Last Updated : 23 Sep, 2018 04:58 PM

 

Published : 23 Sep 2018 04:58 PM
Last Updated : 23 Sep 2018 04:58 PM

என்னுடைய நாட்டில் உள்ள ஏழை மக்கள் வசதிபடைத்தவர்கள் போல் அனைத்து வசதிகளையும் பெற வேண்டும்: மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தைத் தொடங்கி வைத்து மோடி பேச்சு

ஏழையின் பெயரைச் சொல்லி 50 ஆண்டுகளாக ஆட்சி செய்தவர்கள் ஏழைகளுக்கு எதுவும் செய்யவில்லை என்று பிரமதர் மோடி, காங்கிரஸ் கட்சியை மறைமுகமாக தாக்கிப் பேசினார்.

தேசிய மருத்துவக் காப்பீடு திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் இன்று தொடங்கி வைத்தார். புதிய திட்டத்தில் ஒரு குடும்பத்தில் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு கிடைக்கும். நாடு முழுவதும் 50 கோடிக்கும் மேற்பட்டோர் பயன் பெறுவார்கள்.

மத்திய அரசின் இந்த முன்னோடித் திட்டத்துக்கு, `பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டம்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 10 கோடி குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு அளிக்கப்பட உள்ளது. அரசு மருத்துவமனைகள் மற்றும் இத்திட்டத்தில் இணைந்துள்ள அனைத்துத் தனியார் மருத்துவமனை களிலும் பயனாளிகள் சிகிச்சை பெறலாம்.

வயது வரம்பு மற்றும் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை வரம்பின்றி ஒரு குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் இத்திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள். தமிழகம் உட்பட 31 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இந்த திட்டம் அமலுக்கு வருகிறது.

முன்னதாக இன்று காலையில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி சாய்பாசா, கொடேர்மா நகரங்களில் இரு மருத்துவக்கல்லூரிகள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டினார். அதன்பின், பிரபாத் மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பயனாளிகளுக்கு காப்பீடுஅட்டைகளை வழங்கினார். அதன்பின் அவர் பேசியதாவது:

பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா “ஆயுஷ்மான்” பாரத் திட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. உலகிலேயே அரசின் சார்பில் அளிக்கப்படும் மிகப்பெரிய சுகாதாரத் திட்டம். இந்த திட்டத்தில் பயன்பெறும் பயனாளிகள் எண்ணிக்கை கனடா, மெக்சிக்கோ, மற்றும் அமெரிக்காவின் மக்கள் தொகைக்கு இணையானது.

இதற்கு முன் ஆட்சியில் இருந்த கட்சி 50 ஆண்டுகளாக ஏழையின் பெயரைச் சொல்லி வாக்கு வங்கிக்காக ஆட்சி செய்தது. ஆனால், ஏழை மக்களுக்காக ஒன்றும் செய்யவில்லை. ஆனால், பாஜக ஏழை மக்களுக்கு அதிகாரத்தை பெற்றுத்தர வேண்டும் என்ற முனைப்புடன் பணியாற்றுகிறது. 1300 வகையான நோய்களுக்கு இந்த திட்டத்தின் மூலம் சிகிச்சை பெறலாம்.

இந்த திட்டத்தை மக்கள் மோடிகேர் என்றும் பல்வேறு பெயர்களிலும் அழைக்கிறார்கள். என்னைப் பொருத்தவரை மக்களுக்குச் சேவை செய்ய கிடைத்த வாய்ப்பாகும். சமூகத்தில் நலிந்த பிரிவில் இருப்பவர்கள் இந்தத் திட்டத்தில் பயன் பெற முடியும்.

50 கோடி மக்கள் பெறவதற்காக இந்தி திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்திய அதிகாரிகளுக்குப் பாராட்டுக்கள் தெரிவிக்கிறேன். இந்த அதிகாரிகளுக்கு 50 கோடி மக்களின் ஆசி கிடைக்கும்.

இனிமேல் ஏழைகள் மருத்துவமனைகளுக்கு செல்கக்கூடாது நோயால் அவதிப்படக்கூடாது என்று வேண்டிக்கொள்கிறேன். அவ்வாறு மருத்துவமனைக்குச் சென்றாலும், அவர்களுக்கு ஆயுஷ்மான் காப்பீடுதிட்டம் சேவை செய்யும். என்னுடைய நாட்டில் உள்ள ஏழை மக்கள் வசதிபடைத்தவர்கள் போல் அனைத்து வசதிகளையும் பெற வேண்டும்.

இந்தத் திட்டம் சமூக, சாதி அடிப்படையில் அமைந்தது அல்ல. உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் உதாரணமாக இந்த திட்டம் இருக்கும். ஒவ்வொரு இந்தியரும் இந்தத் திட்டத்தின் பயனை அடை தகுதி பெற்றவர்கள்.

இந்த திட்டத்தை அறிந்து கொள்ள இலவச தொலைப்பேசி எண் கொடுக்கப்பட்டுள்ளது அதன்மூலம் சந்தேகங்களுக்கு விளக்கம் பெறலாம். நாட்டில் 2-ம் தர மற்றும் 3-ம் தர நகரங்களில் இந்தத் திட்டம் மூலம் 2,500 மருத்துவமனைகள் உருவாகும். வேலைவாய்ப்பு உருவாகும். நாட்டில் மொத்தம் 13 ஆயிரம் மருத்துவமனைகள் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் சேர்ந்துள்ளன

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x