Last Updated : 18 Sep, 2018 08:21 PM

 

Published : 18 Sep 2018 08:21 PM
Last Updated : 18 Sep 2018 08:21 PM

‘மோடியின் அரசை ஆர்எஸ்எஸ் அமைப்பு இயக்கவில்லை’: மோகன் பாகவத் அதிரடிப் பேச்சு

பிரதமர் மோடியின் தலைமையிலான அரசை நாக்பூரில் இருந்து ஆர்எஸ்எஸ் அமைப்புதான் இயக்குகிறது என்று சிலர் நினைக்கிறார்கள், அதுதவறான கருத்து என்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் விளக்கமளித்துள்ளார்.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் 3 நாள் மாநாடு டெல்லியில் நடந்து வருகிறது. இதில் 2-வது நாளான இன்று நடந்த கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் பேசியதாவது:

மக்களிடையேயும், அரசியல்கட்சிகளிடையேயும் பிரதமர் மோடி தலைமையிலான அரசை நாக்பூரில் இருந்து ஆர்எஸ்எஸ் அமைப்புதான் இயக்குகிறது என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அது தவறான நம்பிக்கையாகும்.

நாங்கள் ஒருபோதும் அரசின் கொள்கைகளில் தலையிட விரும்பியதில்லை, தலையிடுவதும் இல்லை. இன்று அரசில், அரசியலில் உள்ள பல்வேறு தலைவர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த சேவகர்கள்தான். அதில் பிரதமர்களும் இருக்கிறார்கள், குடியரசுத் தலைவரும் இருக்கிறார்கள். அவ்வப்போது எங்களிடம் சில குழப்பமான நேரங்களில் தார்மீக ஆலோசனை கேட்பார்கள் எங்களால் முடிந்தால் கூறுகிறோம்.

ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு அரசியலில் களமிறங்க வேண்டும், அதிகாரத்தைக் கைப்பற்றவேண்டும் என்ற ஆசை இல்லை. எந்த தேர்தலிலும் போட்டியிடவும் விருப்பமில்லை.

ஆதலால், ஒரு குறிப்பிட்ட கட்சிக்குப் பின்னால், அதாவது பாஜகவுக்கு பின்னால் இருந்து கொண்டு நாங்கள் இயக்குகிறோம் என்ற நம்பிக்கை தவறானது. எங்கள் அமைப்பில் இருந்து பல்வேறு தொண்டர்கள் பாஜகவில் இருப்பதால், அந்தத் தோற்றம் இருக்கிறது. நாங்கள் கூறுவதெல்லாம் நாட்டின் நலனுக்காகப் பாடுபடுங்கள், சிந்தனை செய்யுங்கள் என்றுதான் கூறுகிறோம். எந்த ஒரு தனிப்பட்ட கட்சிக்காகவும் கரசேகவர்களை பாடுபடச் சொல்வதில்லை நாட்டின் நலனுக்காகவே உழைக்கக் கூறுகிறோம்.

இந்த முழுசமுதாயம் ஒற்றுமையாக இருக்கவே நாங்கள் விரும்புகிறோம். சமூகப் பிரச்சினைகள் குறித்து அரசியலில், கட்சிகளுக்கு இடையே பல்வேறுபட்ட கருத்துக்கள், பார்வைகள் இருக்கும். அரசியல் போட்டிகள் கூட இருக்கும்.

ஆனால், ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஒருபோதும் எந்த அரசியல்கட்சியிலும் எந்தப் பதவியையும் ஏற்றுக்கொண்டது இல்லை. ஆர்எஸ்எஸ் அமைப்பு என்பது சமூக சீர்திருத்த அமைப்பு, அரசியல் இயக்கம் அல்ல.

ஆர்எஸ்எஸ் அமைப்பு ஜனநாயக அமைப்பு, அதுசர்வாதிகார அமைப்பு இல்லை.

இவ்வாறு மோகன் பாகவத் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x