் போராட்டத்தால் வெளிச்சத்துக்கு வரும் தகவல்கள்

கேரள மாநிலத்தையே உலுக்கி அண்மையில் முடிவுக்கு வந்த கன்னியாஸ்திரிகளின் போராட்ட களத்தில் பிரதான அரசியல் கட்சிகள், பெண்ணியவாதிகள், சமூக ஆர்வலர்கள் என முக்கியப் புள்ளிகள் பலரையும் பார்க்க முடியவில்லை. இது ‘போலி மதச்சார்பின்மை’ என்று சமூகவலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

கேரளாவின் கோட்டயம் மாவட்டம், குருவிளங்காடு கான்வென்டைச் சேர்ந்த கன்னியாஸ்திரியை, பேராயர் பிராங்கோ மூலக்கல் பாலியல் வன்மத்துக்கு உள்ளாக்கியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பான புகார், பொதுவெளியில் பரவலான பின்பும், பேராயர் பிராங்கோ மூலக்கல் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து கேரள மாநிலம், கொச்சியில் கன்னியாஸ்திரிகள் அனுபமா, ஆல்பி, நீனா ரோஸ், ஜோசபின், ஆன்சிட்டா ஆகியோர் தொடர்போராட்டத்தை துவங்கினர். இந்த போராட்டம் 14 நாட்கள் நடைபெற்றது.

போராட்டம் நடந்து வந்த நிலையில், பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மறை மாவட்ட பேராயராக பணியாற்றி வந்த, பிராங்கோ மூலக்கல்லை விசாரணைக்காக கேரள போலீஸார் அழைத்து வந்தனர். 21-ம் தேதி அவரை கைதும் செய்தனர். கைதினைத் தொடந்து கடந்த சனிக்கிழமை போராட்டத்தை கைவிட்டனர் கன்னியாஸ்திரிகள். போராட்டம் ஜெயித்த கதை இது. ஆனால் இப்போராட்டத்தில் மதச்சார்பின்மை பேசும் பலரும் கலந்து கொள்ளாமலும், முன் நிற்காமலும் ‘ஜூட்’ விட்டது தான் இப்போது இதில் கவனிக்க வைத்துள்ளது.

அரசியல் நெருக்கடி!

கேரளத்தை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி பேராயரை கைது செய்வதில் தொடக்கத்தில் இருந்தே தெளிவாகவே இருந்தது. ஆனால் அதை முதலிலேயே செய்திருந்தால் அதை வைத்து காங்கிரஸ் அரசியல் செய்து, கிறிஸ்தவ வாக்குகளை அறுவடை செய்ய காய் நகர்த்தியிருக்கும் என்கின்றனர் கேரள அரசியல் கணக்கர்கள்.

அதனாலேயே தொடக்கத்திலேயே கைது செய்யவில்லை என்றும் பேச்சு உலா வருகிறது. அதேநேரம் கேரள மாநில மார்க்சிஸ்ட் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன், ‘‘இடதுசாரி இயக்கம் எப்போதும் பாதிக்கப்பட்ட பெண்ணின் பக்கம்தான் நிற்கும். அதேநேரம் மதம் சார்ந்த தீவிரவாதமும் இதனுள் புகுந்துள்ளது’’ என்று கருத்து தெரிவித்திருந்தார்.

கேரள மாநில காங்கிரஸ் தலைவரான முல்லப்பள்ளி ராமச்சந்திரன், ‘‘பேராயர் தவறு செய்திருந்தால் தண்டிக்கட்டும். ஆனால் அதற்காக ஒட்டுமொத்த சபையையே குற்றம் சொல்ல முடியாது’’ என தெரிவித்திருந்தார். கேரள முன்னாள் முதல்வரும், மூத்த மார்க்சிஸ்ட் தலைவருமான அச்சுதானந்தன், ஆரம்பத்தில் இருந்தே பேராயரை கைது செய்ய வேண்டும் என பேசி வந்தார். இதேபோல் கேரள மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் வி.எம்.சுதீரனும் பிஷப்புக்கு எதிராக பேசி வந்தனர். ஆனால் இவர்கள் எல்லாம் இப்போது கட்சிக்குள் அதிகாரமிக்க பதவியில் இல்லை. இதையெல்லாம் விட ஒருபடி மேலே சென்ற எம்.எல்.ஏ பி.சி.ஜார்ஜ், ‘‘கன்னியாஸ்திரியை பாலியல் தொழிலாளி’’ என விமர்சித்து சர்ச்சையில் சிக்கினார். அதிகாரமிக்க பதவியில் இருப்பவர்களோ, குற்றவாளியை கைது செய்ய வேண்டும்’’ என பேசியதைத் தாண்டி வேறு எதைப் பற்றியும் வாய் திறக்கவில்லை.

