Published : 16 Sep 2018 09:18 AM
Last Updated : 16 Sep 2018 09:18 AM

என்னை கைது செய்ததற்கு சர்வதேச சதியும் காரணமாக இருக்கலாம்: இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் சந்தேகம்

இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் தனது பணிக்காலத்தில் இந்தியாவின் விண்வெளித் திட்டங்கள் குறித்த ரகசியங்களை வெளிநாட்டுக்கு விற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் கடந்த 1994-ம் ஆண்டு நவம்பர் 30-ம் தேதி கேரள போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவருக்கு கேரள அரசு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டது. இப்படியான ஒரு சூழ்நிலையில் விஞ்ஞானி நம்பி நாராயணனை திருவனந்தபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தோம்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எப்படி பார்க்கிறீர்கள்?

இது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு. அந்த வகையில் இது அரிதினும், அரிதான வழக்கு. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 142-வது பிரிவின் கீழ் முழுமை யான நீதி கிடைப்பதற்காக இப்படி இழப்பீடு வழங்கும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்துக்கு மட்டுமே உண்டு. இனிமேல் தவறு செய்யக் கூடிய காவலர்களுக்கு எதிரான வழக்கு களுக்கு இந்த வழக்கு முன்மாதிரியாக இருக்கும். உச்ச நீதிமன்றம் தானாகவே முன்வந்து நான் கேட்காமலேயே இழப்பீடு வழங்கியுள்ளது. என்னை போலீஸார் கைது செய்தது அவசியமற்றது என்ற தீர்ப்பை சட்டத்தின் வெற்றியாக பார்க்கிறேன்.

தாமதிக்கப்பட்ட நீதியாக பார்க்கிறீர்களா?

தாமதிக்கப்பட்ட நீதிதான். ஆனால் இங்கே தாமதம் தவிர்க்க முடியாதது. ஏனென்றால் நமது சிஸ்டம் அப்படித்தான். அப்படிப் பார்த்தால் இங்கே சிஸ்டம் தான் மாற வேண்டும். சில வழக்குகளில் கண்ணுக்கு நேராக எல்லாம் இருந்தாலும், செயல்பட முடியாத சூழல் இருக்கும். ஆனால் நான், "இனி அவர்களை தண்டித்தால் என்ன? தண்டிக்காவிட்டால் என்ன?" எனும் உணர்ச்சியோடு கடந்து போகாமல் இறுதிவரை களத்தில் நின்றேன். அந்தவகையில் இங்கு காத்திருந்ததால் மகத்தான இரு வெற்றிகள் கிடைத்துள்ளன. ஒன்று கேட்காமலே கிடைத்த இழப்பீடு, மற்றொன்று கேரள போலீஸாரின் பங்கு குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட கமிட்டி. இரண்டுமே ஆறுதல் தருகிறது.

கைது செய்யப்பட்ட நாட்களை எப்படி கடந்தீர்கள்?

அந்த நாட்கள் என்னை பெரிதாக பாதிக்கவில்லை என்று சொன்னால் அது பொய். என் மனைவி ஒரு நாள் ஆட்டோவில் போய் கொண்டிருந்தார். ஆட்டோ ஓட்டுநர், இந்திய தொழில்நுட்பங்களை வெளிநாட்டுக்கு விற்றவரின் மனைவி தானே என வசைபாடி நடுவழியில் இறக்கி விட்டுச் சென்று விட்டார். இன்னும் சிலர் அப்போது ஐ.எஸ்.ஆர்.ஓ. பேருந்தின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினார்கள். எனது மகனுக்கு திருமணம் கூட தள்ளிப் போனது. ஆனால் அந்த சூழ்நிலையிலும் என் உறவுகளும், நண்பர்களும், அண்டை வீட்டுக்காரர்களும் எங்கள் வீட்டுக்கு பாதுகாப்பு அரணாக இருந்தார்கள்.

போலீஸாரின் கஸ்டடியில் இருந்த முதல் 5 நாட்கள் கடும் சித்ரவதைக்குள்ளானேன். கஸ்டடியிலும், சிறையிலுமாக 50 நாள்கள் இருந்தேன். கஸ்டடியில் இருந்தபோது சாப்பாடோ, தண்ணீரோ இல்லாமல் மயங்கி, மயங்கி விழுவேன். என் கோபமெல்லாம், என் மீது பொய்வழக்கு உருவாக்கியவர்கள் மீதே இருந்தது. அதனால் தான் இந்த வழக்கைப் போட்டேன்.

வழக்கு, சர்ச்சை என அவதிப்பட்டதில் ஒரு விஞ்ஞானியாக உங்கள் இலக்கை அடையமுடியாத வருத்தம் இருக்கிறதா?

