Last Updated : 11 Sep, 2018 05:09 PM

 

Published : 11 Sep 2018 05:09 PM
Last Updated : 11 Sep 2018 05:09 PM

அரபிக் கடலில் தத்தளித்த இளைஞரை நீந்திச் சென்று காப்பாற்றிய கடற்படை வீரர்கள்

அரபிக் கடலில் தத்தளித்தபடி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தவரை மூன்று கடற்படை வீரர்கள் காப்பாற்றிய சம்பவம் மும்பையில் மெரைன் டிரைவ் பகுதி அருகே நேற்று முன்தினம் இரவு நடந்துள்ளது.

மெரைன் டிரைவ் அருகே ஞாயிறு அன்று இரவு பொதுமக்கள் சிலர் கும்பலாகக் கூடியிருப்பது அறிந்து கடற்படை வீரர்கள் சிலர் அங்கு வந்துள்ளனர். அப்போது இளைஞர் ஒருவர் கடலில் மூழ்குவதைக் கண்டனர். உடனே மும்பை கடற்படை வீரர்கள் கடலில் நீந்திச் சென்று அவரைக் காப்பாற்றியுள்ளனர்.

இதுகுறித்து கடற்படை வீரர்கள் கூறும்போது, ''நாங்கள் அங்கு சென்றபோது கடற்கரையிலிருந்து 150 மீட்டர் தொலைவில் இளைஞர் ஒருவர் கடலில் தத்தளிப்பதை அறிந்தோம்.  அவரது உபகரணங்கள் செயலிழந்த நிலையில் கடலில் தனது சமநிலையைத் தக்கவைக்க அவர் முயன்றுள்ளார்.  ஆனால் அதற்கு அவர் மிகவும் போராடுவது தெரிந்தது. கிட்டத்தட்ட அவர் மூழ்கிக் கொண்டிருந்தார்.

ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் உடனே கடலில் குதித்து அவர் தத்தளிக்கும் இடத்தை நோக்கி நீந்திச் சென்றோம். அங்கிருந்து அவரைக் கரைக்கு இழுத்து வந்தோம். கரைக்கு வருவதற்குள் அவர் நினைவிழந்துவிட்டார்.

உடனடியாக அவருக்குச் சீரான மூச்சு வருவதற்காக சிபிஆர் எனப்படும்  கைகளாலேயே மார்பகத்தை தேய்த்து அளிக்கப்படும் அவசர செயல்முறை சிகிச்சையைச் செய்தோம். சிறிது நேரத்தில் அவர் நினைவு திரும்பினார். பின்னர் அவரை காவல்துறையிடம் ஒப்படைத்தோம்'' என்று கடற்படை வீரர்கள் தெரிவித்தனர்.

இளைஞரைக் காப்பாற்றியவர்கள் பற்றிய விவரத்தை இந்திய பாதுகாப்புத் துறை அங்கிருந்தவர்களிடம் கேட்டறிய முயன்றது.

பாராட்டு

அப்போது ஆகாஷ், தனஞ்செய் மற்றும் விஸ்வகர்மா ஆகிய இம்மூவரும்தான் கடலில் தத்தளித்த இளைஞரைக் காப்பாற்றிய வீரர்கள் என்பது தெரியவந்தது.

''கடற்படை வீரர்கள் மூவரும் தன்னலமற்ற தங்கள் துணிச்சலான உடனடிச் செயல் மூலம் இந்திய கடற்படையின் பாரம்பரியத்தை அவர்கள் காப்பாற்றியுள்ளனர்'' என்று பாதுகாப்புத் துறை பாராட்டு தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x