Last Updated : 11 Sep, 2018 02:26 PM

 

Published : 11 Sep 2018 02:26 PM
Last Updated : 11 Sep 2018 02:26 PM

தரமான சாலையும் மனித உரிமைதான்- மாவட்ட ஆட்சியருக்கு தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவு: அலைக்கழிப்புக்கு ஆளான முதியவருக்கு கிடைத்த தீர்வு

தரமான சாலை அமைக்கக் கோரி ஓய்வுபெற்ற அரசு ஊழியர் அளித்த புகாரை ஏற்று தேசிய மனிதஉரிமைகள் ஆணையம், மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் திருப்பதி நாளந்தா நகரைச் சேர்ந்தவர் பந்தலா ராஜா ரெட்டி (வயது 64). ரயில்வே துறையில் டிராபிக் பிரிவில் பணியாற்றிய இவர் கடந்த 2014-ம் ஆண்டு ஓய்வு பெற்றார். தற்போது குடும்பத்துடன் நாளாந்தா நகரின் கடைசித் தெருவில், கடைசி வீட்டில் வசித்து வருகிறார். ராஜா ரெட்டியின் வீட்டுக்கு வரும் தெருவில் முறையான சாலை இல்லாததால் குண்டும், குழியுமாக இருந்தது.

இதையடுத்து புதிதாக சாலை அமைக்கக் கோரி கடந்த 2 ஆண்டுகளாக அதிகாரிகளிடம் வாய்மொழியாக ராஜா ரெட்டி கோரிக்கை விடுத்து வந்தார். ஆனால், யாரும் செவிமெடுக்காததையடுத்து, கடந்த 2016, ஏப்ரல் மாதம் முதல் முறையாகப் புகார் கடிதம் எழுதி திருப்பதி நகர மேம்பாட்டு ஆணையத்துக்கு அனுப்பினார். அந்தக் கடிதத்தை திருப்பதி நகர மேம்பாட்டு ஆணையம், பஞ்சாயத்து ராஜ் துறைக்குத் திருப்பி அனுப்பியது. ஆனால், அதன்பின்பும் சாலை அமைக்கப்படவில்லை.

இதற்கிடையே பருவமழை நேரத்தில் ராஜா ரெட்டியும், அவரின் பேரனும் காரில் தங்களின் தெருவுக்குள் வந்தபோது, குழிக்குள் கார் சிக்கிக்கொண்டு எடுக்க முடியாமல் போனது. இந்தச் சம்பவத்தில் ராஜா ரெட்டி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகினார்.

அதன்பின் ஆந்திர முதல்வருக்கு தொலைபேசி மூலம் புகார் அளிக்கும் மீக்கோஸம் நிகழ்ச்சியில் கடந்த 2017, செப்டம்பர் மாதம் பேசினார் ராஜா ரெட்டி. அப்போது அவரின் புகாரை திருப்பதி நகராட்சிக்கு அதிகாரிகள் மாற்றிவிட்டனர். ஆனால், திருப்பதி நகராட்சியோ ராஜா ரெட்டி வாழும் பகுதி தங்கள் எல்லைக்குள் வராது என்றுபதில் அனுப்பினார்கள்.

அதன்பின் கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் 22-ம் தேதி மற்றும் நவம்பர் 15-ம் தேதி மாவட்ட ஆட்சியருக்கு இரு புகார் கடிதங்களை பதிவுத் தபாலில் எழுதி தங்கள் பகுதிக்குச் சாலை தேவை என்று ராஜா ரெட்டி தெரிவித்திருந்தார். அந்தக் கடிதம் மாவட்ட பஞ்சாயத்து அதிகாரிக்கு மாற்றப்பட்டது ஆனால், உள்ளூர் பஞ்சாயத்து செயலாளர், திருப்பதி கிராம மண்டல அதிகாரி ஆகியோரும் இது குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை.

பல்வேறு அதிகாரிகளுக்கும், அலுவலகங்களுக்கும் கடிதம் எழுதி ராஜா ரெட்டி பெரும் மன உளைச்சலுக்கும், வேதனைக்கும் ஆளாகினார். இறுதியாகக் கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் 19-ம் தேதியும், நினைவூட்டல் கடிதமாக நவம்பர் 24-ம் தேதியும் தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு ராஜா ரெட்டி கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில் தன்னுடைய பகுதிக்கு தரமான சாலை அமைக்கக் கோரியும், இதுவரை தான் சந்தித்த பிரச்சினைகளையும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து தேசிய மனித உரிமைகள் ஆணையம், ராஜா ரெட்டியின் புகாரை செவிமெடுத்துக் கேட்டு, திருப்பதி மாவட்ட ஆட்சியருக்கு 8 வாரங்களுக்குள் ராஜா ரெட்டி வசிக்கும் பகுதிக்குத் தரமான சாலை அமைக்கக் கடந்த பிப்ரவரி 26-ம் தேதி உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக கண்காணிக்க ஆந்திர மாநில மனித உரிமைகள் ஆணையத்துக்குக் கடந்த ஜூன் மாதம் 4-ம் தேதி உத்தரவு நகலையும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் அனுப்பி வைத்துள்ளது.

இது குறித்து ராஜா ரெட்டி கூறுகையில், ''தரமான சாலை அமைக்கக் கோரி நான் அளித்த புகாரை ஏற்று தேசிய மனித உரிமைகள் ஆணையம் மாவட்ட நிர்வாகத்துக்கு சாலை அமைக்க உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவு கடந்த பிப்ரவரி மாதம் பிறப்பிக்கப்பட்டு, ஜூன் 4-ம்தேதி மாநில மனித உரிமை ஆணையத்துக்கு நகல் கிடைத்துள்ளது என்பதை அறிந்தேன்.

எங்கள் பகுதிக்கு சாலை அமைக்கவில்லை என்று எந்த அதிகாரியும் இதுவரை என்னிடம் கேட்கவில்லை. இன்னும் சில அதிகாரிகள் ஏன் இன்னும் அதே தெருவில் வசிக்கிறீர்கள். சாலை அமைக்காவிட்டால் வேறு வீட்டுக்குச் செல்ல வேண்டியதுதானே என்று கேட்டனர். சில அதிகாரிகளோ உங்கள் செலவில் நீங்களே சாலை அமைத்துக் கொள்ளுங்கள். சொத்து வரியில் கழித்துக்கொள்ளலாம் என்றனர். இதனால் நடைமுறைக்குச் சாத்தியமாகுமா'' எனத் தெரிவித்தார்.

ஆனால், அடிப்படை உரிமைகள் பாதிக்கப்பட்டால் மட்டுமே தேசிய மனித உரிமைகள் நடவடிக்கை எடுத்து வந்த நிலையில், தரமான சாலையும் மனிதனுக்கு அவசியம், அதுவும் அடிப்படை உரிமையே என்பதை தங்களின் நடவடிக்கை மூலம் தேசிய மனித ஆணையம் உணர்த்தி இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x