Last Updated : 20 Sep, 2018 11:11 AM

 

Published : 20 Sep 2018 11:11 AM
Last Updated : 20 Sep 2018 11:11 AM

ராமர்கோவிலை மறந்துவிட்டு முஸ்லிம் பெண்களுக்கு வக்கீலாக மாறிப்போனார் மோடி: பிரவீன் தொகாடியா குற்றச்சாட்டு

நரேந்திர மோடி அரசு ராமரை மறந்து விட்டது, தூக்கத்தில் இருக்கும் மத்திய அரசை எழுப்ப லக்னோவிலிருந்து அயோத்தி வரை அக்டோபர் 21 ம் தேதி பாத யாத்திரை நடைபெறும் என விஸ்வ இந்து பரிஷத் முன்னாள் தலைவர் பிரவிண் தொகாடியா தெரிவித்துள்ளார்.

ஹால்டுவானி நகரத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள செல்லும் வழியில் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் பேசியதாவது:

''மத்திய அரசு தனது வாக்குறுதியை மறந்துவிட்டது. எங்கள் எதிர்பார்ப்பு என்னவென்றால், நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்பதுதான். அதன்மூலம் ராமர் கோவிலுககு ஒரு விடிவு பிறக்கும்.

மோடி தற்போது நமது அனைத்து எதிர்பார்ப்புகளையும் தவிடு பொடியாக்கிவிட்டார். வந்த வேலை என்ன ராமர் கோவில் கட்டுவதுதானே? ராமரை மறந்துவிட்டு முஸ்லிம் பெண்களுக்கு வக்கீலாக மாறிவிட்டார் மோடி.

முத்தலாக் பிரச்சினையில் அவர் தலையிட்டதில் எனக்கு உடன்பாடில்லை. எனவே மோடியை தூக்கத்திலிருந்து எழுப்ப அக்டோபர் 21 லிருந்து லக்னோவிலிருந்து தொடங்கி அயோத்தியா வரை அண்டராஷ்டிரியா ஹிந்து பரிஷத் ஆதரவார்கள் பாதயாத்திரை மேற்கொள்வார்கள்.''

இவ்வாறு பிரவிண் தொகாடியா செய்தியாளர்களிடையே தெரிவித்தார்.

விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பில் இருந்து நீக்கப்பட்ட தொகாடியா தற்போது அண்டராஷ்ரியா ஹிந்து பரிஷத் என்ற அமைப்பையும் உருவாக்கி அதற்கு தலைவராக இருக்கிறார்.

முஸ்லிம் பெண்களை முத்தலாக் கூறி விவாகரத்து செய்வதற்கு தடைவிதிப்பது தொடர்பான அவசர சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x