Last Updated : 16 Sep, 2018 04:45 PM

 

Published : 16 Sep 2018 04:45 PM
Last Updated : 16 Sep 2018 04:45 PM

இலவசமாக கச்சா எண்ணெய் கிடைக்குமானு தேடுங்க: மத்திய அரசு மீது சிதம்பரம் தாக்கு

நாட்டில் நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில் விலை குறைக்க முடியாது என்று மத்தியஅரசு தெரிவித்த நிலையில், இலவசமாக எங்காவது கச்சா எண்ணெய் கிடைக்குமா என்று தேடுங்கள் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் சாடியுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதிக்குப்பின் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து நாள் தோறும் விலை உயர்ந்து வருகிறது. சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்புக் குறைவு ஆகியவற்றால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு காரணம் கூறுகிறது.

இந்நிலையில், பெட்ரோல், டீசல்விலை குறைப்பு குறித்து நாங்கள் முடிவு எடுக்க முடியாது என்று மத்தியஅரசு தெரிவித்துவிட்டது. ஆனால், ஹைதராபாத்தில் நேற்று பேசிய பாஜக தலைவர் அமித் ஷா, பெட்ரோல், டீசல் விலையை உயர்வைக் கட்டுப்படுத்த விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்கள் விலை, பால், முட்டை, காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்கள் விலையும் கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனால், சாமானிய மக்கள், நடுத்தர மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி இருக்கிறார்கள். ஆனால், பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் விலை உயர்ந்து வருகிறது.

சென்னையில் இன்று பெட்ரோல், ரூ.85.15 காசுகளும், டீசல் லிட்டர் ரூ.77.94 காசுகளுக்கும் விற்பனையாகிறது.

பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காமல் மத்தியஅரசு காலம் தாழ்த்திவருவது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் ட்விட்டரில் மத்தியஅரசை சாடியுள்ளார். அவர் கூறியுள்ளதாவது:

‘‘பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க முடியாது என்று மத்திய அரசு கூறுகிறது. ஆனால், பாஜக தலைவரோ பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கும் என்கிறார். கச்சா எண்ணெய் எங்கு இலவசமாகக் கிடைக்கும் என்ற இடத்தை பாஜக தீவிரமாகத் தேடிக்கொண்டு இருக்கிறது.

பணமதிப்பு நீக்கமும், ஜிஎஸ்டி வரியும் வந்தது முதல் நாட்டில் கறுப்புப்பணம் ஒழிக்கப்பட்டுவிட்டது என்று மத்தியஅரசு கூறுகிறது. ஆனால், தலைமைத் தேர்தல் ஆணையரோ, கறுப்புப்பணம் ஜனநாயகத்துக்கு ஆபத்தாக இருக்கிறது என்கிறார். அப்படியென்றால், கறுப்புப்பணம் எங்கிருந்து வருகிறது. புதிய ரூ.2000 நோட்டுகள் எங்கிருந்து வருகிறது’’ எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x