Published : 23 Sep 2018 02:13 PM
Last Updated : 23 Sep 2018 02:13 PM

‘மோடியை அகற்ற பாகிஸ்தானுடன் இணைந்து செயல்படுகிறாரா ராகுல் காந்தி?’- அமித் ஷா சந்தேகம்

பிரதமர் மோடியை அகற்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாகிஸ்தானுடன் இணைந்து செயல்படுகிறாரா என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா புதிய சந்தேகத்தை கிளப்பியுள்ளார்.

பிரான்ஸ் நிறுவனத்துடன் 36 ரபேல் போர் விமானங்களை வாங்க டசால்ட் நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளது என்று காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தது. ரபேல் போர் விமான தயாரிப்பை மத்திய அரசின் ஹெச்யுஎல் நிறுவனத்துக்கு வழங்காமல் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிபென்ஸ் வழங்கியது குறித்தும் காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பி வந்தது.

இந்நிலையில், பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் ஹோலண்டே, இந்திய அரசு கூறியதால், ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ஒப்பந்தத்தை அளித்தோம் என்று பிரான்ஸ் பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டி அளித்தார். இந்த விவகாரம் பெரும் கொந்தளிப்பையும், மத்திய அரசுக்கு பெரும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியது.

பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என்றும், ரூ.1.30 லட்சம் கோடி ஊழல் செய்தார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். எதிர்க்கட்சிகளும் கடுமையாக மத்திய அரசை விமர்சித்தன.

பிரதமர் மோடியும், அனில் அம்பானியும் சேர்ந்து ராணுவத்தினர் மீது சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்திவிட்டார்கள். இந்தியாவின் ஆன்மாவை மோடி அவமதித்துவிட்டார் என்று ராகுல் காந்தி ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

இதனை பாகிஸ்தானின் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பவத் ஹூசைன் சவுத்ரி ரீட்விட் செய்திருந்தார். அதில் ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டுகளுக்கு பாஜக பதில் அளிக்க வேண்டும். மோடியைப் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்த ட்விட்டைப் பார்த்த பாஜக தேசிய தலைவர் அமித் ஷா பல்வேறு சந்தேகங்களை ட்விட்டரில் கேட்டுள்ளார். அவர் தனது ட்விட்டில் கூறுகையில், "ராகுல் காந்தியும் மோடியை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறார். இப்போது ராகுலின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு பாகிஸ்தானும் ஆதரவாகக் குரல் கொடுக்கிறது. பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் கட்சி பாகிஸ்தானுடன் இணைந்து, சர்வதேச அளவில் மிகப்பெரிய கூட்டணியை அமைக்கிறதா? என்ற சந்தேகம் எழுகிறது" எனத் தெரிவித்துள்ளார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x