Published : 11 Sep 2018 05:19 PM
Last Updated : 11 Sep 2018 05:19 PM

யுபிஎஸ்சி இணையதளத்தை முடக்கிய ஹேக்கர்கள்: கார்ட்டூன் வெளியிட்டு கிண்டல்

மத்திய அரசு தேர்வாணையத்தின் (யுபிஎஸ்சி) அதிகாரபூர்வ இணையதளத்தை நேற்று இரவில் இருந்து ஹேக்கர்கள் திடீரென முடக்கினார்கள்.

இதனால், யுபிஎஸ்சி இணையதளம் பல மணிநேரம் செயல்படவில்லை. அதன் பிறகு மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது.

மத்திய அரசின் பல்வேறு பணிகள், ஐபிஎஸ், ஐஏஎஸ் உள்ளிட்ட பணிகளுக்கான தேர்வு தேதி, முடிவுகள், வெளியீடு , அறிவிப்புகள் உள்ளிட்டவை யுபிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று இரவு திடீரென ஹேக்கர்கள் யுபிஎஸ்சி இணைதளத்தை திடீரென்று முடக்கினார்கள்.

யுபிஎஸ்சி இணையதளத்தில் ஜப்பானில் வெளிவரும் பிரபல கார்ட்டூனான டோரிமான் பொம்மை படத்தை வெளியிட்டு ஹேக்கர்கள் முடக்கினார்கள். டோரிமான், பிக் அப்தி கால் என்ற வாசகமும், ஐ.எம். ஸ்டுபிட் என்ற வார்த்தையும் எழுதப்பட்டு இருந்தது.

இரவு நேரத்தில் யுபிஎஸ்சி இணையதளத்துக்கு வந்த பலரும் ஹேக்கிங் செய்யப்பட்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதன்பின் அந்தப் படத்தையும் பலர் ஸ்கிரீன் ஷாட் எடுத்து ட்விட்டரில் பகிர்ந்தனர். ஏறக்குறைய பல மணிநேரம் யுபிஎஸ்சி இணையதளம் முடக்கப்பட்டு இன்று காலையில் சரி செய்யப்பட்டு வழக்கம்போல் செயல்பாட்டுக்கு வந்தது.

மத்திய அரசின் இணையதளங்கள் ஹேக்கிங் செய்யப்படுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன் உச்ச நீதிமன்றத்தின் இணையதளம் கடந்த ஏப்ரல் மாதம் முடக்கப்பட்டு ஒரு மணிநேரத்தில் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது. பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் இணையதளத்தையும் சீனாவைச் சேர்ந்த ஹேக்கர்கள் முடக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x