Last Updated : 21 Sep, 2018 08:03 AM

 

Published : 21 Sep 2018 08:03 AM
Last Updated : 21 Sep 2018 08:03 AM

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஜார்கிஹோளி சகோதரர்கள் போர்க்கொடி; குமாரசாமி அரசுக்கு கடும் நெருக்கடி: 22 எம்எல்ஏக்கள் மகாராஷ்டிராவில் முகாம்- ஆளுநரை சந்திக்க திட்டம்

கர்நாடக முதல்வர் குமாரசாமி தலை மையிலான கூட்டணி அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி யுள்ள 22 அதிருப்தி எம்எல்ஏக் கள் மகாராஷ்டிராவில் முகாமிட்டுள் ளனர். அவர்கள் ஆளுநர் வஜுபாய் வாலாவை சந்திக்க திட்டமிட்டுள்ள தால் கர்நாடக அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் நடந்த கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், காங்கிரஸுடன் கூட்டணி சேர்ந்து மதச்சார்பற்ற ஜனதா தள (மஜத) மூத்த தலைவர் குமாரசாமி ஆட்சி அமைத்துள்ளார். அமைச்சரவை பங்கீடு, துறை ஒதுக் கீடு, வாரிய தலைவர் நியமனம் உள்ளிட்டவற்றில் காங்கிரஸ் - மஜத இடையே மோதல் ஏற்பட் டது.

இதனிடையே, காங்கிரஸை சேர்ந்த ரமேஷ் ஜார்கிஹோளி, சதீஷ் ஜார்கிஹோளி சகோதரர்கள் தங்களுக்கு கட்சியிலும், ஆட்சியி லும் முன்னுரிமை வழங்க வேண் டும் என கோரினர். குறிப்பாக பெல காவி மாவட்டத்தில் தாங்கள் செல்வாக்குடன் இருப்பதால் அமைச்சர் பதவி, ஆதரவாளர்க ளுக்கு வாரிய தலைவர் பதவி, கட்சி பொறுப்புகள் ஆகியவற்றை கேட்டனர். ஆனால் மற்றொரு காங்கிரஸ் தலைவரும், நீர்வளத் துறை அமைச்சருமான டி.கே.சிவக்குமார், ஜார்கிஹோளி சகோ தரர்களுக்கு எதிரான லட்சுமி நிம்பல்கருக்கு முன்னுரிமை அளித் தார். இதனால் அதிருப்தி அடைந்த ஜார்கிஹோளி சகோதரர்களை சமாதானப்படுத்தும் வகையில் ரமேஷ் ஜார்கிஹோளிக்கு நக ராட்சி துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. சதீஷ் ஜார்கி ஹோளி உள்ளிட்டோருக்கு அமைச் சர் பதவி வழங்கப்படாததால் மகா ராஷ்டிர எல்லையோர மாவட்டங் களைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏக் கள் அதிருப்தி அடைந்தனர்.

இந்நிலையில் ரமேஷ் ஜார்கி ஹோளி கடந்த வாரம், “எங்கள் ஆதரவாளர்களுக்கு கட்சி, ஆட்சி யில் முக்கிய பொறுப்புகள் தராவிட் டால் ஆட்சிக்கு அளித்த ஆதரவை திரும்பப் பெறுவோம்” என எச்சரித் தார். இதனிடையே, அதிருப்தி அடைந்த காங்கிரஸ் எம்எல்ஏக் களை தங்கள் பக்கம் இழுக்க பாஜக மாநில தலைவர் எடியூரப்பா காய்களை நகர்த்தினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த முதல்வர் குமாரசாமி, துணை முதல் வர் பரமேஷ்வர் உள்ளிட்டோர் ஜார்கிஹோளி சகோதரர்களை சந்தித்து சமாதானப்படுத்தினர். அமைச்சரவை விரிவாக்கத்தின் போது அமைச்சர் பதவி தருவதாக‌ குமாரசாமி உறுதி அளித்தார். அப்போது ஜார்கிஹோளி சகோதரர் கள் தரப்பில் அமைச்சரவையில் முக்கிய துறை ஒதுக்க வேண்டும். பெலகாவி மாவட்ட காங்கிரஸில் டி.கே.சிவக்குமார் தலையிட கூடாது என நிபந்தனை விதித்ததாகத் தெரிகிறது.

