Last Updated : 19 Sep, 2018 01:05 PM

 

Published : 19 Sep 2018 01:05 PM
Last Updated : 19 Sep 2018 01:05 PM

சட்டவிரோதம், தண்டனைக்குரிய குற்றம், 3 ஆண்டு சிறை: முத்தலாக் தடை அவசர சட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்; உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகும் தொடர்ந்ததால் நடவடிக்கை- மசோதா நிறைவேற எதிர்க்கட்சிகளுக்கு வேண்டுகோள்

முத்தலாக் நடைமுறையை தண் டனைக்குரிய குற்றமாகக் கருத வகை செய்யும் அவசர சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. உச்ச நீதி மன்றம் தடை செய்த பிறகும் இந்த நடைமுறை தொடர்கதையாக இருப்பதால் இதற்கான அவசியம் ஏற்பட்டதாக மத்திய சட்ட அமைச் சர் ரவி சங்கர் பிரசாத் தெரி வித்துள்ளார்.

முஸ்லிம் ஆண்கள் தங்கள் மனைவியை முத்தலாக் கூறி விவாகரத்து செய்யும் நடைமுறை உள்ளது. இதை எதிர்த்து முஸ்லிம் பெண்கள் சிலர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், உடனடி முத்தலாக் நடைமுறை சட்ட விரோதம் என்று தீர்ப்பளித்தது. மேலும் இந்த நடைமுறைக்கு தடை விதித்த நீதிமன்றம், இது தொடர்பாக ஒரு சட்டம் இயற்ற வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

இதன்படி, முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) சட்ட மசோதா, மக்களவையில் எதிர்க்கட்சியினரின் எதிர்ப்பை மீறி நிறைவேற்றப்பட்டது. எனினும், மாநிலங்களவையில் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லாத கார ணத்தால் இந்த மசோதாவை நிறை வேற்ற முடியவில்லை. இந்த மசோ தாவில் உள்ள சில பிரிவுகளை மாற்ற வேண்டும் என எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. இதை ஏற்க அரசு மறுப்பதால் இந்த மசோதா கிடப்பில் போடப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சரவை கூட்டம்

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பிறகு மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

முத்தலாக் நடைமுறை தொடர் பாக அவசர சட்டம் பிறப்பிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. இதன்படி, உடனடி முத்தலாக் நடைமுறை சட்ட விரோதம் மற்றும் தண்டனைக்குரிய குற்றம் ஆகும். அத்துடன் முத்தலாக் இனி செல்லாது. இதை மீறி முத்தலாக் கூறி விவாகரத்து செய்பவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்க முடியும்.

அதேநேரம், இந்தச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதை தவிர்ப்பதற்காக, சில பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. அதாவது, குற்றச்சாட்டுக்கு உள்ளானவரை ஜாமீனில் வெளிவரமுடியாத சட்டப் பிரிவின் கீழ் போலீஸார் உடனடி யாக கைது செய்ய முடியும். எனினும், விசாரணை காலத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மாஜிஸ் திரேட் நீதிமன்றத்தை அணுகி ஜாமீன் பெற வழிவகை செய்யப் பட்டுள்ளது.

முத்தலாக் நடைமுறையை உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு ரத்து செய்தது. ஆனாலும் இந்த நடைமுறை தொடர்வதால் அவசரச் சட்டம் இயற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, கடந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் 13-ம் தேதி வரை முத்தலாக் தொடர்பாக 430 புகார்கள் பெறப் பட்டுள்ளன. இதில் 201 புகார்கள் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு வந்துள்ளன.

மேலும் உச்ச நீதிமன்ற உத் தரவுப்படி, முத்தலாக் நடை முறைக்கு தடை விதிக்க வகை செய்யும் மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு பல்வேறு முயற்சி களை மேற்கொண்டது. மக்களவை யில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக மாநிலங்களவையில் நிறைவேற்ற முடியவில்லை. இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலை வர்களை பல முறை சந்தித்துப் பேசியும் பலன் கிடைக்கவில்லை.

சோனியா காந்தி மவுனம்

வாக்கு வங்கியை மனதில் கொண்டு எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த விவகாரத்தில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர் சோனியா காந்தி மவுன மாக உள்ளார். இதில் அரசியல் செய்வதற்கு ஒன்றும் இல்லை. பாலின சமத்துவத்தை ஏற்படுத்தவும் பெண்களின் கண்ணியத்தைக் காப்பாற்றவுமே இந்த மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு முயற்சி செய்கிறது.

