Published : 23 Sep 2018 08:44 AM
Last Updated : 23 Sep 2018 08:44 AM

பிஜு ஜனதா தள ஆட்சியில் ஊழல் மலிந்த மாநிலமானது ஒடிசா: பிரதமர் நரேந்திர மோடி தாக்கு

ஒடிசாவில் ஆளும் பிஜு ஜனதா தள ஆட்சியில் லஞ்சமும், ஊழலும் மலிந்து காணப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டினார்.

ஒடிசா சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடை பெறவுள்ளது. இதனை முன்னிட்டு, அங்கு பல்வேறு நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைப்பதற் காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று காலை ஒடிசாவுக்கு வருகை தந்தார். புவனேஸ்வர் சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை, ஒடிசா மாநில பாஜக நிர்வாகிகள் வரவேற்றனர்.

அதன் பின்னர், அங்கிருந்து ஜார்சுகுடா நகருக்கு ஹெலிகாப் டர் மூலம் சென்ற மோடி, அங்கு ரூ.175 கோடியில் அமைக்கப்பட் டுள்ள விமான நிலையத்தை திறந்து வைத்தார். மத்திய அரசின் உதான் திட்டத்தின் கீழ் அமையப் பெற்றுள்ள இந்த விமான நிலையத்துக்கு, சுதந்திரப் போராட்ட வீரர் சுரேந்திர சாயின் பெயர் வைக்கப்படும் என அவர் அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, கஜ்ரன் பாஹல் கிராமத்தில் அமைக்கப் பட்டுள்ள நிலக்கரிச் சுரங்கத்தை நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் மோடி, ஜார்சுகுடா - பாரபலி - சர்தேகா மார்க்கத்திலான புதிய ரயில் பாதையையும் தொடங்கி வைத்தார். இதனையடுத்து, அனுகுல் மாவட்டத்தில் உள்ள தால்சேர் பகுதியில் ரூ.13 ஆயிரம் கோடியில் அமைக்கப்படவுள்ள உரத் தொழிற்சாலைக்கும் மோடி அடிக்கல் நாட்டினார்.

இதன் தொடர்ச்சியாக, அங்கு பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் மோடி பேசியதாவது:

பாஜக தலைமையிலான ஆட்சியின் கீழ், பல்வேறு துறைகளில் இந்தியா அபரிமிதமான வளர்ச்சியை அடைந்து வருகிறது. உலக அளவில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார சக்தி யாக இந்தியா உருவெடுத்துள் ளது.

ஒருபுறம், இந்தியா வளர்ச்சிப் பாதையில் சென்று கொண் டிருக்க, மற்றொரு புறம், ஒடிசா அனைத்து நிலைகளிலும் பின்தங்கி காணப்படுவது வேதனையளிக் கிறது. ஒடிசாவில் ஆளும் பிஜு ஜனதா தள ஆட்சியில் லஞ்சமும், ஊழலுமே தலைவிரித்தாடுகிறது. யார் லஞ்சம் கொடுக்கிறார்களோ அவர்களுக்கே வளர்ச்சித் திட்டங்களின் பலன் கிடைக்கிறது. பணம் வழங்க முடியாத ஏழை களுக்கு, அந்தப் பலன்கள் மறுக் கப்படுகின்றன. இதுதான் நீங்கள் (பிஜு ஜனதா தள அரசு) வழங்கும் நல்லாட்சியா?

எந்த ஒரு ஒப்பந்தமானாலும், திட்டமானாலும் அவற்றில் எவ்வளவு தங்களுக்கு ‘கமிஷன்’ கிடைக்கிறது என்பது பற்றி மட்டுமே மாநில அரசு சிந்திக்கிறது. அதேபோல், எந்த மக்கள் நலத்திட்டமும் இங்கு உடனடியாக செயல்படுத்தப்படுவது கிடையாது. லஞ்சமும், தாமதமும்தான் பிஜு ஜனதா தள அரசின் அடையாள மாகவே மாறிவிட்டது.

ஒடிசாவில் ஒரு ரூபாய்க்கு 1 கிலோ அரிசி வழங்கப்படுவதாக முதல்வர் நவீன் பட்நாயக் பெருமை பேசுகிறார். ஆனால், மத்திய அரசின் நிதி இல்லாமல் அந்தத் திட்டத்தை மாநில அரசால் செயல்படுத்தவே முடியாது என்பதுதான் நிதர்சனம். மாநிலத் தில் உள்ள 85 லட்சம் ஏழை மக்களைக் கருத்தில்கொண்டு, அத்திட்டத்துக்கு மாதந்தோறும் ரூ.450 கோடி நிதியை மத்திய அரசு வழங்கி வருகிறது. ஆனால், இத்திட்டத்துக்கு மத்திய அரசு நிதி வழங்குவதை பிஜு ஜனதா தள அரசு திட்டமிட்டு மறைத்து வருகிறது.

ஒடிசாவின் வளர்ச்சிக்காக மத்திய அரசு இன்று பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கியுள் ளது. இந்த வளர்ச்சி தொடர வேண்டுமானால், மாநிலத்தில் ஆட்சி மாற்றம் வர வேண்டும். அதற்கு, மக்களின் நலனையே தன்னலமாக கொண்ட பாஜக ஆட்சி மலர, மக்கள் உறுதியேற்க வேண்டும். இவ்வாறு நரேந்திர மோடி பேசினார்.

சத்தீஸ்கர் வருகை

ஒடிசாவில் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு, சத்தீஸ்கர் மாநிலத்துக்குச் சென்ற மோடி அங்கு மக்கள் மத்தியல் உரையாற்றினார். அப்போது, மத்திய, மாநில அரசுகளின் முயற்சியால் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கத்திலிருந்து சத்தீஸ்கர் மீண்டுள்ளதாக அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x