Last Updated : 11 Sep, 2018 06:08 PM

 

Published : 11 Sep 2018 06:08 PM
Last Updated : 11 Sep 2018 06:08 PM

முன் ஜென்மத்தில் எனது மனைவி: போலீஸ் உதவியுடன் கல்லூரி மாணவியைக் கடத்திய பெண் பேராசிரியை கைது

முன் ஜென்மத்தில் தனது மனைவி எனக்கூறி கல்லூரி மாணவியை போலீஸின் உதவியுடன் கடத்திச் செல்ல முயன்ற பெண் பேராசிரியை, போலீஸாரால் கைதுசெய்யப்பட்டார்.

மும்பையைச் சேர்ந்தவர் வெரோனிகா பரோடே என்ற கிரண் (வயது35). இவருக்குத் திருமணமாகிவிட்டது. இவர் மும்பையில் உள்ள போலீஸ் கான்ஸ்டபிள் ஆனந்த் முந்தே உதவியுடன் மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள 21 வயது கல்லூரி மாணவியை கடந்த சனிக்கிழமை இரவு கடத்த முயன்றார்.

அப்போது, அந்த மாணவி அலறி சத்தம் போடவே, அந்த பெண்ணின் உறவினர்கள் பேராசிரியையும், போலீஸ் கான்ஸ்டபிளையும் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து இந்தூரில் உள்ள திலக்நகர் போலீஸ் நிலைய விசாரணை அதிகாரி ஸ்வராஜ் தாபி கூறியதாவது:

மும்பையில் ஒரு கல்லூரியில் பேராசிரியையாகப் பணியாற்றி வருபவர் கிரண். இந்தூரைச் சேர்ந்த 21 வயது கல்லூரி மாணவி தனது தாய்க்கு சிகிச்சை அளிப்பதற்காக கடந்த பிப்ரவரி மாதம் மும்பைக்கு வந்துள்ளார். அப்போது, கிரணுக்கு அந்த கல்லூரி மாணவி அறிமுகமாகியுள்ளார்.

அப்போது அந்தக் கல்லூரி மாணவிக்குத் தேவையான உதவிகளை கிரண் செய்துள்ளார். இருவரும் ஒருவருக்கு ஒருவர் செல்போன் எண்களைப் பரிமாறிக் கொண்டனர். ஆனால், கல்லூரி மாணவியின் முகம்  இதற்குமுன் பார்த்தது போன்று கிரணுக்குத் தோன்றியது.

இதுகுறித்து கிரண் ஜோதிடர்களிடம் கேட்டபோது, அந்தக் கல்லூரி மாணவி முன் ஜென்மத்தில் உங்களுடைய மனைவியாகவும், நீங்கள்ஆணாகவும் இருந்தீர்கள். இந்த ஜென்மத்தில் உங்களைத் தேடி வந்துள்ளார் எனத் தெரிவித்தனர். இதை நம்பிய கிரண், அந்தக் கல்லூரி மாணவிக்குத் தொடர்ந்து செல்போனில் பேசி தொல்லை கொடுத்துள்ளார். ஆனால், ஒருகட்டத்தில் அந்தக் கல்லூரி மாணவி பேராசிரியை தொடர்பைத் துண்டித்துள்ளார்.

ஆனால், அதன்பின் 15 வகையான செல்போன் எண்களில் கல்லூரி மாணவியைத் தொடர்பு கொண்டு கிரண் பேசியுள்ளார். இந்நிலையில், மும்பையில் போலீஸ் கான்ஸ்டபிளாக இருக்கும் ஆனந்த் முந்தே என்பவர் உதவியுடன் அந்தக் கல்லூரி மாணவியைக் கடத்தி மும்பைக்குக் கொண்டுவர முடிவு செய்தனர்.

இதன்படி, கிரணும் கான்ஸ்டபிளும் இந்தூரில் உள்ள பிப்லயா ஹானா என்ற பகுதியில் வசிக்கும் கல்லூரி மாணவியின் வீட்டுக்குக் கடந்த சனிக்கிழமை வந்தனர். அப்போது, அந்தக் கல்லூரி மாணவியைச் சந்தித்த கிரண், முன் ஜென்மத்தில் இருவரும் கணவன் - மனைவியாக இருந்து பிரிந்துவிட்டோம். இப்போது இருவரும் சேர்ந்து வாழலாம் எனக் கூறி அழைத்துள்ளார். ஆனால், அதற்கு அந்த மாணவி மறுக்கவே, கான்ஸ்டபிள் உதவியுடன் மாணவியைக் கடத்த கிரண் முயன்றார்.

அப்போது அந்தக் கல்லூரி மாணவி அலறி சத்தம் போடவே, உறவினர்கள் வந்து அவரை மீட்டனர். மேலும், பேராசிரியை கிரண், கான்ஸ்டபிள் ஆனந்த் முந்தே இருவரையும் போலீஸில் ஒப்படைத்தனர். இருவரும் போலீஸ் நிலையம் அழைத்து வரப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு, இருவர் மீதும் கடத்தல், அத்துமீறி நுழைதல் உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மும்பை போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளோம். கடத்தலின் பின்புலம் ஏதேனும் இருக்கிறதா என்பது குறித்து விசாரிக்கிறோம். இவ்வாறு அந்த போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

இதற்கிடையே பேராசிரியை கிரண், கான்ஸ்டபிள் முந்தே இருவரும் இந்தூர் நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை செப்.11 வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x