Published : 16 Sep 2018 07:16 PM
Last Updated : 16 Sep 2018 07:16 PM

கோவா முதல்வராக மனோகர் பாரிக்கர் நீடிப்பாரா? - பாஜக தலைமை தீவிர ஆலோசனை

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் உடல்நிலை பாதிக்கப்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு பதிலாக அம்மாநிலத்துக்கு புதிய முதல்வரை தேர்வு செய்ய வேண்டும் என பாஜக கூட்டணி கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த விவகாரத்தில் பாஜக தலைமை திங்களன்று இறுதி முடிவெடுக்கும் என தெரிகிறது. இதற்காக பாஜக மூத்த தலைவர்கள் கோவா செல்கின்றனர்.

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கருக்கு கடந்த பிப்ரவரி மாதம் கணைய அழற்சி காரணமாக சில மாதங்களுக்கு முன், மும்பை லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் திடீரென அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

பின்னர் கடந்த மார்ச்சிலிருந்து ஜூன் வரை அமெரிக்காவில் சிகிச்சை பெற்று திரும்பினார். சில நாட்கள் அரசு பணிகளை கவனித்து வந்தநிலையில் மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார்.

கோவா திரும்பிய நிலையில் அவருக்கு பூரண குணம் ஏற்படவில்லை. அவரது உடல்நிலை நேற்று பாதிக்கப்பட்டதையடுத்து வடக்கு கோவா மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மனோகர் பாரிக்கர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். உடல்நலம் கருதியும் தற்போதைய நிலையில் நிர்வாக பொறுப்புகளை கவனிக்க முடியாத நிலையில் இருப்பதால் வேறு ஒருவரிடம் முதலமைச்சர் பொறுப்புகளை ஒப்படைக்க அவர் விரும்புவதாக கூறப்படுகிறது.

பாஜகவின் கூட்டணிக் கட்சியான மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி உள்ளிட்டவை புதிய முதல்வரை தேர்வு செய்ய வலியுறுத்தி வருகின்றன. அதுபோலவே, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளும், கோவாவில் அரசு நிர்வாகம் முடங்கியுள்ளதாக புகார் தெரிவித்து வருகின்றன.

இதனால் பாரிக்கருக்கு பதிலாக புதிய முதல்வரை தேர்வு செய்ய பாஜக மேலிடம் ஆலோசனை செய்து வருகிறது. புதிய முதல்வர் தேர்வு விஷயத்தில் நாளை (திங்கள் கிழமை) இறுதி முடிவெடுக்கப்படும் என தெரிகிறது. இதற்காக பாஜக மூத்த தலைவர்கள், கோவா செல்ல உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x