Last Updated : 16 Sep, 2018 04:20 PM

 

Published : 16 Sep 2018 04:20 PM
Last Updated : 16 Sep 2018 04:20 PM

‘வேலை இல்லாத இளைஞர்கள் விரக்தியால் பலாத்காரத்தில் ஈடுபடுகிறார்கள்’: பாஜக பெண் எம்எல்ஏ பேச்சால் சர்ச்சை

வேலையில்லாமல் சுற்றித்திரியும் இளைஞர்கள், தங்கள் எதிர்காலத்தின் மீதான அச்சம், விரக்தி காரணமாக பலாத்காரக் குற்றங்களில் ஈடுபடுகிறார்கள் என்று ஹரியானா மாநில பாஜக எம்எல்ஏ பிரேம்லதா சிங் தெரிவித்துள்ளார்.

பிரேம்லதா சிங்கின் பேச்சுக்கு சமூக ஊடகங்களில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

ஹரியானா மாநிலத்தில் ரேவாரி நகரில் 19வயது மாணவியை 3 பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர். இந்த மாணவி பள்ளியில் படிக்கும் காலத்தில் 12-ம் வகுப்பில் சிறப்பான மதிப்பெண்கள் எடுத்து ஜனாதிபதி விருது பெற்றவர்.

கடந்த சில நாட்களுக்கு முன் பயிற்சி வகுப்புக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய அந்த மாணவியை 3 பேர் கொண்ட கும்பல் காரில் கடத்திச் சென்று மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்தனர். இதில் ஒரு ராணுவ வீரரும் ஈடுபட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தலைமறைவாக இருப்பதால், யாரையும் இன்னும் கைது செய்ய முடியாமல் போலீஸார் திணறுகிறார்கள். குற்றவாளிகள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பலாத்கார சம்பவம் குறித்து உச்சான் கலான் சட்டப்பேரவைத் தொகுதி பாஜக எம்எல்ஏ பிரேம்லதா சிங்கிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் கூறுகையில், வேலை இல்லாத இளைஞர்கள்தான் இதுபோன்ற பாலியல் பலாத்காரங்களில் ஈடுபடுகிறார்கள்.

இளைஞர்கள் வேலையில்லாமல் இருப்பதால், மனதில் ஒருவிதமான வெறுப்புணர்வு, விரக்தி ஏற்படுகிறது, எதிர்காலத்தின் மீதான அச்சம் ஏற்படுகிறது. விரக்தி ஏற்பட்டு இதுபோன்ற பலாத்காரக் குற்றங்களில் ஈடுபடுகிறார்கள். தவறான பாரம்பரியம் நமது சமூகத்தில் தொடங்கி இருக்கிறது. எந்த பெண்ணை எங்கு பார்த்தாலும் அவரைப் பற்றி தவறான உள்நோக்கத்தை ஆண்கள் உருவாக்குகிறார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த சர்ச்சைக் கருத்தைத் தெரிவித்த பாஜக எம்எல்ஏ பிரேம்லதா சிங், மத்திய அமைச்சர் பிரேர்ந்தர் சிங்கின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x