Last Updated : 22 Sep, 2018 09:57 PM

 

Published : 22 Sep 2018 09:57 PM
Last Updated : 22 Sep 2018 09:57 PM

‘மோடி நேர்மையின் அடையாளம்: ராகுல் தன்முகத்தில் தானே கரியைப் பூசிக்கொண்டார்’: பாஜக பதிலடி

பிரதமர் மோடி நேர்மையின் அடையாளம், ரபேல் போர்விமானத்தில் எந்த விதமான ஊழலும் நடக்கவில்லை. பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டே மோடியை அவதூறாகப் பேசி இருந்தால் என்ன நெருக்கடியில் அவர் அவ்வாறு பேசினார் என எங்களுக்குத் தெரியாது என மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் பதிலடி கொடுத்தார்.

ரபேல் போர் விமானக் கொள்முதல் ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு இந்தியாதான் ஒப்பந்தம் கொடுக்க கூறியது என்று பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் ஹோலண்டே கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல், மோடியை திருடன் என்று பிரான்ஸ் அதிபர் ஹோலண்டே குற்றம்சாட்டினார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்து, மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதற்குப் பதில் அளித்து மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:

பிரதமர் மோடி நேர்மையின் சின்னம், அடையாளம். சுதந்திர இந்தியாவில் எந்தக் கட்சியின் தலைவரும் பிரதமரை இதுபோன்று மரியாதைக்குறைவான வார்த்தைகளால் பேச முடியாது. ராகுல் காந்தியிடம் இருந்து இதற்கு மேல் வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது. நாம் தகுதியே இல்லாதவர்களிடம் இருந்து திறமையையோ அல்லது தகுதியையோ எதிர்பார்க்க முடியாது.

பிரதமர் மோடி மீது தவறான குற்றச்சாட்டுகளைக் கூறி ராகுல் காந்தி, தனது முகத்தின் மீது தானே கறுப்பு பெயின்டை பூசிக்கொண்டுள்ளார்.

மத்திய அரசுக்கு பல்வேறு அழுத்தங்கள் கொடுப்பதன் மூலம் ராகுல் காந்தி பாகிஸ்தானுக்குத்தான் உதவுகிறார். அனைத்துவிதமான ஆயுதக்கொள்முதல் விவகாரங்களையும் வெளிப்படையாக்கி, ராகுல் காந்தி பாகிஸ்தானுக்கு உதவுகிறார். என்னைப் பொறுத்தவரை எதிரிகளின் கைப்பாவையாக ராகுல் செயல்படுகிறார்.

ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி, பெயிலில் ராகுல் காந்தியும், அவரின் தாயும் வெளியேவந்துள்ளார்கள் அவர்களிடம் இருந்து நாம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும். தன்னுடைய மைத்துனர் மீது ஊழல் குற்றச்சாட்டு இருக்கிறது ஆனால், ராகுல் அமைதியாக இருக்கிறார், அவரின் குடும்பமே போபர்ஸ் பீரங்கி ஊழல் சிக்கியது அது குறித்தும் அவர் பேசவில்லை. ராகுல் காந்தியின் வார்த்தைகளை நாடும் நம்பப்போவதில்லை, உலகமும் நம்பப்போவதில்லை.

ராகுல் காந்தியின் குடும்பமே ஊழல்கறை படிந்தது. மோடியின் அரசு , ஊழலைக் கட்டுப்படுத்தி வருகிறது. ராகுலிடம் பிரச்சினை இருக்கிறது, நாட்டில் ஊழல் உருவாக காங்கிரஸ்தான் காரணம். பிரான்ஸின் டசால்ட் நிறுவனமும், ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனத்துக்கும் ஒப்பந்தம் கடந்த 2012-ம்ஆண்டு காங்கிரஸ் ஆட்சிக்காலத்திலேயே போடப்பட்டுள்ளது. ராகுல் காந்தி யார் எழுதிக்கொடுத்ததைப் படித்துள்ளார். அவர் சரியாக வீட்டுப்பாடங்களைச் செய்ய வேண்டும்

இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x