Last Updated : 12 Sep, 2018 07:11 PM

 

Published : 12 Sep 2018 07:11 PM
Last Updated : 12 Sep 2018 07:11 PM

நாட்டை விட்டுக் கிளம்பும் முன் அருண் ஜேட்லியைச் சந்தித்தேன்: விஜய் மல்லையா; அரசிடம் விளக்கம் கேட்கும் காங்கிரஸ்

வங்கிக் கடன் மோசடியில் சிக்கி லண்டனில் வழக்கை எதிர்கொண்டு வரும் தொழிலதிபர் விஜய் மல்லையா, நாட்டை விட்டுக் கிளம்பும் முன் நிதியமைச்சர் அருண் ஜேட்லியைச் சந்தித்ததாகத் தெரிவித்துள்ளார். இதனை ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

லண்டன் நீதிமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய மல்லையா, “நான் நாட்டை விட்டு கிளம்பும் முன் கடன்களை செட்டில் செய்வது குறித்து பேச நிதியமைச்சர் அருண் ஜேட்லியைச் சந்தித்தேன் இதுதான் உண்மை. எனது செட்டில்மெண்ட் கடிதங்களுக்கு வங்கிகள் ஆட்சேபணைகளைப் பதிவு செய்துள்ளது”என்று ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் மல்லையாவை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

“நான் முன்னமேயே கூறியது போல் நான் அரசியல் கால்பந்தாகிவிட்டேன். என் மனசாட்சி தெளிவாக உள்ளது. ரூ.15,000 கோடி மதிப்புள்ள என் சொத்துக்களை கர்நாடகா நீதிமன்றத்தில் சமர்ப்பித்தேன். நான் நிச்சயமாக பலிகடாதான். நான் பலிகடாவாக உணர்கிறேன். இரு கட்சிகளுக்கும் என்னைப் பிடிக்கவில்லை.

நான் ஏன் வெளியேறினேன் என்றால் ஜெனிவாவில் கூட்டம் இருந்தது. போகும் முன் நிதியமைச்சரைச் சந்தித்தேன். வங்கிகளுக்கு கடன் தொகையை திருப்பிச் செலுத்துவதாக அவரிடமும் தெரிவித்தேன். இதுதான் உண்மை. அரசுத் தரப்பு குற்றச்சாட்டுகளை நான் ஏற்க மாட்டேன். கிங்பிஷர் விமானங்கள் தொடர்ந்து பறக்க வேண்டும் என்பதற்காக ரூ.4000 கோடி முதலீடு செய்தோம். ஆனால் குற்றச்சாட்டுகள் வேறு பாதையில் செல்கின்றன. கோர்ட் முடிவு செய்யட்டும்” என்றார்.

விளக்கம் கேட்கும் காங்கிரஸ்:

விஜய் மல்லையா எப்படி இந்தியாவை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டார்? அருண் ஜேட்லியை மல்லையா சந்தித்த விவரங்களை மத்திய அரசு வெளியிட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை வைத்துள்ளது.

மல்லையா வழக்கறிஞர் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிபதிகள் முன்பு கூறும்போது, “கிங்பிஷ்ருக்கு ஏற்பட்ட நஷ்டங்களை ஐடிபிஐ அதிகாரிகள் நன்கு அறிவார்கள். ஐடிபிஐ அதிகாரிகளின் மின்னஞ்சல்களை வைத்துப் பார்க்கும் போது நஷ்டங்களை மல்லியா மறைத்தார் என்ற அரசுதரப்புக் குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை ஆதாரங்கள் இல்லை. மேலும் ஏமாற்றுவதற்காக மல்லையா வங்கிக் கடன் கோரியதாக கூறப்படுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

மல்லையாவிடம் வங்கிகளுக்கு கடன் தொகையை திருப்பிச் செலுத்துவது பற்றி செய்தியாளர்கள் கேட்ட போது, “நிச்சயமாக அதற்காகத்தான் செட்டில்மெண்ட் ஆஃபர் செய்தேன். விசாரணை செப்டம்பர் 18-ம் தேதி நடக்கிறது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x