Last Updated : 19 Sep, 2018 07:43 PM

 

Published : 19 Sep 2018 07:43 PM
Last Updated : 19 Sep 2018 07:43 PM

கணவனால் கைவிடப்பட்ட இந்து பெண்களைப் பாதுகாக்க சட்டம் தேவை: மோடியை மறைமுகமாக விமர்சித்த ஓவைசி

முத்தலாக் தடுப்புச் சட்டத்தைக் காட்டிலும், கணவர்களால் கைவிடப்பட்ட பெண்களைப் பாதுகாக்க சட்டம் இயற்றுங்கள் என்று பிரதமர் மோடியை விளாசியுள்ளார் எம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாசுதீன் ஓவைசி.

இஸ்லாமிய பெண்களுக்கு விவாகரத்து அளிக்கும் மூன்றுமுறை தலாக் சொல்லும் முத்தலாக்கை தடை செய்து மக்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால், மாநிலங்களவையில் இன்னும் நிறைவேறவில்லை. இந்நிலையில், முத்தலாக் தடுப்பு மசோதாவை அவசரச்சட்டமாக இன்று மத்திய அரசு பிறப்பித்தது. இந்தச் சட்டத்தின் கீழ் மனைவிக்கு முத்தலாக் கூறி ஒதுக்கிவைத்தால் அதிகபட்சம் 3 ஆண்டுகள்வரை சிறை தண்டனை வழங்க முடியும்.

இந்நிலையில் மத்திய அரசின் முத்தலாக் தடுப்பு அவசரச் சட்டத்துக்கு எம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாசுதீன் ஒவைசி கடும் கண்டனம் தெரிவித்துச் சாடியுள்ளார். அவர் இன்று ஹைதராபாத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:

முத்தலாக் தடுப்புக்கு அவசரச்சட்டத்தை மத்திய அரசுபிறப்பித்துள்ளது முஸ்லிம் பெண்களுக்கு எதிரானது. இந்த அவசரச்சட்டம் மேலும் அநீதியைத்தான் இழைக்கும். இந்துப் பெண்களில் பலரை அவர்களின் கணவர்கள் ஒதுக்கி வைத்து வாழாமல் இருக்கிறார்கள். அந்தப் பெண்களை பாதுகாக்கப் பிரதமர் மோடி சட்டம் கொண்டு வர வேண்டும்.

இஸ்லாமிய திருமணம் என்பது சிவில் ஒப்பந்தம், அதற்குத் தண்டனையை கொண்டுவருவது என்பது தவறானது தேவையில்லாதது. இதுபோன்ற அவசரச்சட்டங்கள் கொண்டுவருவது, முஸ்லிம் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் வகையிலும், சமத்துவ உரிமையை மீறும் வகையிலும் இருக்கிறது. இதை எதிர்த்து முஸ்லிம் தனிநபர் சட்டவாரியம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரும்.

கடந்த 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கின்படி, 24 லட்சம் ஏழைப்பெண்கள் திருமணமாகி, தங்கள் கணவர்களுடன் வாழாமல் இருக்கிறார்கள். சிலர் திருமணமாகிவிட்டது என்று தேர்தல் பிரமாணப்பத்திரத்தில் கூறுகிறார்கள், ஆனால், அவர்களுடன் மனைவி வாழவில்லை. பாதிக்கப்பட்ட பெண்களுக்காக பிரதமர் மோடி சட்டம் கொண்டு வர வேண்டும்.

முத்தலாக் சட்டப்படி ஒரு முஸ்லிம் ஆண் குற்றமுள்ளவர் என்று நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 3ஆண்டுகள் சிறை தண்டனைக் கிடைக்கும். இதே குற்றத்தை முஸ்லிம் அல்லாதவர் செய்தால், அவருக்கு நீதிமன்றம் அதிகபட்டசமாக ஒரு ஆண்டு சிறை தண்டனை மட்டுமே கொடுக்கிறது. இது என்ன நியாயம். இது அரசியலமைப்புச் சட்டத்தை மீறுவது இல்லையா.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள அவசரச் சட்டம் என்பது, நாட்டில் நிலவும் பல்வேறு விஷயங்களில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்பிவிடுவதாகும். குறிப்பாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு, டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்புகுறைவு ஆகியவற்றை மறக்கடிக்கச் செய்ய வேண்டும்.

ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சட்டீஸ்கர், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. அங்குள்ள மக்கள், பாஜகவின் பிரித்தாளும் கொள்கையை நிராகரித்துத் தோற்கடிப்பார்கள்.

இவ்வாறு ஓவைசி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x