Last Updated : 23 Sep, 2018 01:36 PM

 

Published : 23 Sep 2018 01:36 PM
Last Updated : 23 Sep 2018 01:36 PM

ரபேல் ஒப்பந்த விவகாரம்: ஹாலண்டே முன்னுக்குப் பின் முரணாகப்பேசியுள்ளது கண்கூடு; டசால்ட் நிறுவனம் ரிலையன்ஸை தானாகவே தேர்வு செய்தது: அருண் ஜேட்லி நீண்ட விளக்கம்

ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக ரிலையன்ஸ் டிபன்ஸ் விவகாரம் சர்ச்சையாகியுள்ள நிலையில் முன்னாள் பிரான்ஸ் அதிபர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியுள்ளார், என்றும் டசால்ட் ஏவியேஷன் நிறுவனம் ரிலையன்ஸை தங்கள் கூட்டாளியாக தாங்களாகவேதான் தேர்ந்தெடுத்தனர் என்றும் நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

ஆகவே இதில் இந்திய அரசுக்கோ, பிரான்ஸ் அரசுக்கோ எந்த வித தொடர்பும் இல்லை என்று கூறுகிறார் அருண்ஜேட்லி.

இந்திய அரசின் விருப்பத்துக்கேற்பத்தான் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனத்தைக் கூட்டாளியாகத் தேர்ந்தெடுத்ததாகக் கூறப்போக கடும் சர்ச்சைகளும், பாஜக மீது கடும் ஊழல் புகார்களும் வெளிவரத் தொடங்கின.

இந்நிலையில் அருண் ஜேட்லி தன் முகநூல் பக்கத்தில் ‘A Questionable Statement Which Circumstances & Facts Demolish’என்ற தலைப்பின் கீழ், ரபேல் விவகாரத்தில் பிரான்ஸ் அரசும், டசால்ட் ஏவியேஷன் நிறுவனமும் முன்னாள் அதிபர் ஹாலண்டேயின் கூற்றுகளை திட்டவட்டமாக மறுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தன் பதிவில் விளக்கியிருப்பதாவது:

இந்திய அரசு ஒப்பந்தமிட்ட பிறகே ரிலியன்ஸ் டிபன்ஸ் இந்தக் காட்சிக்கு வருகிறது. மேலும் ஹாலண்டே முதலில் இந்திய விருப்பப்படி ரிலையன்ஸை தேர்வு செய்ததாகக் கூறியவர் பிறகு அடுத்த கூற்றிலேயே, ரிலையன்ஸுக்காக அரசு லாபி செய்ததா என்று தனக்குத் தெரியவில்லை என்றும் டசால்ட் நிறுவனம் தன் கூட்டாளியை தானே தேர்வு செய்து கொண்டது என்றும் தெரிவித்துள்ளார். உண்மை இருவேறு விதமாக எப்படி இருக்க முடியும்? பிரான்ஸ் முன்னாள் அதிபர் முன்னுக்குப் பின் முரணான கூற்றைத் தெரிவித்திருக்கிறார்.

இதில் இந்திய விருப்பத்திற்கேற்பவே ரிலையன்ஸ் முன்மொழியப்பட்டது என்ற ஹாலண்டேயின் முதல் கூற்றை பிரான்ஸ் அரசும், டசால்ட் நிறுவனமும் மறுத்துள்ளது. தங்களது கூட்டாளி யார் என்பதை டசால்ட் நிறுவனமே தேர்ந்தெடுத்துள்ளது, அரசு அல்ல. மேலும் பல பொதுத்துறை நிறுவனங்களுடனும், தனியார் துறை நிறுவனங்களுடனும் பலதரப்பு ஒப்பந்தங்கள் செய்து கொண்டதாக தெரிவித்துள்ளனர், மேலும் இந்த ஒப்பந்தங்கள் நிறுவனத்தின் முடிவே என்றும் தெரிவித்துள்ளது.

பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டே தனக்கு எதிராக வைக்கப்பட்ட கருத்துக்கு எதிராக இதனைத் தெரிவித்திருக்கலாம் அதாவது ரிலையன்ஸ் டிபன்ஸ் தொடர்பாக ஆதாயம் தரும் இரட்டை நலன்கள் இருப்பதான குற்றச்சாட்டில் ஹாலண்டே தன் எதிர்நிலைப்பாட்டைத் தெரிவித்திருக்கலாம்.

தனிநபர்கள் கூறும் கூற்றுகளின் சரித்தன்மையை கேள்வி கேட்கலாம் ஆனால் சூழ்நிலைகல் பொய் சொல்லாது. இது கீழ் வரும் உண்மைகள் மூலம் புரியவரும்:

1. 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதில் டசால்ட் ஏவியேஷனுக்கும் இந்திய அரசுக்கும் இடையே கூட்டுறவு எதுவும் இல்லை. இது இருநாட்டு அரசுகளுக்கு இடையேயான ஒப்பந்தம். இதன்படி முழு தயாரிப்பும் இந்திய விமானப்படைக்கு பயன்படுத்தும் நிலையில் வருகிறது. இந்தியாவில் இது தொடர்பாக எந்த ஒரு உற்பத்தி நடவடிக்கையும் இல்லை. ஆகவே இதில் ‘கூட்டாளி’ என்ற சர்ச்சையை ஏற்படுத்த வழியே இல்லை.

