Last Updated : 16 Sep, 2018 07:42 PM

 

Published : 16 Sep 2018 07:42 PM
Last Updated : 16 Sep 2018 07:42 PM

கன்னியாஸ்திரி பலாத்கார விவகாரம்: பேச்சுக்கு மன்னிப்பு கோரினார் நடிகர் மோகன்லால்

கேரள மாநிலத்தில் கன்னியாஸ்திரி, பாதிரியாரால் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக பத்திரிகை நிருபரிடம் உணர்ச்சிவசப்பட்டு கடுமையாக பேசியதற்காக மலையாள திரைப்பட நடிகர் மோகன்லால் இன்று மன்னிப்புக் கோரினார்.

கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் மோகன்லால் உதவி செய்து வருகிறார். அந்தவகையில் தனது தாய்,தந்தை பெயரில் நடத்திவரும் விஸ்வசாந்தி அறக்கட்டளை சார்பில் நேற்று பல்வேறு உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை நடிகர் மோகன்லால் கொச்சி நகரில் நடத்தினார்.

அப்போது, நிகழ்ச்சியின் இடையே பிரபல நாளேட்டின் நிருபர் ஒருவர், நடிகர் மோகன்லாலிடம், சமீபத்தில் கன்னியாஸ்திரி பாதிரியார் ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் மற்றும் அது தொடர்பாக நடந்துவரும் போராட்டம் குறித்து கேள்வி எழுப்பினார்.

அதற்கு உணர்ச்சி வசப்பட்ட மோகன்லால், இதுபோன்ற நல்ல விஷயங்கள், செயல்கள் செய்யப்படும் இடத்தில் தேவையில்லாத இந்த கேள்வியை கேட்பது குறித்து வெட்பட வேண்டாமா? என்று கோபமாகப் பேசினார்.

இந்நிலையில், தனது பேஸ்புக் பக்கத்தில் இன்று நடிகர் மோகன்லால் நேற்று நிருபரிடம் கடுமையாக நடந்து கொண்டதற்கு மன்னிப்பு கோரி விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதிஉதவி, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை என்னுடைய அறக்கட்டளை சார்பில் நேற்று நடத்தினேன். அப்போது, ஒரு பத்திரிகை நிருபர் என்னிடம் வந்து, கேரளாவில் கடந்த சில நாட்களாகத் தீவிரமாக பேசப்பட்டுவரும் கன்னியாஸ்திரி பலாத்கார சம்பவம் குறித்தும், போராட்டம் குறித்தும் கேட்டார்.

அந்தக் கேள்விக்கு நான் பதில் அளித்திருந்தால் கேள்வி கேட்டவரின் மனது புண்பட்டிருக்கும். ஆனால், எனக்கு யாருடைய மனதையும் காயப்படுத்துவது நோக்கமல்ல. எந்த நிறுவனத்தையும் குறிப்பிட்டு பேசுவதும் தேவையில்லாத ஒன்று.

நான் பங்கேற்ற நலத்திட்ட நிகழ்ச்சிக்கும், கன்னியாஸ்திரி பலாத்கார சம்பவத்துக்கும் என்ன தொடர்பு எனத் தெரிய வேண்டாமா. நேரத்துக்குப் பொருந்தாத கேள்வியை அந்த நிருபர் என்னிடம் கேட்டார்.

ஆனால், மாநிலத்தைப் பொறுத்தவரை கன்னியாஸ்திரி குறித்த விவகாரம், கேள்வி அவசியமானது என்றாலும்கூட, இந்த நிகழ்ச்சிக்குத் தேவையில்லாதது. அந்தக் கேள்விக்கு பதில் அளிக்கும் மனநிலையிலும் நான் இல்லை. ஒரு மனிதராக, மகனாக, ஆதரவில்லாதவர்களுக்கு உதவும் நிலையில் இருந்தேன். அதனால்தான் அவ்வாறு அந்த நிருபரிடம் கடுமையாக பேசினேன்.

இந்த விஷயத்தைப் பெரிதுபடுத்தாமல், என்னை மூத்த சகோதரர்போல கருதி மன்னிக்க அந்த நிருபரிடம் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு மோகன்லால் தெரிவித்துள்ளார்.

மோகன்லால் நிருபரைத் திட்டிய விவகாரம் சமூக ஊடகங்களில் வைரலாகி, பெரும் விவாதப்பொருளாக மாறியது. பல்வேறு தரப்பினரும் நிருபர் கேட்ட கேள்விக்குப் பதில் அளித்திருக்கலாம் என்றும், பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரியின் நிலைமை என்னாவது என்றும் கேள்வி எழுப்பினார்கள். இதையடுத்து, மோகன்லால் இன்று தாமாக முன்வந்து மன்னிப்பு கோரியுள்ளார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x