Published : 11 Sep 2018 01:44 PM
Last Updated : 11 Sep 2018 01:44 PM

கேரள வெள்ளத்துக்கு முல்லைப் பெரியாறு அணை நீர் வெளியேற்றம் காரணமல்ல: மத்திய நீர் ஆணையம் அறிக்கை

 கேரள மாநிலத்தில் வெள்ளம் ஏற்பட்டு பெரும்பாலான மாவட்டங்கள் நீரில் மூழ்கியதற்குப் பெருமழைதான் காரணம், முல்லைப் பெரியாறு உள்ளிட்ட அணைகளில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீர் காரணமல்ல என்று மத்திய நீர் ஆணையம் (சிடபிள்யுசி) தெரிவித்துள்ளது.

கேரளாவில் கடந்த மாதம் 8-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை மாநிலம் முழுவதும் பெருமழை பெய்தது. இந்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 30க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை. 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வீடுகள், உடைமைகளை இழந்தனர். கடந்த சில வாரங்களாக மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளனர்.

இந்நிலையில், கேரளாவைச் சேர்ந்த ஒருவர் தொடர்ந்த பொதுநலன் மனுவில் முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தைக் குறைக்க வேண்டும் என்று கோரியிருந்தார். அது தொடர்பாக மனுத்தாக்கல் செய்த கேரள அரசு முல்லைப் பெரியாறு அணையில் இருந்து அதிகப்படியான நீர் வெளியேற்றப்பட்டதே வெள்ளத்துக்குக் காரணம் எனத் தெரிவித்திருந்தது. இதே குற்றச்சாட்டை முதல்வர் பினராயி விஜயனும் தெரிவித்திருந்தார்.

ஆனால், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்தக் குற்றச்சாட்டை மறுத்தார். முல்லைப் பெரியாறு அணையில் இருந்து நீர் திறக்கப்படும் முன் 3 முறை முறைப்படி கேரள அரசுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதிகப்படியான நீர் திறக்கப்படவில்லை என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கேரளாவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதற்கான காரணத்தை அறிவதற்காக மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் சார்பில் நீர் வள ஆணையத்தின் சிறப்பு வல்லுநர்கள் குழு அனுப்பப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது.

மத்திய நீர் ஆணையத்தின் நீர்வள ஆய்வு அமைப்பின் இயக்குநர் என்.என்.ராய் தலைமையில் அந்த அறிக்கை தயாரிக்கப்பட்டு, கேரள அரசுக்கும், மத்திய அரசுக்கும் நேற்று தாக்கல் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

இந்த அறிக்கை குறித்து மத்திய நீர் ஆணையத்தின் நீர்வள ஆய்வு அமைப்பின் இயக்குநர் என்.என்.ராய் 'தி இந்து'விடம் (ஆங்கிலம்) தொலைபேசியில் கூறியதாவது:

''கேரளாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் 8, 9-ம் தேதிகள், மற்றும் 15-ம் தேதி முதல் 17-ம் தேதிவரை காற்றுடன் கூடிய பெருமழை பெய்தது. இதனால் பெரியாறு, பம்பை, சாலக்குடி, பாரதப்புழா ஆகிய ஆறுகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

கடந்த மாதம் 15 முதல் 17-ம் தேதி வரை பெய்த மழை என்பது கடந்த 1924-ம்ஆண்டு ஜூலை 16 முதல் 18-ம் தேதிவரை பெய்த மழையைப் போல் இருந்தது.

இடுக்கி அணையில் ஏற்கெனவே 75 சதவீதம் நீர் நிரம்பி இருந்த நிலையில், கடந்த மாதம் 15 முதல் 17 வரை பெய்த மழையில் 60 மில்லியன் கன அடி தண்ணீரையும் சேமித்துக்கொண்டது. அந்த 3 நாட்களில் மட்டும் 200 மில்லி மீட்டருக்கும் அதிகமாக மழை பெய்தது.

அணைகளுக்கு எந்த அளவு நீர் வந்ததோ அந்த அளவு நீர் அப்படியே வெளியேற்றப்பட்டது. கூடுதலாகவும் அணைகளில் இருந்து நீர் ஏதும் திறக்கப்படவில்லை.

ஜூன் , ஜூலை மாதங்களில் பெய்த மழையால் கேரள மாநிலத்தில் உள்ள பெரும்பாலான அணைகள் நிரம்பும் நிலையில் இருந்தன. இதனால், ஆகஸ்ட் மாதத்தில் பெய்த மழையைச் சேமித்து வைப்பதற்கான எந்த சூழலும் அணைக்கு இல்லை. இதனால், ஆகஸ்ட் மாதத்தில் பெய்த மழை நீரை இருப்பு வைக்க முடியாமல் நீர் அப்படியே அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்டது.

அணையில் இருந்து அதிகாரிகளால் மிகுந்த கட்டுக்கோப்புடன் படிப்படியாகவே நீர் வெளியேற்றப்பட்டது. மழை நீர் அதிகமாக வந்தது என்பதற்காக அதிகமான நீரையும் அதிகாரிகள் வெளியேற்றவில்லை.

ஆதலால் முல்லைப் பெரியாறு, இடுக்கி அணை உள்ளிட்ட மாநில அணைகளில் இருந்து திறந்தவிடப்பட்ட நீர்தான் வெள்ளப் பெருக்குக்குக் காரணம் என்று கூற முடியாது.

மேலும், அடுத்து வரும் காலங்களில் ஆற்றுப்பகுதிகளிலும், அணையைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மக்கள் வசிப்பிடங்கள் குறித்து கேரள ஆய்வு மறுஆய்வு செய்ய வேண்டும். அங்குள்ள நீர் செல்லும் பகுதிகளில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொட்டப்பள்ளி, தண்ணீர்முக்கொம் ஆகிய பகுதிகளில் இருந்து வெம்பநாடு ஏரிக்கு நீர் செல்லும் பகுதிகளை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிவரும் காலங்களில் தண்ணீரை அதிகமாகச் சேமித்து வைக்கும் விதமான நீர் இருப்பு ஆதாரங்களை உருவாக்குவது குறித்தும் கேரள அரசு ஆலோசிக்கலாம்''.

இவ்வாறு என்.என் ராய் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x