Published : 11 Sep 2018 04:04 PM
Last Updated : 11 Sep 2018 04:04 PM

திருடிய தங்க டிபன் பாக்ஸில் ஆசை தீர சாப்பாடு: நிஜாம் மியூசிய திருடர்கள் சிக்கினர்

ஹைதராபாத் நிஜாம் அருங்காட்சியகத்தில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்க டிபன் பாக்ஸை திருடிய திருடர்கள், தினந்தோறும் ஆசை தீர அதில் வைத்து உணவு சாப்பிட்டுள்ள தகவல் வெளியாகியுள்து.

ஹைதராபாத் பாத்தபஸ்தி பகுதியில் நிஜாம் அருங்காட்சியகம் உள் ளது. இங்கு, நிஜாம் மன்னர்கள் பயன்படுத்திய தங்க சிம்மாசனம், வைர, வைடூரிய ஆபரணங்கள், தங்கம், வைரங்களால் வடிவமைக்கப்பட்ட டிபன் பாக்ஸ், நவரத்தின கற்களால் உருவாக்கப்பட்ட குவளைகள், தந்தங்களால் ஆன பல ஆயுதங்கள் போன்ற விலையுயர்ந்த பல்வேறு பொருட்கள், பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.

இந்த அருங்காட்சியகத்தை சுற்றிலும் சுமார் 15 மீட்டர் உயர சுற்றுச்சுவர் உள்ளது. மேலும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. காலை 3 பேர், இரவில் 5 பேர் என தினமும் 8 காவலர்கள் அருங்காட்சியகத்தில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த அருங்காட்சியகத்தில் இருந்து சில தினங்களுக்கு முன், தங்க டிபன் பாக்ஸ், நவரத்தின கற்கள் பதிக்கப்பட்ட குவளை மற்றும் கிண்ணம், மிக அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய தங்க ஸ்பூன் போன்ற பொருட்கள் மாயமானது.

அருங்காட்சியகத்தின் மாடியில் உள்ள கண்ணாடி ஜன் னலை உடைத்து, பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றிருப் பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் அருங்காட்சியகத்தில் இருந்து தங்க டிபன் பாக்ஸ் உள்ளிட்வற்றை திருடிச் சென்ற இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து திருடப்பட்ட பொருட்களையும் மீட்டுள்ளனர்.

இதுகுறித்து ஹைதரபாத் காவல் ஆணையர் அஞ்சனி குமார் கூறியதாவது:

‘‘நிஜாம் அருங்காட்சியகத்தில் இருந்து தங்கத்திலான பொருட்களை திருடிய வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராஜேந்திர நகர் பகுதியைச் சேர்ந்த முகமது கவுஸ் பாஷா (வயது 23), முகமது முபின் (வயது 24) இருவரும் நண்பர்கள். வெல்டிங் தொழில் செய்து வந்த இவர்கள் இருவரும் அருங்காட்சியகத்துக்கு முன்கூட்டியே வந்து சென்றுள்ளனர்.

அருக்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள சிசிடி கேமராவில் காட்சிகள் பதிவாகாமல் தந்திரமாக திருடியுள்ளனர். வென்டிலேட்டர் வழியாக உள்ளே நுழைந்து கொள்ளையடித்துள்ளனர். ஆனால் ஒரு கேமராவில் அவர்களது உருவம் பதிவாகியுள்ளது.

தங்க டிபன் பாக்ஸ், நவரத்தின கற்கள் பதிக்கப்பட்ட குவளை மற்றும் கிண்ணம், மிக அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய தங்க ஸ்பூன் ஆகியவற்றை எடுத்துச் சென்றுள்ளளனர். தங்கத்தால் ஆன உறையுடன் கூடிய குரான் புத்தகத்தையும் எடுத்துச் செல்ல திட்டமிட்டுள்ளனர். ஆனால் அதிகாலை வேளையில் திருடியபோது அருகில் இருந்த பள்ளி வாசலில் இருந்து பாங்கு ஓதும் சத்தம் கேட்டதால் மனதை மாற்றிக் கொண்டு வைத்து விட்டு சென்றுள்ளனர்.

அருங்காட்சியகத்தில் திருடிய விலை உயர்ந்த பொருட்களை எடுத்துக் கொண்டு மும்பை சென்றுள்ளனர். அங்கு வசதியான ஹோட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளனர். தங்க டிபன் பாக்ஸ் மிக விலை உயர்ந்தது என்பதால், அதனை விற்பனை செய்வதற்கு ஏற்ற நபர்கள் கிடைக்கவில்லை.

இதனால் தங்க டிபன் பாக்ஸில் உணவு வைத்து சாப்பிட்டு தங்கள் ஆசையை பூர்த்தி செய்துள்ளனர். நிஜாம் கூட தினந்தோறும் தங்க டிபன் பாக்ஸில் சாப்பிட்டிருக்க மாட்டார். ஆனால் இவர்களில் ஒருவர் தினந்தோறும் தங்க டிபன் பாக்ஸில் உணவு சாப்பிட்டுள்ளார். எவ்வளவோ முயன்றும் பல கோடி ரூபாய் மதிப்பிலான டிபன் பாக்ஸை விற்பனை செய்ய முடியாததால் மீண்டும் ஹைதராபாத் திரும்பியுள்ளனர்’’ என காவல்துறை ஆணையர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x