Published : 16 Sep 2018 04:15 PM
Last Updated : 16 Sep 2018 04:15 PM

‘‘தேவை நிதி அல்ல; நீதி தான்’’ - பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவியின் தாய் ஆவேசம்: குற்றவாளிகள் புகைப்படம் வெளியீடு

ஹரியாணாவில் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான மாணவியின் குடும்பத்துக்கு நிதியுதவி அளிக்க அதிகாரிகள் சென்றபோது, அதனை ஏற்க அவரின் தாய் மறுத்து விட்டார். இதனிடையே இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் புகைப்படங்களை அம்மாநில போலீஸார் வெளியிட்டுள்ளனர்.

ஹரியாணா மாநிலம் கைரனாவில் கல்லூரி மாணவி ஒருவர் நேற்று கோச்சிங் வகுப்பு சென்று கொண்டிருந்தபோது, காரில் வந்த 3 இளைஞர்கள் வழி மறித்து கடத்திச் சென்றனர். கிராமத்தில் யாரும் இல்லாத வயல்வெளிக்கு காரை ஓட்டிச் சென்றனர். அங்கு தயாராக இருந்த மேலும் இரு இளைஞர்கள் அந்த மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

சுய நினைவு இழக்கும் வரையில் அந்த மாணவியை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்த கும்பல் பின்னர் அவரை பேருந்து நிறுத்தம் ஒன்றில் கீழே தள்ளிவிட்டு காரில் தப்பியோடி விட்டது. மயக்க நிலையில் இருந்த மாணவி மீ்ட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான மாணவி சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று, குடியரசுத் தலைவர் பதக்கம் பெற்றவர். கல்வியில் மிகுந்த ஆர்வம் கொண்ட அந்த மாணவியை அவரது கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் தொடர்ந்து தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பெற்றோர் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் பாலியல் பலாத்கார சம்வத்தில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளிகள் மணிஷ், நிஷூ மற்றும் பங்கஞ் மூன்று பேரின் புகைப்படத்தை அம்மாநில காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். அதில் பங்கஞ் என்பவர் ராணுவ வீரர். அவரைக் கைது செய்ய ராணுவத்தின் அனுமதியை போலீஸார் கோரியுள்ளனர்.

இதனிடையே, இந்தப் பாலியல் பலாத்கார சம்பவம் நாடு தழுவிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனக்கு நீதி வேண்டும் எனக் கோரி பாதிக்கப்பட்ட மாணவியின் தாய், பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்தார். பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்துக்கு ஹரியாணா மாநில அரசு நிதியுதவி அறிவித்தது.

ஆனால் இந்த நிதியுதவியைப் பெற மாணவியின் தாய் மறுத்து விட்டார். ஹரியாணா மாநில அரசு அதிகாரிகள் அவரைச் சந்தித்து காசோலையைக் கொடுக்க வந்தபோது, அதனை ஏற்க மறுத்த அவர், ‘‘எனக்கு தேவை நிதி அல்ல; நீதிதான்’’ என ஆவேசமாகக் கூறினார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x