இதனிடையே, ஜார்கிஹோளி சகோதரர்கள் மற்றும் அதிருப்தி எம்எல்ஏக்களுடன் பாஜக தரப் பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள் ளது. அப்போது பாஜகவுக்கு ஆதரவு அளித்தால் அமைச்சர் பதவி மற்றும் கோடிக்கணக்கான ரூபாய் பணம் தருவதாக பேரம் பேசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, பாஜக மாநில தலைவர் எடியூரப்பா காங்கிரஸ் மற்றும் சுயேச்சை எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுக்க முயற்சிப்பதாக குமாரசாமி புகார் கூறினார். இது தொடர்பான வீடியோ ஆதாரம் சிக்கியிருப்பதாகவும் தெரிவித்தார்.

குமாரசாமி அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள ஜார்கி ஹோளி சகோதரர்கள் உட்பட 12 எம்எல்ஏக்கள், சிக்கபள்ளாபூர் காங்கிரஸ் எம்எல்ஏ சுதாகரின் ஆத ரவு எம்எல்ஏக்கள் 7 பேர், நாகேந்திரா தலைமையில் 3 சுயேச்சை எம்எல்ஏக்கள் உட்பட மொத்தம் 22 பேர் நேற்று மகாராஷ்டிராவுக்கு சென்றுள்ளனர். இந்த 22 பேரில் காங்கிரஸ், சுயேச்சை உட் பட மஜதவை சேர்ந்த 2 எம்எல்ஏக் களும் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

எம்எல்ஏக்களுக்கு பாதுகாப்பு

மகாராஷ்டிர மாநில பாஜக மூத்த தலைவரும், வருவாய் துறை அமைச்சருமான‌ சந்திரகாந்த் பாட்டீல், 22 அதிருப்தி எம்எல்ஏக் களையும் கோலாப்பூர் மாவட்டத் தில் வெவ்வேறு இடங்களில் தங்க வைத்துள்ளார். அங்கு உள்ள எம்எல்ஏக்கள் தப்பிச் செல்லாத வகையில் பலத்த போலீஸ் பாதுகாப் புடன் தங்கவைக்கப்பட்டுள்ளனர். சந்திரகாந்த் பாட்டீலுடன் சதீஷ் ஜார்கிஹோளி தொடர்பில் இருப்பதாக கூறப்படுகிறது.

இதனிடையே மகாராஷ்டிராவில் முகாமிட்டுள்ள அதிருப்தி எம்எல்ஏக் கள் 22 பேரும் ஆளுநர் வஜுபாய் வாலாவை சந்திக்க நேரம் கேட்டுள்ளனர். ஆளுநரை சந்தித்த பின்னர், அடுத்த திட்டத்தை அறிவிப்பதாகவும் கூறியுள்ளனர். இந்நிலையில் நகராட்சித் துறை அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோளி கூறும்போது, “எங்களது ஆதரவு எம்எல்ஏக்கள் மகாராஷ்டிராவில் இல்லை. அவர்கள் பணி நிமித்த மாக மும்பை செல்ல திட்டமிட்டுள் ளனர். அக்டோபர் முதல் வாரம் வரை காத்திருக்குமாறு முதல் வர் குமாரசாமி என்னை கேட்டுக் கொண்டார்” என கூறியுள்ளார்.

எடியூரப்பா பகல் கனவு

இதுகுறித்து பெங்களூருவில் முதல்வர் குமாரசாமி கூறும்போது, “மீண்டும் முதல்வராக வேண்டும் என எடியூரப்பா பகல் கனவு காண் கிறார். காங்கிரஸ், மஜத எம்எல்ஏக் களை விலைக்கு வாங்க துடிக்கிறார். எல்லா பிரச்சினையையும் வென்று, 5 ஆண்டுகள் நான் முதல்வராக ஆட்சி செய்து காட்டுவேன். அவருக்கு விரைவில் தக்கப் பாடம் கற்பிக்கப்படும்” என்றார்.

இதற்கு எடியூரப்பா கூறும் போது, “ஊழல்வாதியான குமார சாமிக்கு என்னை விமர்சிக்க உரிமை கிடையாது. தேவகவுடா குடும்பத் தின் முறைகேடு குறித்த ஆவணங் களை விரைவில் வெளியிடுவேன். இந்தக் கூட்டணி ஆட்சி தானாகவே கலைந்துவிடும்” என்றார்.

கர்நாடக அரசுக்கு எதிராக 22 எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கியிருப்பதால் முதல்வர் குமாரசாமிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x