Last Updated : 19 Sep, 2018 08:23 PM

 

Published : 19 Sep 2018 08:23 PM
Last Updated : 19 Sep 2018 08:23 PM

தமிழகத்தைப் பின்பற்றிய குஜராத்: எம்எல்ஏக்களுக்கு சம்பளம் ரூ. ஒரு லட்சத்துக்கு மேல் உயர்ந்தது

தமிழகம், பீகார், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து குஜராத் மாநிலமும் எம்எல்ஏக்கள் ஊதியத்தை ரூ. ஒரு லட்சத்துக்கு மேல் உயர்த்திக்கொள்ளும் மசோதாவை ஏகமனதாக சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றியது.

இனிமேல், எம்எல்ஏக்கள், அமைச்சர்கள், சபாநாயகர்கள், துணை சபாநாயகர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆகியோருக்கு ஊதிய உயர்வு ரூ.45 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

இதையடுத்து, இதற்கு முன் மாதத்துக்கு ரூ.70 ஆயிரத்து 727 ஊதியம் பெற்ற எம்எல்ஏக்கள் இனி 64சதவீதம் அதிகமாக ரூ.1.16 லட்சம் பெறுவார்கள். அமைச்சர்கள், சபாநாயகர்கள், துணை சபாநாயகர்கள், எதிர்க்கட்சித்தலைவர்கள் 54 சதவீதம் அதிகமாக ரூ.86 ஆயிரத்தில் இருந்து ரூ.1.32 லட்சம் பெறுவார்கள்.

இந்த திருத்தப்பட்ட ஊதியம் கடந்த 2017, பிப்ரவரி மாதத்தில் இருந்து நடைமுறைக்கு வருகிறது. இதனால், நிலுவையாக ரூ.6 கோடி எம்எல்ஏக்களுக்கு கிடைக்கும். இந்த ஊதிய உயர்வால் அரசுக்குக் கூடுதலாக ரூ.10 கோடி செலவாகும்.

சட்டப்பேரவை விவகாரத்துறை அமைச்சர் பிரதீப்சின்ஹா ஜடேஜா, இன்று சட்டப்பேரவையில், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஊதிய திருத்த மசோதாவை அறிமுகம் செய்தார். மாநிலத்தில் உள்ள 182 எம்எல்ஏக்கள் ஊதியம் கடந்த 2005-ம் ஆண்டில் இருந்து திருத்தியமைக்கப்படாமல் இருக்கிறது. மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது குஜராத் மாநிலத்தில் ஊதியம் மிகக்குறைவாகஇருக்கிறது. ஆதலால், ஊதியம் திருத்தப்பட உள்ளது என்று தெரிவித்தார். இந்த மசோதா எந்தவிதமான எதிர்ப்பும் இன்றி சட்டப்பேரவையில் நிறைவேறியது.

உத்தரகாண்ட, தெலங்கானா, ஜார்கண்ட், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் உள்ள எம்எல்ஏக்களுக்கு ஊதியம் ரூ.2.13 லட்சம் முதல் ரூ.2.91லட்சமாக இருக்கிறது.

தமிழகம், பிகார், மேற்குவங்கம், ஒடிசா ஆகிய மாநில எம்எல்ஏக்களுக்கு ஊதியம் ரூ. ஒரு லட்சத்துக்கு அதிகமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x