எனவே, பாலின நீதியை நிலை நாட்டுவதற்காக முத்தலாக் நடை முறையை தடை செய்ய வகை செய்யும் முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) சட்ட மசோதாவை அடுத்த நாடாளு மன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்ற சோனியா காந்தி, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட அனை வரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த முத்தலாக் தடை அவசர சட்டத்தின் கீழ், பாதிக்கப்பட்டவர் (மனைவி), அவரது ரத்த சொந் தங்கள் அல்லது திருமணம் மூலம் உறவினர் ஆனவர்கள் புகார் கொடுத் தால் மட்டுமே போலீஸார் வழக்கு பதிவு செய்ய முடியும். மற்றவர்கள் யாரும் புகார் கொடுக்க முடியாது. மேலும் இதன்படி, பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றத்தை அணுகி, தனக்கும் தனது குழந்தைக்கும் ஜீவனாம்சம் கோர முடியும்.

சுமுகமாக தீர்க்கலாம்

மேலும் இந்த சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்கு சமரச அடிப்படையில் திரும்பப் பெறக்கூடியது (compoundable) ஆகும். இதன்படி கணவன், மனைவி இருவருமே தாங்கள் விரும்பினால் வழக்கை திரும்பப் பெற முடியும். மேலும் ஒரு மாஜிஸ்திரேட் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி கணவன், மனைவி இடையிலான கருத்து வேறுபாட்டை சுமுகமாக தீர்க்க முடியும். பாதிக்கப்பட்டவர் (மனைவி) நீதிமன்றத்தை அணுகி இது தொடர்பாக கோரிக்கை வைத்தால் மட்டுமே இது சாத்திய மாகும்.

வாட்ஸ்அப் மூலம் முத்தலாக் விவகாரத்து- நான் எங்கே போவேன்.. முஸ்லிம் பெண் உருக்கம்

ஹைதராபாத்தைச் சேர்ந்த இளம் முஸ்லிம் பெண்ணுக்கு அவரது கணவர் விவகாரத்து செய்வதாக வாட்ஸ்அப் மூலம் முத்தலாக் செய்தி அனுப்பியுள்ளார். ‘ஆதரவு இல்லாத நிலையில் நான் எங்கே போவேன்?’ என்று அந்தப் பெண் உருக்கமாக கேள்வி எழுப்பி உள்ளார்.

ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் ஹூமா சாய்ரா (29). இவர் ஓமன் நாட்டைச் சேர்ந்த 62 வயதான ஒரு வரை கடந்த ஆண்டு மே மாதம் திருமணம் செய்து கொண்டார். ஓமனுக்குச் சென்ற ஹூமா சாய்ரா வுக்கு 8 மாதத்தில் குறைப்பிரசவமாகி குழந்தையும் இறந்தது. பின்னர், தாய் வீட்டுக்குச் சென்று சிகிச்சை பெறுமாறும் உடல் நலம் சரியான பின்னர் திரும்ப அழைத்துக் கொள்வதாகவும் கூறி ஹூமா சாய் ராவை அவரது கணவர் கடந்த ஜூலை 30-ம் தேதி ஓம னில் இருந்து ஹைதராபாத்துக்கு அனுப்பி உள்ளார்.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 12-ம் தேதி ஹூமா சாய்ராவுக்கு அவரது கணவரிடம் இருந்து விவகாரத்து செய்வதற்கான முத்தலாக் செய்தி வாட்ஸ்அப்பில் வந்துள்ளது. பதறிப் போன ஹூமா இதுகுறித்து தனது கணவரை தொடர்பு கொண்டு பேசியபோதும் அவர் சரியான பதிலளிக்கவில்லை.

இந்நிலையில், இதுகுறித்து ஹைதராபாத்தில் பேட்டியளித்த ஹூமா சாய்ரா உருக்கமாக கூறும்போது, ‘‘திருமணம் முடிந்து ஓமன் சென்றதில் இருந்தே எனது கணவர் கொடுமைப்படுத்தத் தொடங்கி விட்டார். அதைப் பொறுத்துக் கொண்டு வாழ்ந்து வந்தேன். குழந்தை இறந்த பின்னர் என்னைவிட்டு பிரியப்போவதாகக் கூறினார். என்னை ஹைதராபாத் அனுப்பி வைத்துவிட்டு, நான் இங்கு இருக்கும் நிலையில், வாட்ஸ்அப் மூலம் முத்தலாக் செய்தி அனுப்பி உள்ளார். ஆதரவு இல்லாத நிலையில் நான் எங்கே போவேன்? இந்த விஷயத்தில் தலையிட்டு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் எனக்கு உதவ வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x