Published : 21 Sep 2018 10:41 AM
Last Updated : 21 Sep 2018 10:41 AM

சத்தீஸ்கர் தேர்தலில் காங்கிரஸூக்கு பெரும் பின்னடைவு: அஜித் ஜோகியுடன் மாயாவதி திடீர் கூட்டணி

சத்தீஸ்கர் சட்டப்பேரவைத் தேர்தலில் முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடப் போவதாக மாயாவதி அறிவித்துள்ளார். இதன் மூலம் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைக்கும் காங்கிரஸின் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. அந்த மாநிலத்தின் மும்முனை போட்டி நிலவுவதால் அது ஆளும் பாஜகவுக்கு சாகதகமாகும் என தெரிகிறது.

இந்த ஆண்டு இறுதியில் சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மிஸோரம் உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.

மிஸோரம் தவிர மற்ற மாநிலங்களில் பாஜக ஆளும் கட்சியாக உள்ளது. உத்தரப் பிரதேசத்தில் வலிமையாக மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, இந்த மாநிலங்களில் காங்கிரஸூடன் கூட்டணி அமைத்து போட்டியிட திட்டமிட்டது.

இதன் மூலம் பாஜகவை வீழ்த்த இருகட்சிகளும் முயன்றன. ஆனால் தொகுதி பங்கீட்டில் காங்கிரஸ் விடப்பிடியாக இருப்பதாக மாயாவதி புகார் கூறினார். இதனால் மத்திய பிரதேசத்தில் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சு வார்த்தை முடிவுக்கு வராமல் உள்ளது.

இந்தநிலையில் சத்தீஸ்கரில் முன்னாள் முதல்வரும், காங்கிரஸில் இருந்து பிரிந்து தனிக்கட்சி நடத்தி வருபவருமான அஜித் ஜோகியுடன் இணைந்து சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கப்போவதாக மாயாவதி அறிவித்துள்ளார். இதுகுறித்து ராய்ப்பூரில் நேற்று அவர் கூறியதாவது:

சத்தீஸ்கர் சட்டப்பேரவைத் தேர்தலில் அஜித் ஜோகியின் சத்தீஸ்கர் ஜனதா காங்கிரஸூடன் கூட்டணி அமைத்து பகுஜன் சமாஜ் கட்சி போட்டியிடும். சத்தீஸ்கர் ஜனதா காங்கிரஸ் 55 இடங்களிலும் பகுஜன் சமாஜ் 35 இடங்களிலும் போட்டியிடும். எங்கள் கூட்டணி வெற்றி பெற்றால் அஜித் ஜோகி முதல்வராக பதவி ஏற்பார்’’ எனக் கூறினார்.

சத்தீஸ்கரில் பாஜகவை வீழ்த்துவதற்காக காங்கிரஸ் வியூகம் அமைத்து இருந்த நிலையில் மாயாவதியின் முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அஜித்ஜோகி - மாயாவதி கட்சிகள் இணைந்து தனியாக போட்டியிடுவதன் மூலம் காங்கிரஸின் வாக்கு வங்கி பாதிக்கப்படும் என தெரிகிறது. இது ஆளும் பாஜகவுக்கு சாதகமாகி விடும் என அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x