Last Updated : 20 Sep, 2018 09:01 PM

 

Published : 20 Sep 2018 09:01 PM
Last Updated : 20 Sep 2018 09:01 PM

‘மக்களின் நலனுக்காக இன்னும் கடினமான முடிவுகள் எடுப்பது தொடரும்’: பிரதமர் மோடி எச்சரிக்கை

தேசத்தின் மக்களுக்காக இன்னும் எனது அரசு கடினமான முடிவுகள் எடுப்பது தொடரும் என்று பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

டெல்லி துவாராகாவில் செக்டர் 25 பகுதியில், சர்வதேச மாநாடு மற்றும் ஏற்றுமதி மையம் (ஐஐசிசி) அமைப்பதற்கான நிகழ்ச்சியில் பங்கேற்ற மோடி அடிக்கல் நாட்டினார். இதற்காக ஏர்போர்ட் எக்ஸ்பிரஸ் மெட்ரோ ரயிலில் மோடி பயணித்தார்.

அடிக்கல் நாட்டிய பின் அங்கு நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:

''என்னுடைய அரசு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை வகுத்துச் செயல்படுத்தி வருகிறது. இந்த நடவடிக்கைகள் அனைத்தும் தொடரும். உங்களுக்கு ஒன்றை உறுதியளிக்கிறேன். மக்களுக்கான அரசு இது. மக்களின் நலனுக்காக கடந்த 4 ஆண்டுகளில் பல்வேறு கடினமான நடவடிக்கைளை எடுத்திருக்கிறது. இனிவரும் காலங்களிலும் அது தொடரும். அந்தக் கடினமான முடிவுகள் நின்றுவிடாது. தொடர்ந்து எடுப்போம்.

 

நாட்டின் பொருளாதாரம் சர்வதேச சவால்களை எதிர்கொண்டு தொடர்ந்து 8 சதவீதத்தில் வளர்ந்து வருகிறது. அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளில் 5 லட்சம் கோடி டாலர் கொண்ட பொருளாதாரமாக இந்தியா வளரும். அடுத்த 10 ஆண்டுகளில் 10 லட்சம் கோடி டாலர் கொண்ட பொருளாதாரமாகத் தேசம் மாறும்.

நாட்டில் ஒரு டஜனுக்கும் மேலாக அரசு வங்கிகள் இருப்பதால் யாருக்கு என்ன பயன். இதுதொடர்பாக விவாதம் தொடர்ந்து நடந்து வருவதைக் கவனித்தோம். யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆதலால்தான் எஸ்பிஐ வங்கியுடன் கிளை வங்கிகளை இணைத்தோம். அடுத்து சில வங்கிகளை அரசு இணைக்க இருக்கிறது.

இந்த அரசு மேக் இன் இந்தியா திட்டத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மொபைல் போன் உற்பத்தி மையாக இந்தியா விளங்கி வருகிறது. இதன் மூலம் கடந்த 4 ஆண்டுகளில் 5 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளார்கள். ரூ.3 லட்சம் கோடி அன்னியச் செலாவணியை சேமித்துக் கொடுத்துள்ளது.

எளிதாகத் தொழில் செய்யும் திட்டத்தை ஊக்கப்படுத்த மாவட்டந்தோறும் செயல்திட்டங்கள் தீட்டினால், உள்நாட்டுப் பொருளாதாரத்தின் அளவு அதிகரிக்கும். சுற்றுலாத்துறை வளர்ச்சி பெற்றுவருகிறது. அதன் மூலம் அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும்.

இங்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ள ரூ.25 ஆயிரத்து 703 கோடி மதிப்புள்ள மையத்தின் மூலம் 5 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். பல்வேறு நாடுகளின் நிறுவனங்கள் ஒன்றாக இணையும் மையாகத் திகழப் போகிறது.

நீண்ட தொலைவுக்கு எரிவாயு கொண்டு செல்லுதல், செல்போன் தயாரிப்பு, மின்சார உற்பத்தி திட்டங்கள் போன்றவற்றில் அதிக ஈடுபாட்டுடன் அரசு செயல்பட்டு வருகிறது. ஸ்டார்ட் அப் நிறுவனங்களை இந்த அரசு ஊக்கப்படுத்தி, மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி வருகிறது. சிறுதொழில்கள், குறுந்தொழில்களை ஊக்கப்படுத்தி வருகிறது''.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x