Published : 11 Sep 2018 02:42 PM
Last Updated : 11 Sep 2018 02:42 PM

கேரள எம்.பி.க்களை சந்திக்க பிரதமர் மோடி மறுப்பு? - ஜனநாயக விரோதம் என காங்கிரஸ் சாடல்

கேரள மழை, வெள்ள பாதிப்பு தொடர்பாக அம்மாநில எம்.பி.க்களை சந்தித்து பேசுவதற்கு பிரதமர் மோடி மறுத்து விட்டதாக காங்கிரஸ் புகார் தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி ஜனநாயக விரோதமாக செயல்படுவதாக அக்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து கேரள மாநிலத்தில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு மழை கொட்டித் தீர்த்தது. லட்சக்கணக்கான மக்கள் வீடு, உடைமைகளை இழந்து அரசின் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

தொடர்மழையால், மாநிலத்தில் உள்ள பெரும்பாலான அணைகள் நிரம்பித் திறக்கப்பட்டன. இதனால், அனைத்து ஆறுகளிலும் வெள்ள நீர் ஆபத்தான கட்டத்தைத் தாண்டியதால் பல ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.

இதனால் சாலைகள், பாலங்கள், வீடுகள் என அனைத்தையுமே வெள்ள நீர் சூழ்ந்து லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பாதிப்புகளை சரி செய்து மீண்டும் கேரளாவை பழைய நிலைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கேரள மழை, வெள்ள பாதிப்பு தொடர்பாக பிரதமர் மோடியை சந்தித்து பேச அம்மாநில அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் முடிவு செய்தனர். முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே அந்தோணி தலைமையில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளின் எம்.பி.க்கள் அடங்கிய குழுவினர் பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்கும்படி கோரினர். ஆனால் அவர்களது கோரிக்கையை பிரதமர் அலுவலம் நிராகரித்து விட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஆலப்புழா தொகுதி எம்.பி.யும், காங்கிரஸ் பொதுச்செயலாளருமான கே.சி. வேணுகோபால் கூறியதாவது:

கேரள எம்.பி.க்கள் பிரதமர் மோடியை சந்திக்க நேரம் ஒதுக்கும்படி கோரி கடந்த மாதம் 27-ம் தேதி கடிதம் அனுப்பினோம். பிரதமர் அலுவலகத்தில் இருந்து திங்களன்று தொலைபேசி அழைப்பு வந்தது. கோரிக்கையை ஏற்று மனுவை உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு அனுப்பியுள்ளதாகவும், அவரை சந்திக்குமாறு தெரிவிக்கப்பட்டது.

அமைச்சர் தோமரை நாங்கள் ஏற்கெனவே சந்தித்து விட்டோம். அமைச்சர்களை மட்டும் சந்திப்பதால் எந்த பயனும் இல்லை. மக்கள் பிரதிநிதிகள் பிரதமரை சந்திப்பது ஜனநாயக உரிமை. ஆனால் அதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. பிரதமர் மோடி ஜனநாயக விரோதமாக செயல்படுகிறார். வெளிநாட்டு நிதியை கேரளா பெறுவதற்கு ஏற்ப விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட வேண்டும்’’ என வேணுகோபால் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x