Published : 20 Sep 2018 10:31 AM
Last Updated : 20 Sep 2018 10:31 AM

இளம் பெண்ணை பழக வைத்து உளவு பார்த்த பாகிஸ்தான் ஐஎஸ்ஐ: வாட்ஸ்- ஆப் மூலம் தகவல்களை பரிமாறிய இந்திய வீரர் கைது

பெண்ணை பழக வைத்து இந்திய வீரர் ஒருவரை பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உளவாளியாக பயன்படுத்தி வந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நொய்டாவைச் சேர்ந்த அந்த வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தைச் சேர்ந்தவர் அச்சுதானந்த் மிஸ்ரா. எல்லை பாதுகாப்பு படையில் 2016- ம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் அவருக்கு, இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். டெல்லியை அடுத்த நொய்டாவில் வசித்து வந்தார். 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இளம்பெண் தன்னை பத்திரிகை நிருபர் என இவரிடம் அறிமுகம் செய்து கொண்டார். ராணுவம் தொடர்பான செய்திகளை சேகரிப்பதாக கூறியுள்ளார். இருவர் இடையேயும் நட்பு ஏற்பட்டது.

எல்லைப் பாதுகாப்பு படை, பயிற்சி மையம் மற்றும் வீரர்களுக்கான ராணுவ பயிற்சிகள், வெடிமருந்து கூடங்கள் போன்றவற்றை புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை வீடியோவாக எடுத்து அந்த பெண்ணிடம் மிஸ்ரா வழங்கியுள்ளார். ராணுவம் தொடர்பான இந்த தகவல்கள் அனைத்தையும் வாட்ஸ்-ஆப் மூலம் அனுப்பியுள்ளார்.

அந்த பெண் இந்த தகவல்களை பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐக்கு அனுப்பி வந்துள்ளார். அந்த பெண்ணுடன் ஏற்பட்ட நட்பு காரணமாக அவர் சொல்லிய அனைத்தையும் மிஸ்ரா செய்துள்ளார். இருவரும் பல இடங்களுக்கு பயணமும் செய்துள்ளனர். அந்த பெண்ணை பற்றி சில சந்தேகம் எழுந்தபோதும், மிஸ்ரா அதை அலட்சியம் செய்துள்ளார். சில நாட்கள் கழித்து பாகிஸ்தானைச் சேர்ந்த மொபைல் எண்ணின் வாட்ஸ் ஆப்க்கு நேரடியாக தகவல்களை பரிமாறத் தொடங்கியுள்ளார்.

இதனிடையே மிஸ்ராவின் மொபைல் எண்ணில் இருந்து தொடர்ந்து வெளிநாட்டுக்கு அதிகஅளவில் தகவல்கள் வாட்ஸ் ஆப் மூலம் பரிமாற்றம் செய்யப்பட்டதை அறிந்த ராணுவ உளவுப்பிரிவு, அதிகாரிகளை எச்சரித்தது.

இதையடுத்து ராணுவ அதிகாரிகள் சில வேண்டுமென்றே பொய்யான தகவல்களை மிஸ்ராவுக்கு பரிமாறியுள்ளனர். அந்த தகவல்களும் மிஸ்ரா வாட்ஸ் ஆப் மூலம் ஐஎஸ்ஐக்கு பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மிஸ்ரா, ஐஎஸ்ஐக்கு தகவல்களை பரிமாறியதை அதிகாரிகள் உறுதி செய்தனர். உடனடியாக அவரை உத்தரபிரதேச மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர்.

இதுபற்றி போலீஸ் அதிகாரி ஓ.பி.சிங் கூறுகையில், “ராணுவம் பற்றிய ரகசிய தகவல்களை மிஸ்ரா பகிர்ந்து கொண்ட பெண் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயை சேர்ந்தவர். இதற்காக மிஸ்ராவுக்கு வங்கிக் கணக்கில் பணம் எதுவும் செலுத்தப்பட்டதா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுமட்டுமின்றி அவர் ஐஎஸ்ஐக்கு வழங்கிய தகவல்கள் குறித்து விசாரித்து வருகிறோம்” எனக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x