Last Updated : 11 Sep, 2018 07:03 PM

 

Published : 11 Sep 2018 07:03 PM
Last Updated : 11 Sep 2018 07:03 PM

‘ஏறிவந்த ஏணியை கீழே தள்ளி, இந்துத்துவாவின் முதுகில் குத்திவிட்டது பாஜக’: சிவசேனா விளாசல்

இந்துத்துவா என்ற ஏணியைப் பயன்படுத்தி ஆட்சிக்கு வந்தபின் அதைத் தூக்கி எறிந்துவிட்டீர்கள், இந்துத்துவாவின் முதுகில் குத்தி, சிவசேனாவுடன் கூட்டணியையும் முறித்துவிட்டீர்கள் என்று பாஜகவை சிவசேனா கடுமையாக விமர்சித்துள்ளது.

சிவசேனா கட்சி தனது அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் பாஜக குறித்து கடுமையாக விமர்சித்துள்ளது. அது குறித்த விவரம் வருமாறு:

இந்துத்துவா என்ற ஏணியைப் பயன்படுத்தி பாஜக ஆட்சிக்கு வந்தது. ஆனால், அதிகாரத்துக்கு வந்தவுடன் இந்துத்துவாவை தூக்கி எறிந்துவிட்டது. அதேபோல 2014-ம் ஆண்டு தேர்தலில் சிவசேனாவுடன் கூட்டணி அமைத்துத் தேர்தல் முடிந்தவுடன் கூட்டணியை முறித்து, இந்துத்துவா முதுகில் குத்திவிட்டது பாஜக.

தேர்தலின் போது இந்துக்களுக்கு அளித்த வாக்குறுதியான ராமர் கோயில் கட்டுவது, பொது சிவில் சட்டம் ஆகிய எதையும் நிறைவேற்றவில்லை. இவை அனைத்தும் பாஜகவின் தீவிரமாக இந்துத்துவா பிரச்சாரமாகும், ஆனால், இந்த ஆவேசமான பேச்சு ஆட்சிக்கு வந்தவுடன் காணாமல் போய்விட்டது.

காங்கிரஸ் கட்சியைப் போல பாஜகவும் மக்களை ஏமாற்றத் தொடங்கிவிட்டது. காங்கிரஸ் கட்சி முஸ்லிம்களைப் பல ஆண்டுகளாக ஏமாற்றி வருகிறது. ஆனால், பாஜக இந்துக்களை மதச்சார்பற்றவர்களாக உருவாக்கி வருகிறது. நாட்டின் பயணம் காங்கிரஸில் இருந்து மீண்டும் காங்கிரஸ் நோக்கியே பயணிக்கிறது.

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் சிகாக்கோவில் இந்துக்கள் குறித்து புகழ்ந்து பேசிஇருந்தார். ஆனால், இப்போதுள்ள சூழலில் இந்துக்கள் நிலை குறித்து அவர் பேச வேண்டும். இன்று இந்துக்களைத் தீவிரவாதிகளாகவும், அவர்கள் தீவிரவாத செயல்புரிபவர்களாகவும் முத்திரை குத்துகிறார்கள்.

இந்துக்கள் ஒன்றுசேர்ந்து, ஆவேசமாக வாக்களித்த காரணத்தால்தான் நரேந்திர மோடி பிரதமராக வர முடிந்தது. ஆனால், இன்று இந்துக்களுக்கு என்ன கிடைத்திருக்கிறது.

ஆட்சிக்கு வந்துவுடன் இந்துத்துவா என்ற ஏணியை வீசி எறிந்துவிட்டார்கள். போலியான இந்துத்துவா ஆட்சியில் இருக்கிறது, ஆவேசமான இந்துத்துவா அமைதியாகிவிட்டது. சொந்த நாட்டிலேயே இந்துக்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படுகிறார்கள்.

இவ்வாறு சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x