Published : 17 Sep 2018 09:20 AM
Last Updated : 17 Sep 2018 09:20 AM

தொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்த எம்.பி.க்களுக்கு சட்ட விதிமுறைகள் மத்திய தகவல் ஆணையம் பரிந்துரை

“தொகுதி மேம்பாட்டு நிதியை எம்.பி.க்கள் பயன்படுத் துவதில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புடைமையை கொண்டு வர புதிய சட்ட விதிமுறைகளை ஏற்படுத்த வேண்டும்” என்று மத்திய தகவல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

இதுகுறித்து மக்களவை சபாநாயகர் அலுவலகம் மற்றும் மாநிலங்களவைத் தலைவர் அலுவலகத்துக்கு மத்திய தகவல் ஆணையர் தர் ஆச்சார்யலு அனுப்பியுள்ள 54 பக்க உத்தரவில் கூறியிருப்பதாவது:

எம்.பி.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியைப் (எம்பிஎல்ஏடிஎஸ்) பயன்படுத்தும்போது வெளிப் படைத்தன்மை மற்றும் பொறுப்புடைமையை ஏற்படுத்த வேண்டும். எம்.பி.க்களின் கடமை என்ன, கடமை தவறுதல் என்றால் என்ன என்பதற்கு விளக்கம் ஏற்படுத்த வேண்டும். கடமை தவறினால் எம்.பி.க்களை பொறுப்பாக்குவது, விதிமுறைகளை மீறினால் எடுக்கப்பட வேண்டிய நட வடிக்கைகள் குறித்து புதிய சட்ட விதிமுறைகளை வகுக்க வேண் டும்.

எம்பிஎல்ஏடிஎஸ் நிதியை தனிப் பட்ட பணிகளுக்கு செலவிடுவது, தகுதியற்ற நிறுவனங்களுக்கு திட்டப் பணிகளை பரிந்துரைத்தல், நிதியை வேறு தனியார் அறக் கட்டளைகளுக்கு மாற்றி விடுதல், எம்.பி.க்களின் உறவினர்கள் பயன்பெறும் வகையில் நிதியை பயன்படுத்துதல் போன்றவற்றை தடுக்கும் வகையில் புதிய சட்ட விதிமுறைகள் இருக்க வேண்டும்.

மேலும், திட்டங்களுக்காகப் பெறப்பட்ட விண்ணப்பங்கள், எந் தெந்த திட்டப் பணிகளுக்கு பரிந்துரை அளிக்கப்பட்டது, எந்தெந்த பணிகள் நிராகரிக்கப்பட்டன, அதற்கான காரணம், மேற்கொள்ளப்பட்ட திட்டப் பணிகளின் நிலை, பயனாளிகளின் விவரங்கள் உட்பட அனைத்தையும் உள்ளடக்கிய விரிவான அறிக்கையை எம்.பி.க்கள் ஆண்டுதோறும் சமர்ப்பிக்க வேண்டும்.

அத்துடன், எம்.பி.க்கள் தங்கள் பதவிக் காலம் முடிந்த பின்னர் எம்பிஎல்ஏடிஎஸ் நிதியில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்த விவரங்களை மக்களவை, மாநிலங்களவை அலுவலகங் களில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வாக்காளர்கள் விவரங்கள் கேட்டால், அவற்றுக்கு எம்.பி.க்கள் பதில் அளிக்க வேண்டும்.

இவ்வாறு தகவல் ஆணையர் ஆச்சார்யலு பரிந்துரைத்துள்ளார்.

தொகுதி மேம்பாட்டு நிதி எந்தெந்த திட்டங்களுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன என்று விவரம் கேட்டு 2 பேர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பித்துள்ளனர். அவற்றுக்கு சம்பந்தப்பட்ட எம்.பி.க்களிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.

இதுகுறித்து மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சகம் பதில் அளிக்கையில், “எம்.பி.க்கள் தொகுதிவாரியாக செலவழிக்கப்பட்ட தொகையின் விவரம் அல்லது மேற்கொள்ளப்பட்ட திட்டங்களின் விவரங்களை பராமரிக்கும் முறை அமைச்சகத்திடம் இல்லை” என்று தெரிவித்தது. இதையடுத்து மத்திய தகவல் ஆணையத்தில் 2 பேரும் முறையிட்டனர்.

இதையடுத்து, அந்த விவரங்களை பகிரங்கமாக வெளியிட வேண்டும் என்று அமைச்சகத்தை மத்திய தகவல் ஆணையர் ஆச்சார்யலு அறிவுறுத்தி உள்ளார்.

மேலும், மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி.க்களுக்கு அவர்களது தொகுதிகளை மேம்படுத்த ஆண்டுதோறும் ரூ.5 கோடி ஒதுக்கப்படுகிறது. இந்த நிதியில் ரூ.12 ஆயிரம் கோடி பயன்படுத்தப்படாமல் உள்ளது என்று மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சகம் சமீபத்தில் தெரிவித்திருந்தது. இதை கருத்தில் எடுத்துக் கொண்டு மத்திய தகவல் ஆணையர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x