2. ரிலியன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 2012ம் ஆண்டு பிப்ரவரி மாதம் டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. இதனை பிடிஐ செய்தி நிறுவனம் 12.2.2012-ல் வெளியிட்டுள்ளது. இந்தக் கட்டத்தில்தான் 126 ரபேல் போர்விமானத்துக்கான ஒப்பந்தத்தின் படி 18 விமானங்கள் பிரான்சிலும் 108 இந்தியாவிலும் உற்பத்தி செய்யப்படுவதாக ஒப்பந்தம் செய்யப்பட்டது. இது அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசினால் பரிசீலனையின் இறுதிக் கட்டத்தில் இருந்தது. எனவே ராகுல் காந்தியின் தவறாக வைக்கப்படும் விமர்சனம் அப்போதைய காங்கிரஸ் தலைமை ஐமுகூவின் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கும் பொருந்தும்.

3. தங்கள் கூட்டாளி நிறுவனத்தை டசால்ட் நிறுவனமே தேர்வு செய்தது. இதில் இந்திய அரசுக்கோ, பிரான்ஸ் அரசுக்கோ எந்த வித சம்பந்தமும் இல்லை.

4. 30.8.2018 அன்று ராகுல் காந்தி ட்வீட் செய்யும் போது, “உலகளாவிய ஊழல், இந்த ரபேல் போர் விமானம் நீண்ட துரம் செல்லும் வேகமாகச் செல்லும் ஆனால் அதே வேளையில் அடுத்த 2 வாரங்களில் பாதாள அறையைத் தகர்க்கும் குண்டுகளையும் வீசும்” என்றார். இது ஒன்றும் தற்செயல் அல்ல. பிரான்ஸ் முன்னாள் அதிபரின் முதல் கூற்று (இந்திய அரசின் விருப்பத்திற்கேற்ப ரிலையன்ஸ் தேர்வு) ராகுல் காந்தியின் கணிப்புடன் சிந்து பாடியுள்ளது.

5. முதலில் ஹாலண்டே இந்திய விருப்பத்திற்கேற்பவே ரிலையன்ஸ் டிபன்ஸ் பெயர் தேர்வு செய்யப்பட்டது என்றார் பிறகு இந்தியா ரிலையன்ஸுக்காக வாதாடியதா என்று தனக்குத் தெரியாது என்றும் கூட்டாளிகளை நிறுவனமே தேர்வு செய்து கொள்ளும் என்றார், இதுவும் ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனம் 22.9-1018 அன்று வெளியிட்ட்ட செய்தியாகும்.

6. ராகுல் காந்தி, இந்திய ராணுவ வீரர்களின் நலன்கள் சமரசம் செய்யப்பட்டுள்ளது என்று மிக அபத்தமான ஒன்றை தெரிவித்துள்ளார். யாரால்? ஒப்பந்தத்தை தாமதபடுத்திய ஐமுகூ அரசா, அல்லது மலிவான விலைக்கு ரபேல் ஒப்பந்தம் செய்த தேஜகூ ஆட்சியா? யாரால் நலன்கள் சமரசம் செய்து கொள்ளப்பட்டது?

முடிவு:

2012 முதலே ரிலையன்ஸ் குழுமத்தின் ஒரு நிறுவனம் இந்த ஒப்பந்தத்தின் அங்கமாக இருந்தது. அது ராணுவ தளவாட உற்பத்தியிலிருந்து விலகியது. இன்னொரு ரிலையன்ஸ் குழுமம் ஏற்கெனவே ராணுவத் தளவாட உற்பத்தியில் அங்கம் வகிப்பதாகும். ஆனால் இவர்கள் ரபேல் ஒப்பந்தத்தில் கூட்டளி அல்ல. இந்தக் குழுமத்திற்கு இந்திய அரசுடனோ, பிரான்ஸ் அரசுடனோ ஒப்பந்தம் எதுவும் இல்லை. பல நிறுவனங்களில் ஒன்றாக இந்த நிறுவனத்தை இந்திய அரசு தேர்வு செய்யவில்லை. பிரான்ஸும் தேர்வு செய்யவில்லை. ஹாலண்டே இப்போது கூறுவது போல் ‘கூட்டாளிகள் தங்களைத் தாங்களே தேர்வு செய்து கொள்கின்றனர்’இவரது இந்தக் கூற்று இவரது முதல் கூற்றான இந்திய அரசின் ஈடுபாடு குறித்த கூற்றுக்கு முரணாக உள்ளது, இதனை பிரான்ஸ் அரசும் டசால்ட்டுமே மறுத்துள்ளன. உண்மைகளும் இதற்கு முரணாகவே உள்ளன. கனடா, மாண்ட்ரீலில் ஏ.எஃப்.பிக்குத் தெரிவிக்கையில் இந்திய அரசு ரிலையன்ஸுக்காக லாபி செய்ததா என்று தனக்கு தெரியவில்லை என்றும் கூட்டாளிக்ள் தாங்களாகவே தேர்வு செய்து கொள்கின்றனர் என்றும் கூறியது இவரது முதல் கூற்றை மேலும் கேள்விக்குரியதாக்குகிறது.

இவ்வாறு தன் முகநூல் பதிவில் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x