Published : 14 Sep 2018 12:22 PM
Last Updated : 14 Sep 2018 12:22 PM

போரின் இலக்கு விடுதலைப் புலிகள்தான்; தமிழர்கள் அல்ல: புதுடெல்லியில் ராஜபக்சே பேச்சு

இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே மூன்று நாள் பயணமாக கடந்த செவ்வாய் அன்று இந்தியா வந்திருந்தார். பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோரைச் சந்தித்தார்.

புதுடெல்லியில் ராஜபக்சே ஒரு கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். நேற்று முன்தினம் (புதன்கிழமை) அன்று விராத் ஹிந்துஸ்தான் சங்கம் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது:

இலங்கையில், 2009-ல் நடைபெற்ற போர், விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்துக்கு எதிரானதுதானே தவிர தமிழ் மக்களுக்கு எதிரானது அல்ல. இலங்கை ராணுவத்துக்கும்இலங்கை அரசுக்கும் எதிரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை. அவை பொய்யானவை.

ராஜீவ் கொலை

"நாங்கள், ஒரு இனத்திற்கு எதிரான யுத்தத்தை எப்போதும் நடத்தியதில்லை: நிச்சயமாக இலங்கை அரசின் ராணுவ நடவடிக்கை தமிழ் சமூகத்துக்கு எதிராக இயக்கப்படவில்லை.

விடுதலைப் புலிகள் என்ற பயங்கரவாத அமைப்பு ராஜீவ் காந்தி மற்றும் பலரைப் படுகொலை செய்துள்ளது. இலங்கைக்கு மட்டுமல்லாமல் இந்திய மண்ணிற்கும் இந்தப் பயங்கரவாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது.

யுத்தத்தின் முடிவிற்குப் பின்னர் வழங்கிய முதல் பொதுக்கூட்டமொன்றில் நான் ஒன்றைக் குறிப்பிட்டேன், எனது தலைமையிலான இலங்கை அரசாங்கம் 2006-ல் தமிழீழ விடுதலைப் புலிகளோடு சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் அது சரியாக அமையவில்லை. அதன்பிறகுதான் மோதல் போக்கு தொடங்கியது என்று.

பயங்கரவாதத்தை ஒழிப்பது என்பது ஒரே ஒரு சமூகத்தின் ஒட்டுமொத்த நன்மைக்காக அல்ல. அல்லது ஒரே ஒரு நாட்டிற்காகவும் கூட அல்ல என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப் பிள்ளை பிரபாகரன் அடுத்து வந்த ஒரு இளம் தலைமுறையை தொடர்ந்து ஏமாற்றி வந்தார். அதற்கு விலையாகத்தான் அவர் தனது உயிரை இழக்கவேண்டி வந்தது.

போரிலிருந்து மீட்கப்பட்ட 3 லட்சம் தமிழர்கள்

போர் உச்சகட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கும்போது, இலங்கையின் கிழக்கில் ஒரு குறுகிய பகுதி நிலத்திலிருந்து மட்டுமே அங்கு சிக்கியிருந்த 3 லட்சம் தமிழ் மக்கள் போரிலிருந்து மீட்டெடுக்கப்பட்டார்கள். எனவே இப்போர் தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்படவில்லை; மாறாக விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்துக்கு எதிராக நடந்த போர் என்பதை இங்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்''.

இவ்வாறு ராஜபக்சே பேசினார்.

இக்கூட்டத்தில் கலந்துகொண்டு முன்னதாகப் பேசிய பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, "ராஜபக்சே பயங்கரவாதத்திற்கு எதிராக தீர்க்கமான நடவடிக்கை எடுத்தார், நாட்டைச் சுத்தப்படுத்தினார் " என்று தெரிவித்தார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x