எட்டிக் கூட பார்க்கவில்லை!

கொச்சினில் களத்தில் இருந்த கன்னியாஸ்திரி ஒருவர் இது குறித்து நம்மிடம் கூறுகையில், ‘‘கொச்சினில் நடந்த போராட்டத்தின் போது பிரதான அரசியல் கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் யாரும் வரவில்லை. பத்து நாள் கள் போராட்டம் கடந்த நிலையில், இப்படியே போராட்டம் தொடர்ந்தால் மாநிலம் முழுவதும் போராட்டம் நடக்கும் வாய்ப்பு இருந்ததனால் கைது செய்துள்ளனர்.

எங்களுக்கு எந்த அரசியல் கட்சியும் ஆதரவு தெரிவித்து களத்துக்கு வந்து கைகோர்க்கவில்லை. தனிப்பட்ட குரல்களாக சிலர் பேசினர். எஸ்.டி.பி.ஐ, ஜமாத் இ இஸ்லாம், விஸ்வ இந்து பரிஷித் உள்ளிட்ட சில அமைப்புகள் மட்டும் வந்து ஆதரவு தெரிவித்தன” என்கிறார். இதேபோல் நடிகரும், இயக்குநருமான ஜோய் மேத்யூ, ஓய்வு பெற்ற நீதிபதி கெமால் பாட்ஷா, நடிகை ரீமா கல்லிங்கல், நடிகை மஞ்சுவாரியர், இயக்குநர்கள் ஆசிக் அபு, மேஜர் ரவி என இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து களமாடியவர்களையும் விரல்விட்டு எண்ணிவிடலாம்.

குமரியில் இருந்து போராட்ட களத்துக்கு!

கன்னியாகுமரியில் இருந்து கேரள மாநிலம் கொச்சியில் நடந்த போராட்டத்துக்கு சென்று கலந்து கொண்டவர் வழக்கறிஞர் திருத்தமிழ் தேவனார். தெற்கு எழுத்தாளர் இயக்கத்தின் தலைவரான இவர் இதுகுறித்து நம்மிடம் கூறுகையில், ‘‘வாக்குவங்கியை மட்டுமே மையமாகக் கொண்டு, கேரளத்தில் அரசியல் கட்சிகள் இதில் கள்ள மவுனம் காட்டின. அதேபோல் மதச்சார்பின்மை பேசும் பெண்ணிய அமைப்புகள் உள்ளிட்ட பலரும் களத்துக்கு வரவில்லை. இவ்வளவு ஏன் கேரளத்தில், பாவமன்னிப்பு கேட்கச் சென்ற பெண் ஒருவரை, போதகர் பாலியல் வன்மத்துக்கு உள்ளாக்கியதை கண்டித்து, ‘‘பெண்களையும் குருக்களாக்க வேண்டும்” எனக் கேட்டு நாகர்கோவிலில் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். எங்கள் போராட்டத்தில் எப்போதும் பெண்கள் அதிக அளவில் வருவர். ஆனால் கிறித்தவர்களான அவர்கள் அந்த போராட்டத்துக்கு வரவே இல்லை.

பெண் போதகர் பாவ மன்னிப்பு

பெண்களின் புகார்களுக்கு பெண் காவலர்கள் விசாரிப்பது போல், பெண்களுக்கு பெண் போதகரே பாவமன்னிப்பு வழங்க வேண்டும். அதற்கு பெண்களும் பாதிரியார் முதல் பிஷப் வரை பதவிக்கு வர வேண்டும். கேரள கன்னியாஸ்திரி வழக்கும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. பொதுவாகவே கன்னியாஸ்திரி தரப்பில் இருந்து இப்படி வரும் புகாரின் போது, சத்தமின்றி கன்னியாஸ்திரிகளை நீக்கிவிடுவார்கள். ஆனால் இப்போது வீதிக்கு வந்து போராடியதில் பிஷப் கைது செய்யப்பட்டு இருக்கிறார். இது கன்னியாஸ்திரிகளே நடத்திய போராட்டம். ஆனால் கேரளத்தில் மதச்சார்பின்மை பேசும் பலரையும் களத்தில் காணவில்லை”என்றார்.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குகிறது. கன்னியாஸ்திரிகளுக்கு குரல் கொடுக்காமல் வாக்குப் பெட்டியில் கண் வைத்தவர்கள், எந்த திருச்சபையில் ‘‘பாவ மன்னிப்பு” கேட்டுக் கொண்டிருக்கிறார்களோ!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x