Published : 22 Sep 2018 03:38 PM
Last Updated : 22 Sep 2018 03:38 PM

இது முதல்முறை: ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்த கேரள இளைஞர்; பிடித்துக் கொடுத்தது ஆப்கானிஸ்தான்

கேரளாவில் இருந்து ஈராக் சென்று ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்த கேரள இளைஞரை, ஆப்கானிஸ்தான் அரசு கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளது. குற்றவாளிகளை ஒப்படைக்கும் ஒப்பந்த்தின்படி முதன்முறையாக இதுபோன்ற நாடுகடத்தும் சம்பவம் நடந்துள்ளது.

கேரளாவை சேர்ந்த இளைஞர்கள் சிலர் திடீரென காணாமல் போன நிலையில் அவர்கள் ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்ததாக தகவல் வெளியானது. ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஐஎஸ் அமைப்பு அந்நாட்டு அரசுகளுக்கு எதிராக நடத்தி வரும் போரில் இவர்கள் இணைந்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு ஏற்கனவே விசாரணை நடத்தி வருகிறது. இவர்களில் சிலர் சிரியா சென்று ஐஎஸ் அமைப்பில் இணைந்ததை தேசிய புலனாய்வு அமைப்பும், கேரள போலீசாரும் ஏற்கனவே உறுதிப் படுத்தினர். ஐஎஸ் அமைப்பில் இணைந்த, கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல் குயாம் (25), அப்துல் மனாப் (30), ஷபிர் முகமது (33), சுகைல் (18), ஷபான் (17) ஆகிய ஐந்து பேர் பற்றிய தகவல்களையும் கேரள போலீஸார் வெளியிட்டனர்.

கேரளாவில் இருந்து ஈராக் சென்ற இளைஞர்களில் நஷிதுல் ஹம்ஸாபர் (வயது 26) என்பவரும் ஒருவர். ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை பார்த்து வந்த ஹம்ஸாபர் 2017-ம் ஆண்டு கேரளா திரும்பினார். ஒரு சில நாட்களில் தனது நண்பரை அழைத்துக்கொண்டு சுற்றுலா விசாவில் மஸ்கட் சென்றார்.

பிறகு அங்கிருந்து ஈராக சென்ற அவர்கள் ஐஎஸ் அமைப்பில் இணைந்துள்ளனர். ஈராக்கில் இருந்து பாதுகாப்பு படையினருக்கு தெரியாமல் மறைந்து எல்லையை தாண்டி ஆப்கானிஸ்தான் செல்ல முற்பட்டனர். அங்கு அவர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டு இருந்தது.

இதனிடையே ஹம்ஸாபரின் நண்பர், விவரம் வீட்டுக்கு தெரிந்ததால் பயந்து திரும்பியுள்ளார். ஆனால் ஹமாஸ்பர் மட்டும் திட்டமிட்டபடி எல்லையை கடந்து ஆப்கானிஸ்தான் சென்றுள்ளார். அங்கு மறைவிடத்தில் ஆயுதப் பயிற்சி பெற்றுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் ஏற்கெனவே பதுங்கி இருந்த வேறு சில நண்பர்களுடன் சேர்ந்து ஐஎஸ் அமைப்பின் பயிற்சியை தொடர்ந்துள்ளார். இந்த நிலையில் ஒரு சில மாதங்களுக்கு முன்பு காபூலில் இருந்து காரில் நந்தஹர்கர் பகுதிக் சென்று கொண்டிருந்தபோது, ஆப்கானிஸ்தான் தீவிரவாத தடுப்புடையினர் மடக்கி பிடித்தனர்.

ஹம்ஸாபரிடம் தீவிர விசாரணை நடைபெற்றது. அப்போது தான் கேரளாவில் இருந்து வந்ததை அவர் ஒப்புக் கொண்டார். இதையடுத்து ஆப்கானிஸ்தான் அரசு இந்தியாவை தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்துள்ளது. குற்றவாளிகளை நாடு கடத்தி ஒப்படைக்கும் ஒப்பந்தம் இருநாடுகளிடையே ஏற்கெனவே இருப்பதால் ஹம்ஸாபரை இந்தியாவிடம் ஒப்படைக்க ஆப்கானிதான் நடவடிக்கை எடுத்தது.

அதன்படி டெல்லி கொண்டு வரப்பட்ட ஹம்ஸாபர் விமான நிலையத்தில் தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்கபட்டார். அவரை கைது செய்ய தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஹமாஸ்பர் கைது செய்யப்பட்ட விவரம் கேரள போலீஸாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x