விண்வெளியில் இந்தியாவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் இலக்கோடு தான் பணிக்கு வந்தேன். வழக்கில் சிக்கவைக்கப்பட்டு மேலே வரமுடியாத நிலைக்கு ஆக்கினர். நான் எந்த தவறும் செய்யாத போது ஏற்படும் நல்லது, கெட்டதை ‘விதி' என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் அந்த 'விதி' யை மாற்ற, இன்னொரு 'விதி' தேவைப்பட்டது. விதியின் விளைவு தான் இப்போதைய தீர்ப்பு. இது சட்டவிதி!

இலக்கில் இருந்து வழிமாறிப் போகும் போது, தலைக்கு வந்தது தலைப்பாகை யோடு போய்விட்டது என நான் எண்ணுபவன் அல்ல. அதில் எனக்கான இலக்கை நோக்கி ஓடினேன். வேறு யாரும் 24 ஆண்டுகள், மனம் தளராது போராடுவார்களா என்பது சந்தேகமே!..

உங்கள் மீதான குற்றச்சாட்டை எப்படி எதிர்கொண்டீர்கள்?

கிரையோஜெனிக் இன்ஜின் தொடர்பான ரகசியங்களை வெளிநாட்டிற்கு விற்றதாக பொய் புகார் சொல்லி காவல் துறையினர் கைது செய்தனர். அப்போது இந்தியாவில் கிரையோஜெனிக் இன்ஜினே கிடையாது. அப்போதெல்லாம் அதை கண்டுபிடிக்க எத்தனை ஆண்டுகள் ஆகும் என்னும் விவாதம் தான் இருந்து வந்தது. இல்லாத ஒரு பொருள் குறித்து, நான் வெளிநாட்டுக்கு ரகசியங்களைக் கொடுத்தேன் என்பது பொய்யான குற்றச்சாட்டு என்றேன். எனது இப்படி ஆக்கப்பூர்வமான கேள்விகளை ஏற்றுக்கொண்ட பல ஊடகவியலாளர்களும் தான் எனக்கான நம்பிக்கையாக தெரிந்தனர்.

வழக்கில் ஏன் சிக்க வைத்தார்கள்?

காரணங்களை ஆராய்ச்சி செய்யத் தான் கமிட்டி அமைத்துள்ளனர். கஸ்டடியில் இருக்கும் குற்றவாளிகளிடம் வேண்டு மென்றே என் பெயரை சொல்லச் சொல்லி யிருக்கிறார்கள். என்னை சிக்கவைக்க காவல் துறையினர் எப்படி செயல்பட் டார்கள், என்னவெல்லாம் செய்தார்கள் என எனக்குத் தெரியும். ஆனால் ‘ஏன்' செய்தார்கள் என்ற கேள்விக்குத்தான் எனக்கு விடை தெரியவில்லை.

அந்நிய நாட்டு சதி இதன் பின்னால் இருந்ததா?

விண்வெளி ஆய்வில் இந்தியா வளர் வதை சகிக்க முடியாத சில வெளிநாடுகள், வெளிநாட்டு கம்பெனிகளும் பின்னால் இருக்கலாம். விண்வெளித் துறையில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ் ஆகிய நாடுகள்தான் கோலோச்சுகின்றன. இதில் சீனாவும், ரஷ்யாவும் வணிகத் தில் இல்லை. அமெரிக்காவும், பிரான்ஸும்தான் உலக சந்தையை கையில் வைத்திருக்கின்றன. செயற்கைக்கோளில் மட்டும் எடுத்துக் கொண்டால் ஆண்டுக்கு 300 பில்லியன் டாலரில் வியாபாரம் நடக்கிறது. இதனிடையில் இந்தியாவும் விண்வெளி ஆய்வில் வளர்ந்து வந்தது அந்நாடுகளுக்கு கூட பிடிக்காமல் இருந் திருக்கலாம். இப்படி பல அனுமானங்கள் சொல்லலாம். ஆனால் என்னை ஏன் சிக்க வைத்தனர் என்பது எனக்கும் தெரியாத மர்மமாகவே இருக்கிறது.மன உளைச்சலை பேசும் புத்தகம்

கேரள போலீஸாரால் கைது செய்யப்பட்டது, அப்போது மனரீதியாக ஏற்பட்ட பாதிப்புகள் என அத்தனையையும் விவரித்து READY TO FIRE HOW INDIA AND I SURVIVED THE ISRO SPY CASE என்ற புத்தகத்தை எழுதியுள்ளார் விஞ்ஞானி நம்பி நாராயணன். தன் சொந்த அனுபவங்களை முன்வைத்து இவர் எழுதிய இப்புத்தகம் 5 மாதங்களுக்கு முன்பு வெளியானது. நம்பி நாராயணனின் வாழ்க்கையை மையப்படுத்தி திரைப்படமும் தயாராகி வருகிறது. இதில் நம்பிநாராயணனாக நடிகர் மாதவன் நடிக்க உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x