Last Updated : 17 Sep, 2018 02:11 PM

 

Published : 17 Sep 2018 02:11 PM
Last Updated : 17 Sep 2018 02:11 PM

பாஜக எம்.பி.யின் பாதங்களைக் கழுவி நீரைக் குடித்த தொண்டர்; ஜார்க்கண்டில் சர்ச்சை

ஜார்க்கண்ட் மாநிலம், கோடா தொகுதி எம்.பி. நிஷிகாந்த் துபேயின் பாதங்களைத் தண்ணீரால் கழுவிய தொண்டர் ஒருவர் அதே நீரைக் குடித்ததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

ஆனால், இந்தச் சம்பவத்தில் தவறு ஏதும் நடக்கவில்லை, வழக்கான நடைமுறைதான் என்று பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே கூறியுள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலம், கோடா மாவட்டத்தில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில், கோடா மக்களவைத் தொகுதி எம்.பி. நிஷிகாந்த் துபே பங்கேற்றார். அப்போது, எம்.பி. நிஷி காந்த் துபேயை ஒரு செப்புத் தட்டில் நிற்கவைத்து, அவரின் கால் பாதங்களை பாஜக தொண்டர் பவன் ஷா தண்ணீர் ஊற்றிக் கழுவினார்.

இந்நிலையில், நிஷிகாந்த் துபேயின் பாதங்களைக் கழுவி முடித்த அந்தத் தொண்டர், அந்த நீரை எடுத்துக் குடித்துவிட்டார். இந்த வீடியோ காட்சியை எம்.பி. நிஷிகாந்த் துபே தனது ஃபேஸ்புக்கில் பதிவிட்டு அந்தத் தொண்டரைப் பாராட்டியுள்ளார்.

ஃபேஸ்புக்கில் அவர் கூறுகையில், ''நான் என்னை மிகச்சிறிய மனிதராகவே உணர்கிறேன். ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற போது, பாஜக தொண்டர் பவன் ஷா எனது பாதங்களை ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் தண்ணீர் ஊற்றிக் கழுவினார். எனக்கு இதுபோல் ஒருநாள் தொண்டரின் பாதங்களைக் கழுவும் வாய்ப்பு கிடைக்கும்'' எனப் பதிவிட்டிருந்தார்.

எம்.பி. நிஷிகாந்தின் இந்தப் பதிவும், அவரின் வீடியோவும் சமூக ஊடகங்களில் பல்வேறு எதிர்ப்புகளையும், விமர்சனங்களையும் உண்டாக்கி விவாதப்பொருளானது.

இதுகுறித்து எம்.பி. நிஷிகாந்த் துபேயிடம் கேட்டபோது அவர் கூறுகையில், ’’என்னுடைய பாதங்களைத் தொண்டர் ஒருவர் கழுவி, அந்த நீரைக் குடித்ததில் தவறு என்ன இருக்கிறது? ஜார்க்கண்ட் மாநிலத்தில் இது பாரம்பரியமாக கடைப்பிடிக்கும் பழக்கம். இந்தச் செயலை அந்தத் தொண்டர் மிகுந்த விருப்பத்துடன், ஆர்வத்துடன் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில்தானே செய்தார். இதற்கு ஏன் அரசியல் ரீதியான சாயம் பூசுகிறீர்கள். உங்களின் விருந்தினர்களின் பாதங்களை நீங்கள் கழுவிவிடுவதில் என்ன தவறு இருக்கிறது. மகாபாரதம், ராமாயணக் கதைகளைப் படியுங்கள்'' எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x